”சந்தானத்திற்கு  30 கோடி சம்பளம் கொடுக்கணும்!”:  தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா

கல்யாண் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில், சந்தானம் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “80’ஸ் பில்டப்”.  நாயகியாக ராதிகா ப்ரீத்தி நடிக்க, பிற முக்கிய கதாபாத்திரங்களில் ஆடுகளம் நரேன்,  இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், மொட்டை ராஜேந்திரன், ஆனந்த்ராஜ், இயக்குநர் சுந்தர்ராஜன்,  தங்கதுரை, சுவாமிநாதன், கும்கி அஷ்வின், சுபாஷினி கண்ணன், சங்கீதா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஜிப்ரான் இசையமைக்க, ஜேக்கப் ரத்தினராஜ்  ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட  தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, “சிலருடைய வளர்ச்சி நம்மை பொறாமைபடச் செய்யும், சிலருடைய வளர்ச்சி நம்மை எரிச்சலடையச் செய்யும், இன்னும் சிலரின் வளர்ச்சி நம்மை உண்மையாகவே சந்தோசப்படுத்தும்.  நடிகர் சந்தானத்தின் வளர்ச்சி அப்படிப்பட்டது. ஆரம்பத்தில் ஜில்லுனு ஒரு காதல் படத்தில் நடிக்கும் போது ஒன்றே முக்கால் இலட்சம் நான் சந்தானத்திற்கு சம்பளமாகக் கொடுத்தேன். அடுத்து 18 இலட்சம், அடுத்து 56 இலட்சம் இன்று 3 கோடி வரை சம்பளமாக கொடுக்கிறேன். 30 கோடி சம்பளமாக கொடுக்கும் இடத்திற்கு அவர் வளர வேண்டும் என்று உண்மையாகவே விரும்புகிறேன்.  அவருடன் சேர்ந்து நானும் வளர வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றார்.