@ செருப்பு விளம்பரம் ஒன்றுக்காகத்தான் கேமரா முன்பாக முதன்முதலில் நின்றார் அஜித். அந்த விளம்பரம் பார்த்துதான் தெலுங்கில் ‘பிரேம புஸ்தகம்’ படத்தில் ஹீரோவாக ஒப்பந்தம் செய்தனர். அந்தப் படம் தமிழில் ‘காதல் புத்தகம்’ என்ற பெயரில் டப்பிங் படமாக வெளியானது. அதுதான் அஜித்தின் முதல் வெள்ளித்திரை பிரவேசம்!
@ ஊட்டியில் ஒரு பள்ளியில் இந்தப் படத்தின் ‘புத்தம் புது மலரே…’ பாடலைப் படமாக்க அஜித், சங்கவி என யூனிட் காத்திருந்தது. அப்போது திடீரென ‘திருடா திருடா’ பட யூனிட் அங்கு வந்து இறங்கியது. மணிரத்னம், பி.சி.ஸ்ரீராம், பிரசாந்த் என ‘லைம்லைட்’ பிரபலங்களைப் பார்த்ததும் ‘அமராவதி’ யூனிட்டே அவர்களை நோக்கி ஓடியது. அஜித் செல்லவில்லை. அவர் அருகில் அமர்ந்து இருந்த ஒருவரும் செல்லவில்லை. ‘ஏன் நீங்க ஆட்டோகிராப் வாங்க போகலையா?’ என அஜித் அவரிடம் கேட்க, ‘இல்லை. நான் ஃப்யூச்சர் ஸ்டார்கூட உட்கார்ந்திருக்கேன்’ என்றார் அவர். பெயர் சுரேஷ் சந்திரா. அவர்தான் அப்போது முதல் இப்போது வரை அஜித் மேனேஜர்!
@ பவித்ரா படத்தில் ஒப்பந்தமான நேரம்… ரேசில் கலந்துகொண்டு விபத்து ஏற்பட்டு, முதுகுத்தண்டில் அடிபட்டு மருத்துவமனையில்தான் இருந்தார் அஜித். படப்பிடிப்புத்தளம் வரைகூட வர முடியாத நிலை. ஆனாலும், சக்கர நாற்காலியில் வந்து ‘பவித்ரா’ படப்பிடிப்பில் கலந்துகொண்டார்!
@ அஜித் – விஜய் இணைந்து நடித்த முதல் படம். சென்னையில் படப்பிடிப்பு நடக்கும்போது, மதியம் படப்பிடிப்புக்கு சாப்பாடு கொண்டுவருவார் விஜய் அம்மா ஷோபா சந்திரசேகர். அப்போது மகன் விஜய்க்கு மட்டும் அல்ல, அஜித்துக்கும் சேர்த்தே சாப்பாடு கொண்டுவந்து பரிமாறுவார். ஒரே கேரியர் சாப்பாடு சாப்பிட்ட இருவரும், இன்று சினிமா கரியரிலும் உச்சத்தில் இருக்கிறார்கள்!
@ ஒரு படத்தில்அஜித்துக்கு ஜோடி இந்தி நடிகை பூஜா பட். அவருக்கு அஜித்தின் நடவடிக்கைகள் பிடித்துப்போக, இருவரும் ‘திக் ஃப்ரெண்ட்ஸ்’ ஆனார்கள். அந்தப் பழக்கத்தில் அஜித்தை இந்தி சினிமாவில் நடிக்க அழைத்தார் பூஜா. ஆனால், ‘தமிழே போதும். இந்தி இஷ்டம் இல்லை’ என அன்பாக மறுத்துவிட்டார் அஜித்.