2017ஆம் ஆண்டு, சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் ஷாலினி பாண்டே. இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ‘மஹாநதி’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழில் 2019ஆம் ஆண்டு ஜி.வி. பிரகாஷ் நடித்த ‘100% காதல்’ படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து, பல இந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். சமீபத்தில், ஒரு நேர்காணலில், திரைத்துறையில் அவர் எதிர்கொண்ட கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில், “அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தை முடித்தவுடன், நான் ஒரு தெலுங்கு படத்தில் நடித்தேன். அப்போது எனக்கு 23 வயதாகும். அந்த படத்தின் இயக்குநர், நான் கேரவனில் உடை மாற்றிக்கொண்டு இருக்கும்போது, கதவை தட்டாமலே உள்ளே நுழைந்தார். எனக்கு எது செய்வது என்று தெரியாமல், அவரை கண்மூடித்தனமாக திட்டிவிட்டேன். அதன் பிறகு, திரைத்துறையில் யாருக்கு எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் குறித்தும், எனக்கு என்ன பாதுகாப்பு தேவை என்பதையும் புரிந்துகொண்டேன். அதை நானே கற்றுக்கொண்டேன். நன்றாக நடந்துகொள்ளும் ஆண்களுடனும், மோசமானவர்களுடனும் நான் பணியாற்றியுள்ளேன்” என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘டப்பா கார்டல்’ வெப் தொடரில் நடித்துள்ளார். அடுத்ததாக, தனுஷ் இயக்கி, நடித்த ‘இட்லிக் கடை’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.