மறைந்த நடிகர் ஜெய்சங்கர், கலைத்துறை மீது தீராக் காதல் கொண்டவராக இருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அதை உறுதிப்படுத்தும் சம்பவம் ஒன்றை பத்திரிகையாளர் ராஜூ பகிர்ந்துகொண்டார்.
“ஜெய்சங்கர் எப்போது, படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக வந்து விடுவார். அனைவரிடமும் எந்தவித ஈகோவும் இன்றி ஜாலியாக பேசுவார். உடன் பணியாற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களோடும் அமர்ந்து சாப்பிடுவார். ஒருமுறை படப்பிடிப்பு தளத்திற்கு அவர் வந்த பிறகு மழை வந்ததால் படப்பிடிப்பு கேன்சல் ஆனது. மழை நின்றவுடன் கிளம்பலாம் என அனைவரும் காத்திருந்தனர்.
ஒருவழியாக மழை விட்டது. அந்த இடம் முழுதும் சிறு வெள்ளம்போல் தண்ணீர் தேங்கி இருந்தது.‘நாளை படப்பிடிப்பை தொடரலாம்’ என அறிவிக்கப்பட எல்லோரும் புறப்பட தயாரானார்கள்.
ஜெய்சங்கரோ, ‘வாங்க.. படப்பிடிப்பை தொடருவோம்’ என்று கூறி, தேங்கிய மழை நீரை ஒரு வாளியை எடுத்து தண்ணீரை இரைத்து ஊற்றினார்.
இதைப் பார்த்து மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் ஒரு ஹீரோவே, இப்படி களத்தில் இறங்கி விட்டார் நாம் அதைப் பார்த்துக் கொண்டிருப்பதா என்று கூறி அங்கிருந்த தண்ணீரை இரைத்து வெளியில் ஊற்றினர். இதனால் நின்றுபோன படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடைபெற்றது.