சமீபத்தில் தெலுங்கில் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவியில் ‘தண்டேல்’ என்ற திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தை இயக்குனர் சந்து மொண்டேட்டி இயக்கியுள்ளார். படம் ஒரு மிதமான வரவேற்பைப் பெற்றதோடு, நாக சைதன்யாவுக்கு மீண்டும் திரையுலகில் ஒரு உறுதியான கம்பேக் படமாக அமைந்துள்ளது.
இந்நிலையில், இணையத்தில் இந்தப் படம் லீக் ஆனது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, ஆந்திர மாநிலத்திலிருந்து சென்னை நோக்கிப் பயணித்த ஆந்திர அரசு போக்குவரத்து கழக பேருந்தில், இப்படம் அங்கீகாரம் இன்றி திரையிடப்பட்டது என்பதும் பெரும் அதிர்ச்சியாகியுள்ளது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000157408-1024x576.jpg)
இதுகுறித்து, இப்படத்தின் தயாரிப்பாளர் பன்னி வாஸ், ஆந்திர அரசு போக்குவரத்து கழகத்தின் தலைவருக்கு புகார் அளித்துள்ளார். அதில், “அரசுப் பேருந்தில் ‘தண்டேல்’ திரைப்படம் ஒளிபரப்பப்பட்டதற்காக கடும் அதிர்ச்சியடைந்துள்ளேன். இது ஒரு முறையற்ற செயலாக மட்டுமின்றி, மன்னிக்க முடியாத அராஜக செயலாகும். மேலும், இப்படத்தை உருவாக்கும் பணியில் கடுமையாக உழைத்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்புக்கு அவமரியாதை அளிக்கும் செயல் இது. தயவுசெய்து, இதற்கு காரணமானவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.