சந்தியா – ஜெயலலிதா: பாசத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு சம்பவம்!

மறைந்த ஜெயலலிதா, அவரது தாயார் சந்தியா மீது எத்தனை அன்பு வைத்திருந்தார் என்பதற்கு ஓர் உதாரண சம்பவம் இது.  அது 1971-ம் ஆண்டு அக்டோபர் மாதம். அந்த வருடத்தின் தீபாவளித் திருநாளுக்கு இன்னும் சில நாட்களே இருந்த நிலையில் ஜெயலலிதாவின் வாழ்வில் எல்லாமுமாக இருந்த தாய் சந்தியா அந்த ஆண்டும் வழக்கம்போல் பிரபல கடைக்கு தானே நேரில் சென்று மகள் ஜெயலலிதாவுக்கு விருப்பமான டிசைன்களில் 10 க்கும் மேற்பட்ட விலையுயர்ந்த சேலைகளை பல மணிநேரங்கள் செலவிட்டு பார்த்துப் பார்த்து வாங்கிவந்திருந்தார்.

படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வந்திருந்த தன் மகளுக்கு அதை ஆசைஆசையாய் காட்டியபோது, தானே நேரில் சென்றிருந்தால்கூட அத்தனை அழகாக சேலைகளை தேர்வு செய்திருக்கமுடியாது என தாயை கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் ஜெ. “இதெல்லாம் உனக்கு தீபாவளி ஆடைகள் என அன்போடு சொன்னார். “எல்லாம் எனக்காம்மா…உனக்கு இல்லையா” என்றார் ஜெயலலிதா.

“என் வயதில் எல்லாவற்றையும் ஆண்டு அனுபவித்துவிட்டேன். இனிமேல் எனக்கு எதற்கு விலையுயர்ந்த ஆடைகள்…எல்லாம் உனக்காகவே வாங்கிவந்தேன்” என்றார் சந்தியா. தனக்கு இத்தனை புடவைகள் வாங்கி வந்த அம்மா தனக்கென எதுவும் வாங்கிக்கொள்ளவில்லையே என கோபித்துக்கொண்ட ஜெயலலிதாவை சந்தியாவால் தேற்ற முடியவில்லை. ஜெயலலிதா முடிவாக சொன்னார். “என் ஆசைப்படி தீபாவளிக்கு உனக்கும் புதுத்துணி எடுத்துக்கொள்ளவில்லையென்றால் நான் இதில் ஒன்றைக்கூட தொடமாட்டேன்” என உறுதிபட சொன்னார். மகளின் பிடிவாதம் தெரிந்த சந்தியா வேறு வழியின்றி அதற்கு ஒப்புக்கொண்டார். விறுவிறுவென களத்தில் இறங்கினார் ஜெயலலிதா.

வழக்கமாய் தான் துணி எடுக்கும் ராதா சில்க் எம்போரியத்துக்கு போன் செய்தவர், தன் தாயார் தனக்கு எடுத்த அதே எண்ணிக்கை அதை டிசைனில் பல மாதிரிகளில் புடவை எடுத்துவைக்கச்சொல்லிவிட்டு நேரில் அந்த கடைக்கு புறப்பட்டார்.

கடையில் தன் தாயாருக்கு தீபாவளி புடவைகளை வாங்கியவர் அதை அவரிடம் காட்டி மகிழ்ந்தார். “ஒன்று வாங்கினால் போதாதா? ஏன் இத்தனை புடவைகள் எனக்கு?” என மீண்டும் முரண்டு பிடித்த அம்மாவை, ‘தீபாவளி தினம் வரை தினம் ஒருபுடவை கட்டிக்கோ’ என கட்டிப்பிடித்தபடி குறும்பாக கூறி சிரித்தார் ஜெயலலிதா.

இந்த ச ம்பவம் வெகு காலத்துக்கு முன், ஆனந்த விகடன் இதழில் வெளியானது.