Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் சூப்பர் ஹிட் படங்கள் மீண்டும் வெளியாகின்றன..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில், இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் பிரீமியம் திரையரங்க நிறுவனமான பி.வி.ஆர். சினிமாஸ், சென்னை மற்றும் கோயம்புத்தூரில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட திரையரங்குகளில் வரும் டிசம்பர் 9-ம் முதல் 15-ம் தேதிவரையிலும் ரஜினியின் சமீபத்திய பிரபலமான திரைப்படங்களைத் திரையிடவுள்ளது.

‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாள் சிறப்பு திரைப்பட விழா’ என்ற தலைப்பில் நடைபெறவுள்ள இந்த திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக இந்தப் படங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

அவரது பிறந்த நாளுக்கான கவுண்ட்டவுனாக 2 தென்னிந்திய நகரங்களில் உள்ள 4 பி.வி.ஆர். திரையரங்குகளின் பெரிய திரையில், நடைபெறவுள்ள இந்த திருவிழாவில், பாபா (2002), சிவாஜி: தி பாஸ் (2007), 2.0 (2018) மற்றும் தர்பார் (2020) ஆகிய 4 சூப்பர் ஹிட் படங்கள் திரையிடப்படவுள்ளன.

இந்த திரை விழா பற்றி பி.வி.ஆர். லிமிடெட் நிறுவனத்தின், தலைமை நிர்வாக அதிகாரியான கௌதம் தத்தா பேசும்போது, “ரஜினிகாந்த் சார், சாதனைகளை தகர்த்தெறிந்த பல திரைப்படங்களின் மூலம் தென்னிந்திய சினிமா துறைக்குபெருமை சேர்த்த ஒரு மகத்தான நடிகராவார். அவரது பிறந்தநாளைக் கொண்டாடுவதிலும், மனதைவிட்டு நீங்காத அவரது சிறந்த திரைப்படங்களில் சிலவற்றை ரசிகர்களுக்கு திரையிடுவது குறித்தும் பிவிஆர் பெருமிதம் கொள்கிறது.

சினிமா உலகில் அவரது பயணத்தை காட்சிப்படுத்தும்விதமாக, இந்த 7 நாள் ரஜினிகாந்த் திரைப்பட விழாவைக் காண சென்னை மற்றும் கோவையில் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களை வரவேற்கிறோம். பெரிய திரையில் கட்டாயம் பார்க்க வேண்டிய தலைவரின் படங்களை மீண்டும் கண்டு மகிழ அவரது ரசிகர்களுக்கு இது ஒரு நம்ப முடியாத வாய்ப்பாக இருக்கும்” என்று கூறினார்.

பி.வி.ஆர். ஏற்பாடு செய்துள்ள இந்த சிறப்புத் திரைப்பட விழா குறித்தும், ‘பாபா’ திரைப்படத்தின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு வெளியிடப்படுவது குறித்தும் லதா ரஜினிகாந்த் பேசும்போது, “20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பாபா திரைப்படம் ஒரு உணர்ச்சிகரமான அனுபவமாக இருந்தது. அத்திரைப்படம் இப்போது மீண்டும் வெளியாவது என் மனதிற்கு மேலும் நெருக்கமான ஒரு உணர்வுபூர்வ அனுபவமாக உள்ளது. பாபா, எங்கள் குடும்பத்திற்கு பல விதங்களில் மிகவும் ஸ்பெஷலான திரைப்படமாகும். திரையரங்குகளில் ‘பாபா’ படத்திற்கு மீண்டும் அமோக வரவேற்பை அளிக்கும் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்கள்மீது காட்டும் அனைத்து அன்பிற்காக கடவுளுக்கு நன்றி கூறுவதோடு, ரசிகர்களுடன் இணைந்து மீண்டும் அதே உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் அனுபவிக்க நான் காத்திருக்கிறேன்” என்றார்.

- Advertisement -

Read more

Local News