இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆரம்பித்த அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் கட்சியின் பொருளாளரும், தலைவரும் ராஜினாமா செய்துவிட்டுப் போக அடுத்தது என்ன என்பதை வெளிப்படையாகச் சொல்லாமலேயே இருந்து வருகிறார் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்.
இந்த நிலையில் நேற்றைக்கு தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், நான் மக்களுக்கு நல்லது செய்ய நினைப்பவர்களுக்காக ஒரு பிளாட்பார்மை அமைத்திருக்கிறேன். விருப்பம் இருப்பவர்கள் அதில் இணைய வாருங்கள்..” என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.
இது பற்றி அவர் பேசும்போது, “யார், யார் நல்லது செய்கிறார்களோ… நான் அவர்களது பின்னால் நிற்பேன். யார், யார் நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்களோ.. நான் அவர்களுக்கு பிளாட்பார்மாக இருப்பேன்.
எனக்கு எங்கேயும், எதிலும் பதவி வேண்டாம். எனக்குப் பதவி ஆசையில்லை. இப்போது எனக்கு வயதாகிவிட்டது. அதனால் எந்தப் பதவியும் எனக்கு வேண்டாம்.
இப்போதெல்லாம் திருடர்கள் அதிகமாகிவிட்டார்கள். அரசியல் செய்ய யாரும் வரவில்லை. கொள்ளையடிக்கத்தான் வந்திருக்கிறார்கள்.
அனைத்து வழிகளிலும் சுரண்டி எடுக்கிறார்கள். நாம் கட்டும் வரிப்பணம் முழுவதும் அவர்களது வீட்டுக்குத்தான் செல்கிறது. சர்வீஸ் செய்ய வந்தவன்டா நீ.. அதைத்தான் நீ செய்யணும்..
சாதாரணமா சைக்கிள் கடை வைச்சிருந்தவர் இன்னிக்கு 12 கிலோ மீட்டர் நீளத்துக்கு நிலம் வைச்சிருக்கார். எங்கேயிருந்து வந்தது பணம்.. இதை யார் கேட்பது..
மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நான் ஒரு மேடையாக நிற்பேன். எல்லாரும் கேட்கலாம் இவன் எதுக்கு இப்போ அரசியல் மேடை போடுறான்னு..
ஆனால், அரசியல் ஞானம் உள்ளவர்களுக்குத் தெரியும் நான் ஏன் அரசியல் மேடைல நிக்குறேன்னு.. நான் எப்படிப்பட்டவன்.. என்னுடைய முதல் படம் எப்படிப்பட்டது.. நான் எப்படிப்பட்ட படங்களைத் தொடர்ந்து எடு்த்தவன் என்று..
இந்தப் பொது வாழ்க்கையில் ஒரு எழுதப்படாத விதி இருக்கிறது. இன்றைக்கு தொண்டு செய்தால் நாளை நாம் தலைவனாகலாம். அதே சமயம் பொது வாழ்க்கையில் தொண்டு செய்பவர்கள் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும். தனி மரம் தோப்பாகாது. அனைவரும் ஒன்று சேர்ந்தால்தான் இன்னும் பெரிதாகச் செய்ய முடியும்.
1981-ல் நான் முதல் படத்தை இயக்கினேன். 1990-ம் ஆண்டுவரையிலும் 56 படங்களை இயக்கினேன். வருடத்திற்கு 7 திரைப்படங்கள். அந்த அளவுக்கு கடுமையாக உழைத்தேன். இன்றைக்கு ஆண்டவன் என்னை நன்றாக வைத்திருக்கிறான்.
அதனால்தான் இப்போது ஒரு பிளாட்பார்ம் போட்டுக் கொடுத்தேன். இதில் கலந்து கொள்ள விரும்புவர்கள் ஆதரவு கொடுங்கள். இப்போது நான் தனி மரமாக நிற்கிறேன். இந்த மரம் மற்றைய மரங்களை நம்பியில்லை. 45 ஆண்டுகளாக போராடிக் கொண்டிருக்கும் மரம்.
செல்வக்குமார் போன்ற இளைஞர்களுக்காக.. நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கும் இளைஞர்களுக்காக நான் போட்டுக் கொடு்த்திருக்கும் பிளாட்பார்ம் இது. நான் அறிமுகப்படுத்திய யாரும் சோடை போனதில்லை.
தவறு நடக்கும்போது நாம் தட்டிக் கேட்க வேண்டும். அப்படித் தட்டிக் கேட்கவில்லையென்றால் நம் உடம்பில் ரத்தம் ஓடவில்லை என்று அர்த்தம். ஆக்ஸிஜன் இல்லை என்று அர்த்தம்.
நாம் இப்போதே நமது பிள்ளைகளிடம் சொல்லிக் கொடுக்க வேண்டும். போராட சொல்லித் தர வேண்டும். தமிழகத்தை நல்வழிப்படுத்த வேண்டும். தமிழகத்தை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு வர வேண்டும்.
எழுத்து என்பது ஒரு வரம்.. ஒரு ஆயுதம்.. அதை வைத்து மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். அதை மீடியாக்கள்தான் மிகச் சரியாகச் செய்ய வேண்டும். வாருங்கள்.. நமது பிள்ளைகளிடம் சொல்லி நல்ல தமிழகத்தை உருவாக்கப் போராடுவோம்.
இதை உங்களிடம் மட்டுமல்ல.. உலகம் முழுவதும் இருக்கிற என்னை ‘அப்பா’ என்று பாசத்தோடு அழைக்கும் அனைத்து இளைஞர்களிடத்திலும் சொல்கிறேன். உங்களுக்காக நான் பிளாட்பார்ம் அமைத்திருக்கிறேன். நான் தலைவனாக வரவில்லை. சொல்லவில்லை. அனைவரையும் நண்பனாகத்தான் நினைத்து பேசுகிறேன். வாருங்கள்.. போராடுவோம்.. மக்கள் இயக்கமாக மாறுவோம்..” என்று உணர்ச்சி பொங்க பேசினார் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்.