தமிழக சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் நெல்சன் இயக்கியுள்ள ‘டாக்டர்’ திரைப்படம், ரசிகர்களிடையேயும் வர்த்தக வட்டாரங்களிடையேயும் இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது.
இப்படத்தை Sivakarthikeyan Productions உடன் இணைந்து, KJR Studios சார்பில் கோட்டபாடி J.ராஜேஷ் தயாரித்துள்ளார்.
உலகமெங்கும் வரும் அக்டோபர் 9 ஆம் தேதி, இப்படம் வெளியாகவுள்ள நிலையில், பட வெளியீட்டை ஒட்டி, பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசும்போது, “இரண்டு வருடங்கள் கழித்து அனைவரையும் சந்தித்தது மகிழ்ச்சி. எனக்கு பாட்டு எழுதும் நம்பிக்கை எல்லாம் இருந்தது இல்லை. நெல்சன்தான் அவரது முதல் படத்தில் ஆரம்பித்து வைத்தார். இப்படத்தில் ‘செல்லம்மா’ பாடல் எளிதாக இருந்தது. ஆனால் ‘ஓ பேபி’ பாடல் கொஞ்சம் கஷ்டமாக, பயமாக இருந்தது. அதிலும் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. மக்களுக்கு பிடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்தப் படத்தில் எனக்கு டயாலாக்கே இல்லை. மொத்தமாகவே ஒரு பத்து டயலாக்தான். எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும்போது நான் மட்டும் பேசாமல் இருந்தது கஷ்டமாக இருந்தது. ஆனால், நெல்சன் எப்படி என்னை வைத்து இப்படி ஒரு கதையை யோசித்தார் என்று வியப்பாக உள்ளது.
வினய்யை ‘உன்னாலே உன்னாலே’ படம் பார்த்ததில் இருந்து பிடிக்கும். நான் உயரமாக இருக்கிறேன் என்று நினைத்து கொண்டிருந்தேன். ஆனால், வினய் முன்னால் நடிக்கும்போது நானே ஆப்பிள் பாக்ஸ் போட்டுதான் நின்றேன். மனுஷன் மிகப் பெரிய உயரமாக இருந்தார். அவரது குரலும், பாடியும் படத்திற்கு மிகப் பெரிய பலம்.
ப்ரியங்காவிற்கு தமிழ் தெரிந்தது மிகப் பெரிய உதவியாக இருந்தது. தமிழ் தெரிந்த நடிகையுடன் நடிக்கும் போது, படப்பிடிப்பிலேயே காட்சி எப்படி வரும் என்ற தெளிவு இருக்கும்.
ரெடின், யோகிபாபு இருவரும் இப்படத்தில் கலக்கியுள்ளனர். அருண் ப்ரோ இப்படத்தில் செய்தது காலாகாலத்திற்கும் பேசப்படும். அவரை ரொம்பவும் மிஸ் பண்ணுகிறேன்.
விஜய் கார்த்திக் ஒளிப்பதிவு படத்தில் அட்டகாசமாக இருக்கும், தியேட்டரில் பார்த்தால் உங்களுக்கு புரியும். அனிருத்துதான் இந்தப் படத்தை அறிவித்ததிலிருந்தே, இதற்கு அடையாளமாக இருந்தார்.
இந்தப் படத்தில் நடித்த அனைவருக்குமே இதுவொரு முக்கியமான படமாக இருக்கும். இந்தப் படம் எல்லாருக்கும் பிடித்த படமாக இருக்கும்…” என்றார்.