ஒரு காலத்தில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், அரசியல் ரீதியான படங்களை இயக்கி வந்தார். அவை வசூலில் வெற்றி பெற்றதோடு, பரபரப்பையும் ஏற்படுத்தின.
எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில், 1987ம் ஆண்டு இவரது இயக்கத்தில் நீதிக்கு தண்டனை என்ற படம் வெளியானது. இப்படத்துக்கு கதை வசனம் எழுதியவர், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.கருணாநிதி.
எம்.ஜி.ஆர். தலைமையிலான அரசை கடுமையாக விமர்சித்து உருவான படம் இது.
படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்க, சந்திரசேகருக்கு எம்.ஜி.ஆரிடமிருந்து அழைப்பு.
குறிப்பிட்ட நேரத்துக்கு எஸ்.ஏ.சி. சென்றுவிட்டார். ஆனால் எம்.ஜி.ஆர். காக்கவைத்துவிட்டார்.
நேரம் ஆக நேரம் ஆக சந்திரசேகருக்கு ஒருவித பயம் ஏற்பட்டுவிட்டது.
இந்த நிலையில் எம்.ஜி.ஆர் அழைக்க.. அறையினுள் எஸ்.ஏ.சி. சென்றார்.
நீதிக்கு தண்டனை படம் குறித்து எதுவுமே கேட்காத எம்.ஜி.ஆர், “என்னுடைய எம்ஜிஆர் பிக்சர்ஸ் மூலம் நிறைய படங்களை தயாரித்து இருக்கிறேன். ஆனால் இப்பொழுது எந்த படமும் எடுக்கவில்லை. நீங்கள் வருடத்திற்கு இரண்டு படங்கள் இயக்க முடியுமா” என்று கேட்டிருக்கிறார். எஸ்.ஏ.சி.க்கு. ஆச்சரியம்.
இது குறித்து பழைய நினைவுகளை சமீபத்தில் பகிர்ந்துகொண்டார் எஸ்.ஏ.சி.
அப்போது, “எம்.ஜி.ஆரை நினைத்து வியந்தேன். அவரை விமர்சித்து படம் எடுத்திருக்கோம். ஏதோ மிரட்டுவார் என எண்ணி வந்த எனககு ஆச்சரியம். எம்ஜிஆர் எப்பொழுது திறமையானவர்களை மிகவும் மதிக்க கூடியவர்” என்று பிரமிப்பாக தெரிவித்தார் எஸ்.ஏ.சி.