ராஜாமகள் – விமர்சனம்

ஹென்றி இயக்கத்தில் முருகதாஸ், பக்ஸ், ஃப்ராங்க்ளின், ப்ரிதிக்‌ஷா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் ராஜாமகள். ஒரு தந்தைக்கும் மகளுக்குமான பாசப்பிணைப்பை உணர்த்தும் படமாக வெளிவர இருக்கும் ராஜாமகள் என்ன கூற வருகிறாள் என்பதை இந்த விமர்சனம் மூலம் பார்த்து விடலாம்.

கதைப்படி,

ஒரு எளிமையான குடும்பத்தில் பிறந்து சென்னையில் வாடகைக்கு குடி இருப்பவர் தான் முருகதாஸ். இவரின் மனைவி தான் வெலினா. இவர்களுக்கு 7 வயது மகளாக வருகிறார் ப்ரதிக்‌ஷா.

பஜாரில் செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வரும் முருகதாஸ், அதில் வரும் வருமானத்தைக் கொண்டு தன் குடும்பத்தை கவனித்து வருகிறார். மகள் மீது அளவில்லா பாசம் வைத்திருக்கும் முருகதாஸ், தன் மகள் எதைக் கேட்டாலும் அதை முடியாது எனக் கூறாமல் உடனே வாங்கித் தந்து விடுகிறார்.

மகளுக்கு அப்பா மீதும், அப்பாவிற்கு மகள் மீதும் பாசப்பிணைப்பு இப்படியாக இருக்க, தனது உடன் படிக்கும் பணக்கார வீட்டு நண்பன் ஒருவனின் மிகப்பெரும் பங்களாவைப் பார்த்ததும் தனக்கும் இப்படி ஒரு பங்களா வீடு வேண்டும் என்று தனது அப்பாவிடம் கேட்கிறார் ப்ரதிக்‌ஷா.

அந்தச்சூழலில், தனது மகள் எதைக் கேட்டாலும் வாங்கித் தரும் முருகதாஸ், பங்களா போன்ற வீட்டையும் வாங்கித் தருவதாக கூறிவிடுகிறார். இதனால், ஒரு சில நாட்களில் பங்களாவிற்கு சென்று விடுவோம் என்ற கனவில் இருக்கிறாள் ப்ரதிக்‌ஷா.

ப்ரதிக்‌ஷாவின் கனவு நிறைவேறியதா.? முடியாது என்று ஒருநாளும் கூறாத தந்தை, தனது மகளின் ஆசையை நிறைவேற்றினாரா.?? என்பதே படத்தின் மீதிக் கதை.

ஆடுகளம்,குட்டிப்புலி என பல படங்களில் தனது கதாபாத்திரத்தின் நடிப்பில் முத்திரைப் பதித்த முருகதாஸ், இப்படத்திலும் தனது அனுபவ நடிப்பைக் கொடுத்து அசர வைத்திருக்கிறார்.

மகள் மீது அளவு கடந்த பாசத்தை வெளிக்காட்டும் இடத்திலாக இருக்கட்டும், தனது மகளின் ஆசையை நிறைவேற்ற முடியாமல் நிர்கதியாக நிற்கும் இடத்திலாக இருக்கட்டும் என பல இடங்களில் கைதட்டல் பெறும் நடிப்பைக் கொடுத்திருக்கிறார் முருகதாஸ்.

மகளை ஓடிச் சென்று அணைக்க முடியாமல் மரத்திற்கு பின்னால் நின்று கொண்டு கண்ணீர் சிந்தும் காட்சியில், படம் பார்ப்பவர்களின் கண்களிலும் ஈரத்தை எட்டிப் பார்க்க வைத்து விடுகிறார் முருகதாஸ். க்ளைமாக்ஸ் காட்சியும் அப்ளாஷ்…

படத்தின் அடுத்த பெரிய பில்லராக வந்து நிற்பவர் சிறுமியாக நடித்த ப்ரதிக்‌ஷா தான். கண் பார்வையிலேயே ஆயிரம் எக்‌ஷ்பிரஷன்களை கொண்டு வந்து நிற்கிறார் ப்ரதிக்‌ஷா. உண்மையான தந்தை மகளுக்கான பாசத்தை காட்டுவது போன்ற ஒரு உணர்வை கொண்டு வந்து நிறுத்தி விட்டார் ப்ரதிக்‌ஷா.,

தனது நண்பர்களுடன் சேர்ந்து இருக்கும் காட்சியில், காட்டும் முக பாவனைகள் கொஞ்சும் மழலையாக காட்சிக்கு அழகு சேர்த்திருக்கிறார் ப்ரதிக்‌ஷா.

கன்னிமாடம் படத்தில் அனைவரின் பாராட்டைப் பெற்ற நாயகி வெலினா, இப்படத்திலும் ஒரு குடும்பப் பெண்ணாக வந்து தனது கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார்.

சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும், தனக்கு கொடுக்கப்பட்டதை நச் என்று நடித்து கொடுத்திருக்கிறார் பக்ஸ். ப்ரதிக்‌ஷாவின் பள்ளி நண்பனாக நடித்திருக்கும் அந்த சிறுவனும் காட்சிக்கு அழகு சேர்க்கும் தனது நடிப்பைக் கொடுத்திருக்கிறார்..

கதையின் மூலக்கரு சிறியதாக இருந்தாலும், அதன் வலி வீரியமானது என்பதை கொண்டு எடுக்கப்பட்ட இந்த “ராஜாமகள்” கைதட்டல் பெறுகிறாள்.

மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமல்லாமல், சொந்த வீடு ஒன்று வாங்க இயலாமல், வாடகை வீட்டில் வசித்து தனது கனவு கனவாகவே போய்கிறதே என்று தினம் தினம் ஏங்கும் அப்பாமார்களுக்கு இது ஒரு இடத்தில் வலியைக் கொடுத்தால் அதுவே ராஜாமகளின் வெற்றியாக வந்து நிற்கும்.

கதையின் ஓட்டத்தை நன்றாகவே கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஹென்றி. இருந்தாலும், மகளின் ஆசையை நிறைவேற்ற ஒரே இடத்தில் ஓடிக் கொண்டிருக்கக் கூடிய காட்சியமைப்புகள் இரண்டாம் பாதியில் சற்று தொய்வடைய வைத்து விடுகிறது.

நிக்கி கண்ணனின் ஒளிப்பதிவு படத்தின் காட்சியை அழகூற கொடுத்திருக்கிறது. சங்கர் ரங்கராஜனின் இசை கதையின் ஓட்டத்திற்கு ஈடு கொடுத்திருக்கிறது.

பாசத்தையும் தாக்கத்தையும் கொடுத்த ராஜாமகளை கொண்டாடலாம்