‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் இயக்குநர் எஸ்.யு. அருண்குமார், நடிகர் விக்ரம், எஸ்.ஜே. சூர்யா, துஷாரா விஜயன் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

இந்த விழாவில் பேசிய எஸ்.ஜே. சூர்யா, “இந்த படம் ஒரு சுவாரஸ்யமான மற்றும் தனித்துவமுள்ள கதையை மையமாகக் கொண்டது. இது முழுமையாக அருண்குமாரின் பாணியில் உருவான படம். அவர் மிகுந்த மார்ட்டின் ஸ்கார்சிசி ரசிகர். இந்த படம் ஆங்கில தரத்தில், ஆனால் நம் தமிழ் சூழலில் எடுக்கப்பட்ட ஒரு சிறப்பான தமிழ் படம். இதில் நடித்த அனுபவம் எனக்குப் பெரிதும் மகிழ்ச்சியளித்தது.
இப்படத்தில் நான் நடித்த ஒரு காட்சியில், வழக்கமான என் நடிப்பு பாணியில் நடித்தேன். அனைவரும் கைதட்டினர். இயக்குநரும் பாராட்டுவார் என நினைத்தேன். ஆனால் அவர், “நீங்க நல்லா நடிச்சீங்க. ஆனா இதை இன்னும் வேற மாதிரிதான் பண்ணணும்” என்றார். அந்த காட்சியில் ஒரு வித்தியாசமான எஸ்.ஜே. சூர்யாவை பார்ப்பீர்கள்.
நான் எப்போதும் இயக்குநர்களிடம் என்னை முழுமையாக ஒப்படைக்கிறேன். அதனால்தான் இந்த பயணம் ஒரு குணச்சித்திர நடிகராகவும், வில்லனாகவும் தொடர்ந்துவருகிறது. கதையின் மையக் கதாபாத்திரம் நாயகன் அல்லது எதிர்நாயகன் என்றால் கூட, அது ஒரு நாயகன் தான். இப்படம் ஒரு தரமான மற்றும் முத்திரையுள்ள முயற்சி. நாம்தான் பேச வேண்டாம், படம் தான் பேசணும்.இயக்குநர் வசந்த் சார் எப்போதும் பழைய படங்களை பார்த்துவிட்டு வரச் சொல்வார். அந்தப்படிகளைப் பார்த்தபோது, எனக்கு சாவித்ரி அம்மா மிகவும் பிடித்தமாக இருந்தார். அந்த அளவிற்கு துஷாரா விஜயனும் ஒரு நாள் உயர்ந்த இடத்தை அடைய வேண்டும். அவள் ‘அருண்குமாரின் நடிகை’ என சொல்லக்கூடிய அளவிற்கு நடித்திருக்கிறார். அருண்குமார் ஒரு இயக்குநர்தான் இல்ல, நல்ல மனிதரும் கூட. அவர் மிகவும் நேர்மையானவர்” என்று கூறினார்.