தற்போதைய சூழலில் ஒரு திரைப்படத்தில் நடித்த நடிகைகள் உடன் நடித்த நடிகைகளை பாராட்டுவதெல்லாம் பார்க்க முடியாத விஷயம். ஆனால் ‘நித்தம் ஒரு வானம்’ படத்தின் நாயகியான ரிதுவர்மா, சக நடிகையான ஷிவாத்மிகாவை பாராட்டித் தள்ளிவிட்டார்.
நேற்று முன் தினம் நடைபெற்ற ‘நித்தம் ஒரு வானம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்போது அவர் இப்படி பேசியிருக்கிறார்.
இந்த விழாவில் நடிகை ரிது வர்மா பேசுகையில், ”இந்தப் படத்தில் ‘சுபா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இயக்குநரின் கற்பனையில் உதித்த அந்த கதாபாத்திரத்தை நேர்த்தியாக திரையில் கொண்டு வந்திருக்கிறேன் என நம்புகிறேன்.
இந்தப் படத்தில் என்னுடன் நடித்திருக்கும் நடிகை அபர்ணா பாலமுரளி வித்தியாசமான வேடத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். மேலும் இந்த படத்தில் நடித்திருக்கும் நடிகை ஷிவாத்மிகா ராஜசேகரும் அற்புதமாக நடித்திருக்கிறார். அவர் ஒரு பிறவி நடிகை என்பதால், இயற்கையாகவே நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.
இளமையும், புதுமையும்தான் இந்தப் படத்தின் ரசிகர்களை கவரக் கூடிய அம்சம். இந்தப் படத்தை திரையரங்கத்திற்கு வருகை தந்து பாருங்கள். இந்த படைப்பு உங்களை ஏமாற்றாது..” என்றார்.