Thursday, April 11, 2024

எஸ்.எஸ். வாசனின் ‘ராணி’தந்திரம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சிந்தித்து ஒரு காரியத்தில் வெற்றி பெற்றவரை,  ராஜதந்திரத்துடன்  செயல்பட்டார் என  அனைவரும் புகழ்வார்கள். அது போல பிரபல தயாரிப்பாளராக விளங்கிய அமரர் எஸ்.எஸ்.வாசன் ‘ராணி தந்திரம்’ செய்தது அந்தக் காலத்தில் திரையுலகினரால் ரசிக்குப் பேசப்பட்டது.

அவரது தயரிப்பில் ஜெமினி கணேசன், பி.எஸ்.வீரப்பா, வைஜெயந்திமாலா, பத்மினி  உள்ளிட்டோர்  நடித்த வஞ்சி கோட்டை வாலிபன் திரைப்படம் 1958ல் வெளியானது; பெரும் வெற்றி பெற்றது.

இந்த படம்  இந்தியில் ராஜ் திலக் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டபோதும் இதே கூட்டணி இணைந்தது.

அப்படத்தில் இடம்பெற்ற ‘கண்ணும் கண்ணும் கலந்து..’ பாடலும்  இடையில் பி.எஸ்.வீரப்பா, “சபாஷ் சரியான போட்டி!”  என ரசித்துச் சொல்வதும் இன்றும் பிரபலம்.

அந்த பாடல் காட்சியில் பத்மினியும், வைஜயந்திமாலாவும் போட்டி போட்டு ஆடுவார்கள். ஆனால் இறுதியில் யார் வெற்றி பெற்றார்கள் என்பது கூறப்படாது. உயரத்தில் இருந்து ஒரு விளக்கு கீழே விழ, நட்சத்திரங்கள் இருவரும் அதிர்ச்சியடைந்து நடனத்தை நிறுத்திவிடுவதைப் போல காட்சி இருக்கும்.

இந்த காட்சியை இயக்குநர் குழு யோசிக்கும்போது ஒரு சிக்கல் இருந்தது.

அந்த காலகட்டத்தில் வைஜயந்திமாலா பாலிவுட்டில் பிரபலமாக இருந்தார்..  பத்மினி கோலிவுட்டில் கோலோச்சினார்.  ஆகவே இருவரில் ஒருவரை வெற்றி பெற்றவராக, இன்னொருவரை தோல்வி அடைந்தவராக காண்பித்தால், அவர்களுக்குள் மனஸ்தாபம் ஏற்படும்.

ஆகவே இயக்குநர் குழு குழம்பிக்கொண்டு இருந்தது. அந்த நடனக்காட்சியையே நீக்கிவிடலாமா என நினைத்தது.

 இதை அறிந்த தயாரிப்பாளர் எஸ்.எஸ்.வாசன், “இருவருமே பிரபலமான நடிகைகள். அவர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு நடனமாடினால் மக்கள் ரசிப்பார்கள். ஆகவே நடனக் காட்சியை நீக்க வேண்டாம்.

அதே நேரம் அவர்கள் மனம் வருந்தாதபடி, நடனத்தில் யாரும் வெற்றி தோல்வி அடையாதபடி முடித்துவிடலாம். அதாவது  விளக்கு மேலிருந்து விழுந்து நடனம் நின்றுவிடுவது போல காட்சி வைத்துவிடலாம்” என்று யோசனை சொன்னார்.

இந்த யோசனை சிறப்பாக இருக்கவே அதன்படியே காட்சி வைக்கப்பட்டது.

அதைத்தான் இன்றும் நாம் ரசித்துக்கொண்டு இருக்கிறோம்!

- Advertisement -

Read more

Local News