வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ படம் பொங்கலுக்கு வெளியாக இருப்பது அனைவரும் அறிந்த செய்தி. இப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றதும் தெரியும்.
இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும், வில்லன்களாக சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன் ஆகியோர் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் ‘தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியுள்ளதாக இயக்குநரும் நடிகருமான மனோபாலா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தளபதி 67 படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. விஜய் மற்றும் லோகேஷை சந்தித்தேன். அதே எனர்ஜியுடனும் முழு முனைப்போடும் இருக்கிறார்கள். முதல் நாளே தூளாக இருந்தது” எனக் குறிப்பிட்டு உள்ளார்.
‘தளபதி 67’ படத்தைப் பற்றி எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் படக்குழுவிடம் இருந்து வெளியாகாத நிலையில் மனோபாலா தற்போது படத்தைப் பற்றி கூறியிருப்பது ரசிகர்களுக்கு ஆனந்த அதிர்ச்சியை அளித்துள்ளது.