Thursday, April 11, 2024

சஞ்ஜீவன் – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மலர் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் மலர்க்கொடி தயாரித்துள்ள படம் ‘சஞ்ஜீவன்’. 

இந்தப் படத்தில் வினோத், நிஷாந்த், சத்யா என்.ஜே., யாஷின், திவ்யா துரைசாமி, ஹேமா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – கார்த்திக் ஸ்வர்ணகுமார், இசை – தனுஷ் மேனன், படத் தொகுப்பு – ஷிபு நீல், எழுத்து, இயக்கம் – மணி சேகர்.

தென்னிந்திய சினிமாவில் ஸ்னூக்கர் விளையாட்டை மையமாகக் கொண்டு தயாரான முதல் திரைப்படம் இது.

வினோத் லோகிதாஸ், சத்யா, ஷிவ் நிஷாந்த், விமல் ராஜா, யாசீன் அனைவரும் விமல் ராஜாவின் தந்தை நடத்திவரும் ஒரு ஐடி அலுவலகத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.

வினோத்துக்கு ஸ்னூக்கர் விளையாடுவதில் ஆர்வம். இவரது அலுவகத்தில் புதிதாக வேலைக்கு சேரும் திவ்யாவிற்கு, வினோத்தை பார்த்ததும் காதல். வினோத்தும் திவ்யாவைக் காதலிக்கிறார்.

அலுவலகத்தில் நடைபெறும் ஸ்னூக்கர் ஆட்டத்தின் இறுதிப் போட்டியில் வினோத் வெற்றி பெறுகிறான். இதைக் கொண்டாடுவதற்காக நண்பர்கள் அனைவரும் ஏற்காடுக்கு சுற்றுலா செல்கின்றனர்.

அப்போது அங்கே இவர்களுக்கு ஏற்படும் எதிர்பாராத நிகழ்வுகளால் என்ன ஆகிறது என்பதுதான் இந்த சஞ்சீவன்’ படம்.

‘சஞ்ஜீவன்’ என்றால் ‘அழிவற்றவன்’ என்று பொருளாம். இயக்குநர் மணி சேகர் ஸ்னூக்கர் கிளப் வைத்திருந்தவராம். அதனாலேயே இதுவரை எவரும் சொல்லாத இந்த ஸ்னூக்கர் கதைக் களத்தை தேர்வு செய்து இயக்கியுள்ளார்.

வகைக்கொரு இளைஞரை முன் மாதிரியாக வைத்து வடிவமைக்கப்பட்டிருக்கும் பாத்திரங்கள் படத்தை இரசித்துப் பார்க்க வைக்கிறது. முரட்டுத்தனம் வாய்ந்த யாசின், முதலாளியின் மகன் என்ற கெத்தை அடிக்கடி காட்டும் விமல், சிரித்தே கெடுக்கும் சத்யா என்று அவரவர் பாத்திரங்களை சரியாகவே செய்திருக்கிறார்கள்.

சத்யா, ஷிவ் நிஷாந்த், யாசீன் மூவரும் காமெடியிலும் கலக்கியுள்ளனர். புதுமுகமாகவே தெரியவில்லை. விமல் ராஜா பணக்கார நண்பனாக நடித்துள்ளார். அதற்கே உரிய மனோபாவத்துடன் நடித்துள்ளது இயல்பாக உள்ளது.

இந்த ஐந்து நண்பர்களுக்குள்ளும் பணக்காரன், ஏழை, ஜாதி மத பேதங்கள் எதுவும் இல்லாமல் இருப்பதால் இவர்களின் நட்பை ரசிக்க முடிகிறது.

நாயகி திவ்யா துரைசாமியின் உடல் மொழியும் பேசும் அழகும், காதலிக்க வைக்கின்றன காரணிகள். அதிலும் வினோத் திவ்யாவை சேலையில் பார்த்தவுடன் காதலிக்கத் தோன்றும் அத்தருணம் ரசிகர்களுக்கும் அந்த உணர்வு ஏற்படுவது உண்மைதான். வினோத்துக்கும், திவ்யாவுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாகவே வேலை செய்திருக்கிறது.

இருவருமே இளையராஜாவின் இசையை ரிங்டோனை வைத்திருக்க வினோத் போன் ஒலிக்கும் போது, “இது என்னுடைய ரிங்டோன்…” என்று திவ்யா சொல்ல “இல்லை… இது இளையராஜாவின் ரிங்டோன்..” என்று வினோத் சொல்வது ஒரு காதல் மொழிதான்.

அவருடன் தோழிகளாக வரும் இருவருக்கும் பெரிய வாய்ப்பில்லை. ஆனால் இவர்களது அலுவலகத்தில் பாஸாக வரும் ஸ்ரீதர் நாராயணன் கேரக்டரும் சிறியதாக இருந்தாலும் ரசிக்க வைக்கிறது. யாசினும், ஷிவ் நிஷாந்த்தும் போதை மருந்து கடத்தும் காட்சிகள் சீரியசான காமெடிதான்.

ஸ்னூக்கர் போட்டியையும், கார் சேசிங் காட்சியையும் கார்த்திக் ஸ்வர்ணகுமார் கேமரா விறுவிறுப்பாக்கி உள்ளது. தனுஷ் மேனன் பின்னணி இசை காட்சிகளோடு ஒன்ற வைக்கிறது.

முதல் பாதியில் நண்பர்கள் சேர்ந்து அடிக்கும் லூட்டிகள், ஸ்னூக்கர் விளையாட்டு, காதல் என்று போகும் படம், இரண்டாம் பாதியில் அப்படியே வேறு ஒரு கதையை சொல்கிறது.

காட்சிக்கு காட்சி, தான் பாலு மகேந்திராவின் மாணவர் என்பதை மெய்ப்பித்திருக்கிறார் இயக்குநர் மணிசேகர். திரைக்கதையில்தான் சற்றே தொய்வு தந்திருக்கிறாரே ஒழிய ஒரு இயக்குநராக அவர் ஜெயித்திருக்கிறார் என்று சொல்லலாம்.

வசனங்களிலும் தன் பெயரைப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் மணி சேகர். “முன்பெல்லாம் ஒழுக்கமானவன்தான் ஹீரோ. இப்போதெல்லாம் குடித்தால்தான் ஹீரோ..!” என்று வினோத் பேசுவது இவருடைய எழுத்துத் திறமைக்கு ஒரு சான்று. படம் முழுவதும் நிரம்பி இருக்கும் நகைச்சுவை வசனங்களும், காட்சிகளும்தான் படத்தை தூணாகத் தாங்கியிருக்கின்றன.

இயக்குநரின் கருத்துப்படி இது இந்த நண்பர்களின் சில மாத நிகழ்வுகளே என்றால் ஸ்னூக்கர் விளையாட்டுக்காக ஏன் முதல் காட்சியில் இருந்து இடைவேளைவரை கதையை வைத்திருக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது. 

இரண்டாம் பகுதியில் வரும் கிராமத்து திருடன் காட்சிகள் அரதப் பழசு. அதிலும்  ரசிக்கும்படியாக ஒரு கிளாமர் பாட்டினை காண்பித்துவிட்டு அதை முடித்தவிதமும், மலம் கழிப்பது தொடர்பான காட்சிகளும் அருவருப்பு. இதையெல்லாம் காமெடி என்று இப்போதும் நினைப்பதே கொடுமைதான்.  

விளையாட்டு வினையாகும் என்ற சொல்லுக்கு எடுத்துக்காட்டாகவும், விபத்துகளுக்கு நல்லவர் கெட்டவர் தெரியாது என்பதையும் சொல்லி அதிர வைத்திருக்கும் படத்தின் கிளைமாக்ஸ் நமக்குள் சோகத்தைக் கூட்டவில்லை.

RATING : 3.5 / 5

- Advertisement -

Read more

Local News