Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

“டாஸ்மாக் கடை கூடுது;தியேட்டர்கள் குறையுது” – இயக்குநர் பேரரசுவின் வருத்தம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஸ்ரீஅங்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், பிரசாந்த் சீனிவாசன், காயத்ரி ரீமா, பிரசாத் மற்றும் பலர் நடிப்பில் இயக்குநர் சுந்தர வடிவேல் எழுதி, இயக்கியிருக்கும் படம் ‘ரீ ‘.

ஒரு சைக்கோ, திரில்லராக உருவாக்கி இருக்கும் இப்படத்தின் அறிமுக விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இயக்குநர் பேரரசு பேசும்போது, “ஒவ்வொரு காலகட்டத்திலும் சினிமாவில் சில வார்த்தைகள் பேசப்படும். கறுப்பு வெள்ளை படங்கள் வந்தபோது அபூர்வமாக கலர் படங்கள் வந்தன. அப்படி வரும்போது போஸ்டர்களில் ஈஸ்ட்மேன் கலர் திரைப்படம் என்று போடுவார்கள்.  பிறகு சினிமாஸ்கோப் வந்தது. பல படங்களில் ஏதாவது ஒன்றுதான் சினிமாஸ்கோப்பாக இருக்கும். அப்போது இது சினிமா ஸ்கோப் படம் என்று போடுவார்கள்.

அது போல இன்று  ‘தியேட்டர் ஆடியன்ஸ்’ என்ற  வார்த்தை சொல்லப்படுகிறது. இந்த வார்த்தை சினிமாவுக்கு ஒரு சாபம். சினிமா எடுப்பதே தியேட்டர்களுக்கு வருவதற்குத்தானே? அது என்ன தியேட்டர் ஆடியன்ஸ்..?  அவர்கள் கோணத்தில் அவர்கள் சொல்வது சரியாக இருக்கலாம். ஆனால் ஒரு சினிமா மீது ஆர்வம் உள்ள சினிமாவை நம்பி இருக்கும் என் போன்றவர்களுக்கு அது அவலமாகத் தெரிகிறது. வருத்தப்பட வைக்கிறது.

இன்று மக்கள் திரையரங்கிற்கு வருவதற்குத் தயங்குகிறார்கள். சின்ன படங்கள் ஓடுவதில்லை. சிறிய படங்களுக்கு, சிறிய முதலீட்டு படங்களுக்குத் திரையரங்குகள் கிடைப்பதில்லை.கேட்டால் மக்கள் வரவில்லை என்கிறார்கள். பெரிய கதாநாயகர்களின் படங்களுக்கு  மட்டுமே கிடைக்கின்றன.

இந்த சினிமாவை காப்பாற்றுபவர்கள், பெரிய ஹீரோக்களும் பேய்களும்தான் என்று சொல்லத் தோன்றுகிறது. இன்று பெரிய ஹீரோக்களுக்கும், பேய்களுக்கும்தான் சினிமாவில் மதிப்பு இருக்கிறது.

இன்று மக்கள் திரையரங்குகளுக்கு வருவதில்லை. கமல், ரஜினி, விஜய், அஜித் போன்ற பெரிய ஹீரோக்களின் படங்களாக இருந்தால் வருகிறார்கள். அல்லது ‘பாகுபலி’, ‘கே.ஜி.எப்.’ போன்ற பிரம்மாண்டமான பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் படங்கள் என்றால் வருகிறார்கள். சிறிய படங்களுக்கு வருவதில்லை. 

அதிலும் ஒரு சின்ன ஆறுதல். சிறிய படங்களில் பேய்ப் படங்கள் ஓடுகின்றன. அதற்கு மட்டும் திரையரங்குகள் கிடைக்கின்றன. இப்படியான பேய்ப் படங்களுக்கு பிற மொழிகளில் விற்பனை மதிப்பு இருக்கிறது.

அந்த வகையில் இந்த ‘ரீ ‘படம் ஒரு பேய்ப் படமாக  உருவாக்கி இருக்கிறது. இப்படி இன்றைய சூழலையும் மக்களின் உணர்வையும் புரிந்து கொண்ட  அந்த ஒரு நம்பிக்கையில்தான் இந்தப் படத்தை சுந்தரவடிவேல் எடுத்துள்ளார்.

பெரிய கதாநாயகர்கள் படங்கள் வணிக ரீதியில் வெற்றி பெறலாம். ஆனால் தாத்தில் பேசப்படுபவை சிறிய படங்கள்தான்.  சிறு முதலீட்டுப் படங்களில்தான் நல்ல  படங்கள் வந்துள்ளன என்பதை மறந்துவிடக் கூடாது.

இப்போது ஏ சென்டர், பி சென்டர், சி சென்டர் என்பதெல்லாம் இல்லை. ஒரே சென்டர். ஏ சென்டர்தான். இப்படி இருக்கிறது நிலைமை. திரையரங்குங்களுக்கு மக்கள் வராததற்கு யார் காரணம்?

சினிமா டிக்கெட் விலைதான் காரணம் என்று சொல்வார்கள்.  ஆனால், அது தவறானது. சினிமா டிக்கெட் விலை ஒன்றும் அப்படி ஒன்றும் அதிகமாக இல்லை. ஆனால், ஒரு  குடும்பத்தோடு படம் பார்க்கச் சென்றால் திரைப்படத்துக்கான டிக்கெட் விலையைவிட அங்கு கேண்டீனில் விற்கப்படும் பாப்கார்ன் மூன்று மடங்கு விலை அதிகமாக இருக்கிறது. அதனால் செலவு அதிகமாகிறது.

அதனால் மக்கள் திரையரங்கிற்கு வருவதற்கு பயப்படுகிறார்கள். வாகனங்களின் பார்க்கிங் கட்டணங்கள் மிக அதிகம். இதையெல்லாம் நினைத்துக் கொண்டுதான் பயந்து, மக்கள் வரத் தயங்குகிறார்கள். சாதாரண 20 ரூபாய் பாப்கார்ன் 120 ரூபாய்க்கு விற்கிறார்கள். 20 ரூபாய் பாப்கார்னை இரு மடங்காக 40 ரூபாய்க்கு விற்றுக்  கொள்ளுங்கள் பரவாயில்லை. ஆனால், இவர்கள் 120 ரூபாய்க்கு விற்கிறார்கள். இது கொள்ளை  இல்லையா? இது  அரசாங்கத்தினுடைய அனுமதியுடன் கேண்டீனில் அடிக்கின்ற கொள்ளை என்றுதான் சொல்ல வேண்டும்.

அதேபோல் வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணம் சினிமா டிக்கெட்டைவிட அதிகமாக இருக்கிறது. இந்த விஷயத்தில் அரசு தலையிட்டு ஒரு வரையறை செய்யாவிட்டால் திரையரங்குகளுக்கு மக்கள் வர மாட்டார்கள்.  இது சம்பந்தமாக அரசு கட்டுப்படுத்தி முறைப்படுத்த வேண்டும்.

ஏனென்றால் சினிமா மூலம்  அரசுக்கு ஏகப்பட்ட வரிப் பணம் கிடைக்கிறது. மத்திய அரசுக்கும் சரி மாநில அரசுக்கும் சரி, இந்த வரி கிடைக்கிறது.

நம் நாட்டில் டாஸ்மாக் கடைகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. தெருவுக்கு ஒன்று இருந்த இடத்தில் இரண்டு டாஸ்மாக் கடைகள் வந்துவிட்டன. ஆனால் திரையரங்குகள் குறைந்து கொண்டே வருகின்றன. நான்கு  இருந்த இடத்தில் இரண்டுதான் இருக்கின்றன. என்ன காரணம்?  இரண்டின் மூலமும் அரசாங்கத்துக்கு வருமானம் வருகிறதுதானே..?

திரையரங்கில் இருந்து கேன்டீனில் அடிக்கப்படும் கொள்ளையை அரசு தடுத்தால் சினிமா மூலம் அரசுக்கு வரும் வருவாயும் பெருகும். அப்படிச் செய்தால்தான் மக்கள் திரையரங்கிற்கு வருவார்கள்.

மக்களைத் திரையரங்கு நோக்கி வரவழைக்கும் பொறுப்பு தயாரிப்பாளர்களுக்கு, நடிகர்களுக்கு, இயக்குநர்களுக்கு  மட்டுமல்ல அரசுக்கும் இருக்கிறது. எனவே  இதை ஒரு வேண்டுகோளாக நான் இந்த அரசிடம் வைக்கிறேன்.

திரையரங்கு கேண்டீன் கொள்ளைகளைக் கட்டுப்படுத்துங்கள். திரை உலகை வாழ வையுங்கள். மீண்டும் மக்களை திரையரங்குகளுக்கு வர வையுங்கள். அப்போது எல்லா படங்களும் வெற்றி பெறும்.

இந்தப் படத்தை ஒரு மனப் பிரச்சினை, மன நோயாளி பற்றிய கதையாக உருவாக்கி இருக்கிறார்கள். அடுத்தவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறவன்தான் மன நோயாளியாக இருப்பான். அப்படிப்பட்ட பிரச்சினையை இயக்குநர் சொல்லி இருக்கிறார் என்று நினைக்கிறேன். இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார்.

- Advertisement -

Read more

Local News