Wednesday, April 10, 2024

விமர்சனம் : தமிழ்க்குடிமகன்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

“நான் என்னவாக இருக்க வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும். இந்த சமுதாயம் அதை முடிவு செய்யக் கூடாது..!” என்று நினைத்த பட்டியல் இனத்தைச் சேர்ந்த சின்னசாமியால் அதனை சாதிக்க முடிந்ததா என்பதே இந்தப் படத்தின் கதை.

ஆண்டான் அடிமை சமூகத்தின் அடிப்படையில் காலம் காலமாகக் கைகட்டி சேவை செய்துவிட்ட இனத்தைச் சேர்ந்த சின்னசாமியாக வருகிறார் இயக்குனர் சேரன்.

இனியாவது கட்டிய கைகளை விடுவித்து சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்று விரும்புகிறார்.

அதற்காக கிராம அதிகாரி தேர்வெழுதப் புறப்படுகிறார். ஆனால் கைகட்டி சேவகம் பார்த்தவன் கால் நீட்டி உட்காருவதை ஆதிக்க சமூகம் கைகட்டி வேடிக்கை பார்க்குமா..? சேரன் தேர்வுக்கு கிளம்பும் நேரம் பார்த்து ஊரில் ஒரு சாவு விழுந்து விட, அதன் சடங்குகள் செய்ய நிர்ப்பந்திக்கப்படும் சேரனால் தேர்வு எழுத முடியாமல் போய்விடுகிறது – போக விடாமல் செய்து விடுகிறார்கள் என்பதே உண்மை.

தேர்வு எழுதும் வயதின் கடைசி கட்ட முயற்சியும் தோற்றுப் போக இனி தேர்வு எழுத முடியாது என்கிற சூழலில் தங்கையை மருத்துவராக்கிப் பார்க்க முடிவு செய்து அதற்காகப் படிக்க வைக்கிறார். அத்துடன் சொந்த தொழில் செய்ய, மாடுகளை வாங்கிப் பால் வியாபாரம் ஆரம்பிக்க, அவர் விற்கும் பாலும் தீண்டத் தகாததாக ஆகி விடுகிறது.

இந்நிலையில் ஆதிக்க சாதியைச் சேர்ந்த லால் மகனுக்கு சேரன் தங்கை தீப்ஷிகாவுடன் காதல் அரும்ப, விஷயம் கேள்விப்பட்ட லால் கட்டளைப்படி அவரது மருமகன் அருள்தாஸ், அவளை நையப் புடைக்கிறார். இந்த அழுத்தங்களின் காரணமாக சேரன் என்ன முடிவெடுத்தார் என்பதுதான் படத்தின் பிற்பகுதி.

காலம் காலமாக அடிமைச் சமூகமாகவே இருந்து விட்ட அவலத்துடன் அடுத்த தலைமுறையாவது அடுத்த அடியை எடுத்து வைக்க நினைக்கையில் அதற்கும் ஆதிக்க சக்திகள் முட்டுக்கட்டை போட, அதன் ஒட்டுமொத்த அழுத்தத்தையும் வெளிப்படுத்தி தாழ்த்தப்பட்ட சமூகத்தின் தனி ஒரு பிரதிநிதியாக இந்தப் படத்தில் வாழ்ந்திருக்கிறார் சேரன்.

ஊரே வாங்க மறுத்த பாலை என்ன செய்வது என்று தெரியாமல் கடவுள் தலைமேல் ஊற்றிவிட்டு மருகுவதுடன், ரத்தச் சகதியில் தங்கையைப் பார்த்த நிலையிலும் திருப்பி அடிக்க வாய்ப்பு இல்லாத கையறு நிலையிலும், என் அடையாளத்தை மறைத்துக் கொள்ள மாட்டேன் – சொந்த ஊரை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன் என்று அவர் காட்டும் பிடிவாதம் அழுத்தமானது.

அந்த அழுத்தம் காரணமாக அவர் எடுத்த ஒரு முடிவில் ஊரே அவர் எதிராக ஒன்றுபட்டு நிற்க என்ன ஆகப் போகிறதோ என்ற பதை பதைப்பு நமக்கு ஏற்படுகிறது.

அடித்தவனை திருப்பி அடி என்று பல படங்கள் வன்முறைப் பாதைக்கு பட்டியல் இனத்தவரை இட்டுச் சென்று கொண்டிருக்க, இன்றைக்கு சட்டம் அவர்களுக்கு சாதகமாக இருப்பதை வலியுறுத்தி முன்னேறச் சொல்வதில் இந்தப் படம் முன்னுதாரணமாக இருக்கிறது.

இந்த நல்ல செய்தியைச் சொன்னதற்காக இயக்குனர் இசக்கி கார்வண்ணனைப் பாராட்டியே ஆக வேண்டும்.

ஆனால் படம் சொல்லும் கருத்துக்கான சூழ்நிலைகளும், உணர்வுகளும் படத்தில் அடையாளப் படாமல் போனதுதான் இதன் குறையாக உள்ளது.

சேரன் குடும்பத்தினர்… குறிப்பாக அவர் மனைவி ஶ்ரீ பிரியங்காவும் தங்கை தீப்ஷிகாவும் எப்போதும் ஒரு ரிசப்ஷன் கிளம்பும் அளவுக்கான மேக்கப்புடனேயே இருக்கிறார்கள். அதனால் அவர்களைப் பண்ணையார் வீட்டுப் பெண்களாகவே உணர முடிகிறது.

ஆதிக்க சாதியைச் சேர்ந்த லாலும் அவர் மருமகன் அருள்தாசும் முரட்டுத்தனமாகக் கத்திக் கொண்டிருக்கிறார்களே தவிர அவர்கள் ஆதிக்கம் அந்த ஊரில் செல்லுபடி ஆனதாகவே தெரியவில்லை.

குறிப்பாக அவர்கள் மேல் நமக்கு கோபம் வந்திருக்க வேண்டும். ஆனால் கடைசியில் பரிதாபமே மிஞ்சுகிறது. அவர்கள் எந்த சாதியைச் சேர்ந்தவர்களாகவாவது இருக்கட்டும்… எந்த மதமாகவாவது இருக்கட்டும்.

தந்தை இறந்த நிலையில் அவருக்கான சடங்குகளை செய்ய அவர்களுக்கு உரிமை இருக்கிறதா இல்லையா..? மாதக்கணக்கில் தந்தையின் உடலை மார்ச்சுவரியில் போட்டு வைத்து நீதிமன்றம் நியாயம் பேசிக் கொண்டிருப்பதில் எந்த நியாயமும் இருப்பதாக தெரியவில்லை.

கடைசியில் லால் எல்லா சடங்கையும் தூக்கி எறிந்து விட்டுப் போவது போல் எல்லா மதத்தினரும் எல்லா சாதியினரும் தங்கள் சடங்குகளைத் தூக்கி எறிந்து விட்டுப் போக முடியுமா என்றும் தெரியவில்லை.

தங்கள் சாதியைச் சொல்லிக் கொள்ள விரும்பாதவர்கள் தமிழ்க்குடிமகன் என்று பதிவு செய்து கொள்ளலாம் என்பதாக சொல்லப்படுவதும் கூட ஒரு பட்டியலுக்குள் அடங்குவதாகவே இருக்கிறது.

இதற்குள் ஆதிக்க சாதிக்காரர்கள் அடங்கி விடுவார்களா என்ன..?

தீர்வு சொல்வதில் நீதிபதி ராஜேஷ் போலவே திக்கித் திணறி நிற்கிறது இந்தப் படம்.

சேரனுக்கு ஆதரவாக நிற்கும் வேல ராமமூர்த்தியின் பாத்திரம் கவனிக்க வைக்கிறது. எஸ்பியாக வரும் சுரேஷ் காமாட்சி கதைக்குள் வரும் இடத்திலிருந்து படம் திருப்புமுனை பெறுகிறது.

கதையைக் கடத்துவதில் மட்டுமே கவனம் செலுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ். தன் படங்களில் அடித்து உருட்டும் இசையமைப்பாளர் சாம்.சிஎஸ் இந்தப் படத்தில் அடக்கி வாசித்து இருப்பது ஆச்சரியம்தான்.

தமிழ்க்குடிமகன் – சட்ட நாதன்..!

 

- Advertisement -

Read more

Local News