Thursday, April 11, 2024

ரெண்டகம் – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்தப் படத்தை நடிகர் ஆர்யா தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனமான ‘தி ஷோ பீப்பீள்’ நிறுவனத்தின் சார்பில் தமிழிலும், மலையாளத்திலும் ஒரே நேரத்தில் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் அரவிந்த்சாமியும், பிரபல மலையாள நடிகரான குஞ்சக்கோ போபனும் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் ஈஷா ரெப்பா, ஜாக்கி ஷெராப், அமல்டா லிஸ், ஜின்ஸ் பாஸ்கர், சியாத் யாது, அனீஷ் கோபால், குமார் கமனன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

‘உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யாதே’ என்பார்களே.. அதுதான் இந்தப் படத்தின் கதைக் கரு. அந்த ரெண்டகம் செய்தவனை தேடிப் பிடித்து வதம் செய்வதுதான் இந்தப் படத்தின் கதை.

மும்பையில் வசித்து வரும் போபனுக்கு ஈஷா ரெப்பா என்ற காதலி உண்டு. அவர் ஆஸ்திரேலியாவுக்கு செல்வதற்கு தயாராகயிருக்கிறார். அவருடனேயே செல்ல விரும்பும் போபனுக்கு இப்போது அந்தச் செலவுக்காக 10 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது.

போபனின் அண்ணனான ஆடுகளம்’ நரேன் போபனை ஒரு நாள் ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்கிறார். அங்கேயிருப்பவர்கள் போபனுக்கு ஒரு அஸைன்மெண்ட்டை கொடுக்கிறார்கள். அந்த அஸைன்மெண்ட்டை சரியாகச் செய்தால் 25 லட்சம் ரூபாயை தருவதாக வாக்குறுதியளிக்கிறார்கள்.

ஒரு பாடாவதி தியேட்டரின் கேண்டீனில் பாப்கார்ன் விற்று வரும் அரவிந்த்சாமியிடம் நெருங்கிப் பழக வேண்டும் என்பதுதான் அந்த அஸைண்மெண்ட்.

அரவிந்த்சாமி மிகப் பெரிய தங்கக் கடத்தல் கும்பலின் தலைவன். ஒரு முறை தன்னுடைய நெருங்கிய உதவியாளரான டேவிட்டுடன் உடுப்பிக்கு செல்கையில் எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தினால் படுகாயமடைந்து தனது பழைய நினைவுகளை எல்லாம் இழந்துவிட்டார்.

அரவிந்த்சாமி சென்ற காரில் 30 கோடி மதிப்புள்ள தங்கம் இருந்ததால் அதைக் கைப்பற்றுவதற்காக அரவிந்த்சாமியை பழைய நிலைமைக்குக் கொண்டு வர வேண்டும் என்று அவரது கூட்டாளிகள் நினைக்கிறா்கள். ஆனால் அரவிந்த்சாமி நினைவில்லை என்று நடிக்கிறாரோ என்ற சந்தேகமும் அவர்களுக்கு இருக்கிறது.

அதனால்தான் இப்போது முழு உண்மையையும் சொல்லாமல் பாதியை மட்டுமே போபனிடம் சொல்லி அரவிந்த்சாமியுடன் நெருங்கிப் பழகச் சொல்கிறார்கள். போபனும் பணம் கிடைக்கிறதே என்றெண்ணி அரவிந்த்சாமியுடன் நெருங்கிப் பழகுகிறார். அரவிந்த்சாமியை விபத்து நடந்த உடுப்பிக்கே நேரில் அழைத்துச் செல்கிறார்.

அங்கே அரவிந்த்சாமிக்கு நினைவுகள் திரும்பியதா.. இல்லையா.. போபன் என்னவானார்.. காணாமல் போன தங்கத்தைக் கண்டறிந்தார்களா என்பதுதான் இந்த சுவையான படத்தின் சுவாரஸ்யமான திரைக்கதை.

குஞ்சக்கோ போபன் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கும் நேரடி தமிழ்ப் படம் இது. அந்த வாலிப வயதுக்கேற்ற நடிப்பைக் காண்பித்திருக்கிறார். உண்மையில் அரவிந்த்சாமியுடன் பழகத் துவங்கி கடைசியாக அவரது அமைதியான குணத்தில் மயங்கி அட்டாச் ஆவதும், கோவாவில் மதுவருந்திவிட்டு உளறிவிட்டு பின்பு பயணத்தின்போது ஒவ்வொரு டிவிஸ்ட்டாக அவிழும்போது பயப்படுவதும், அவஸ்தைப்படுவதுமாக தனது சிறந்த நடிப்பைக் காண்பித்திருக்கிறார் போபன்.

படத்தின் கிளைமாக்ஸ் காட்சியைத் தவிர மற்றைய காட்சிகளில் அப்பாவியாய், அமைதியின் திருவுருவமாய் காட்சியளிக்கும் அரவிந்த்சாமி டான் ஆனவுடன் காட்டும் கெத்தும், காட்டும் உடல் மொழியும் அசர வைக்கிறது.

ஒரு காட்சியே ஆனாலும் ஜாக்கி ஷெராப்பின் அலட்டலான அந்த  நடிப்பு அசத்தல். போபனுடன் அடிக்கடி பிரெஞ்ச் கிஸ் கொடுத்து தனது உதட்டைப் புண்ணாக்கிக் கொள்ளும் ஈஷா ரெப்பா, கடைசியாகத் தனது இன்னொரு முகத்தைக் காட்டுவது டிவிஸ்ட்டுதான்.

“யாருப்பா அந்த அம்மணி?” என்று படம் பார்ப்போரை கேட்க வைத்திருக்கிறார் போபனுக்கு அஸைன்மெண்ட் கொடுக்கும் அமல்டா லிஸ். அவர் அமர்ந்திருக்கும் போஸிலேயே நம்மைக் கவர்ந்திழுக்கிறார். அவருடைய தோற்றமும், அழகும், காட்டும் உடல் மொழியும் ‘வாவ்’ என்று சொல்ல வைக்கிறது.

படத்தில் உண்மையான ஹீரோ யார் என்று கேட்டால் ஒளிப்பதிவாளரைத்தான் சொல்ல வேண்டும். படம் நெடுகிலும் அப்படியொரு ஒளிப்பதிவைக் காண்பித்திருக்கிறார். ரோட் ஷோவிலும், கோவா, உடுப்பியை அழகுற காட்டுவதிலும், கிளைமாக்ஸ் சண்டை காட்சி, மற்றும் ஜாக்கி ஷெராப்பின் பண்ணை வீட்டில் நடக்கும் துப்பாக்கிச் சண்டையிலும் பரபரவெனவிருக்கும் காட்சிகளை இழுத்து வைத்து பார்க்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர். இதற்காக சண்டை பயிற்சி இயக்குநருக்கும் ஒரு மிகப் பெரிய சல்யூட்டை அடிக்க வேண்டும்.

மேலும், கலை இயக்கம், உடைகள் வடிவமைப்பு, ஒலியமைப்பு, ஒலி சேர்ப்பு, ஒலி கலவை, இயக்கம் என்று அத்தனையிலும் இந்தப் படம் வளர்ந்து வரும் புதிய இயக்குநர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

படத்தின் கதை, திரைக்கதை, வசனம், நடிப்பு, இயக்கம் என்று அத்தனையிலும் இந்தப் படம் ஸ்கோர் செய்திருக்கிறது.

காதல், எமோஷன்ஸ், குடும்பம் என்று துவங்கி போகப் போக கொஞ்சம், கொஞ்சமாக டான் கதைக்குள் சென்று விரியத் துவங்கி.. கடைசியில் யார்தான் டான் என்பது தெரிய வரும்போது நமக்கு ஹார்ட் அட்டாக்கே வரும் அளவுக்கான அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது திரைக்கதை.

ஒரு புதுமையாக 3 பாகங்களாக இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால் இப்போது வெளியாகியிருக்கும் இந்தப் படம் 2-ம் பாகமாம். முதல் பாகம் அடு்த்து வெளிவருமாம். கடைசியாக 3-ம் பாகம் வருமாம். ஆச்சரியமாக இல்லை..?1

வித்தியாசமான சிந்தனையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த 2-ம் பாகத்தைப் பார்க்கும்போது முதல் பாகத்தையும், 3-ம் பாகத்தையும் பார்த்தாக வேண்டும் என்ற ஆர்வம் நமக்குள் மேலிடுகிறது. இதுதான் இந்தப் படத்தின் இயக்குநரின் திறமைக்குச் சான்று.

“டான் படங்களிலேயே டான் இதுதான்” என்று சொல்லும் அளவுக்கு அழுத்தமாக இயக்கம் செய்திருக்கிறார் இயக்குநர் பெலின். அவருக்கு நமது பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

RATING :  4.5 / 5

- Advertisement -

Read more

Local News