‘ஆஸ்கர் நாயகன்’ ஏ.ஆர்.ரஹ்மான் திரைப்படங்களுக்கு இசையமைப்பதற்கு முன்பாக ஜிங்கிள்ஸ் எனப்படும் விளம்பரங்களுக்கு இசையமைக்கும் பணியைச் செய்து வந்திருக்கிறார்.
அந்த நேரத்தில் அவருடன் இணைந்து பணியாற்றி சுமார் 200 ஜிங்கிள்ஸ் பாடல்களுக்கு வரிகள் எழுதிய பாடலாசிரியர் பிறைசூடன், ரஹ்மான் இசையமைப்பாளரான பின்பு தங்களுக்கிடையிலான உறவு என்ன ஆனது என்பது பற்றி இப்போது ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.
“நானும் ரஹ்மானும் இணைந்து பல வருடங்கள் பணியாற்றினோம். அவர் விளம்பரப் பாடல்களுக்கு இசையமைக்கும்போது நான்தான் அதற்குப் பாடல்களை எழுதுவேன். அப்போதே அதற்கு சம்பளமாக ரஹ்மான் 5 லட்சம் ரூபாய் வாங்கினார்.
அவருடைய அம்மா ரஹ்மானை சினிமாவுக்கு இசையமைக்கும்படி சொல்லிக் கொண்டேயிருந்தார். ஆனால் ரஹ்மானுக்கு ஏனோ சினிமாவுக்கு இசையமைக்க விருப்பமே இல்லை.
அவருடைய முதல் பட வாய்ப்பு சங்கீத் சிவன் இயக்கிய ‘புத்தா’ என்ற டாக்குமெண்ட்ரி படம் வெளியான பின்பு கிடைத்தது. அவருடைய முதல் படமான ‘ரோஜா’வில் எனக்கு பாடல் எழுத வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஆனால், “நான் இசையமைக்கும் அடுத்தப் படத்தில் முழு பாடல்களும் நீங்கள்தான் எழுத வேண்டும்…” என்று என்னிடம் ரஹ்மான் சொல்லியிருந்தார்.
ஒரு நாள் இரவில் எனக்கு ரஹ்மானிடம் இருந்து போன் வந்தது. போனில் பேசிய ரஹ்மான், “இந்தக் கூட்டணியே நல்லாயிருக்கு. இதே கூட்டணில அடுத்தப் படமும் இணைந்தால் நல்லாயிருக்கும். அதுனால இந்தப் படத்துக்கும் வைரமுத்துவே எழுதட்டு்ம்’ன்னு எல்லாரும் சொல்றாங்க..” என்றார். “அடுத்தவங்க சொல்றது இருக்கட்டும். நீங்க என்ன நினைக்கிறீங்க..?”ன்னு கேட்டேன். “எனக்கும் வைரமுத்துவை வைச்சே எழுதலாம்ன்னுதான் தோணுது..” என்றார். “சரி. இனிமேல் நீங்க அழைக்காமல் என் கால் உங்க வீட்டில் படாது..” என்று சொல்லி போனை வைத்துவிட்டேன்.
அதற்குப் பிறகு தினமும் போய், வந்து கொண்டிருந்த ரஹ்மான் வீட்டிற்கு பல வருடங்களாக நான் போகவேயில்லை. ஒரு முறை ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் என்னைச் சந்தித்தார் ரஹ்மான். என்னிடம் நலம் விசாரித்தார். என் மனைவி, பிள்ளைகளையும் விசாரித்தார்.
இது நடந்த 2-து நாள் இரவு ரஹ்மானின் மேனேஜர் என்னை உடனடியாக ரஹ்மானின் ஸ்டூடியோவுக்கு வரச் சொன்னார். நானும் சென்றேன். அங்கே இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரும் உடன் இருந்தார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிக் கொண்டிருந்த ஒரு படத்திற்கு பாடல் எழுதச் சொன்னார் ரஹ்மான். எழுதினேன். அதன் பின்பு இன்னொரு படத்திற்கும் அழைத்து ஒரு பாடலைக் கொடுத்தார். அதையும் எழுதினேன். இப்படி அவருடைய இசையில் இரண்டே இரண்டு பாடல்களைத்தான் என்னால் எழுத முடிந்தது..” என்று சொல்லியிருக்கிறார்.