Friday, November 22, 2024

“கூட்டிக் கழிச்சுப் பாரு; கணக்கு சரியா வரும்’ – டயலாக் எப்படி வந்தது..?” நடிகர் ராதாரவியின் விளக்கம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ்ச் சினிமாக்களில் பல்லாண்டுகளாக நினைவில் நிற்கும்படியான வசனங்கள் இடம் பெற்றிருப்பது ஒரு சில திரைப்படங்களில்தான். அந்த ஒரு வசனமே அந்தப் படத்தின் பெயரைச் சொல்லும் என்பதை போல புகழ் பெற்ற வசனங்களும் உண்டு.

அந்த வகையில் ‘பாட்ஷா’ படத்தில் இடம் பெறும் ‘நான் ஒரு தடவை சொன்னா’ என்ற வசனம்போல் ரஜினியின் ‘அண்ணாமலை’ படத்தில் இடம் பெறும் ‘கூட்டிக் கழிச்சுப் பாரு.. கணக்கு சரியா வரும்’ என்ற டயலாக்கும் பெரும் பெயரைப் பெற்றது. ஆனால் இந்த டயலாக்கை பேசியவர் அந்தப் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் ராதாரவி.

இது குறித்து சமீபத்தில் ஒரு தனியார் யுடியூப் சேனலுக்கு ராதாரவி அளித்த பேட்டியில் இந்த வசனம் வெளிவந்த விதம் பற்றிய கதையை சுவாரசியமாகச் சொல்லியுள்ளார்.

அவர் இது பற்றிப் பேசும்போது, “பொதுவா நான் நடிக்கிற படங்கள்ல என்னோட மேக்கப், தோற்றம், மாடுலேஷன் இதையெல்லாம் சொந்தமா அமைச்சுக்குவேன். இயக்குநர்களும் என்கிட்ட அதை விட்ருவாங்க.. ஏன்னா.. என்னோட கேரக்டர் நல்லாயிருக்கணும்.. ரசிகர்கள்கிட்ட அது நல்லா ரீச் ஆகணும்ன்னு நினைப்பேன்.

அப்படித்தான் இந்த ‘அண்ணாமலை’ படத்துலேயும் நினைச்சேன். மேனரிசமா மார்லன் பிராண்டோ ‘காட்பாதர்’ படத்துல செஞ்ச மாதிரி தலைல சொரியறதை செய்யணும்ன்னு செஞ்சு பார்த்தேன். அப்புறம்தான் இதை ‘நாயகன்’ல கமல் செஞ்சுட்டாரேன்னு தோணுச்சு.. சரின்னு அப்படியே கையைப் பின்னாடி கொண்டு போய் அடிக்கடி முதுகைத் தேய்க்கிற மாதிரி பேசுறதை மேனரிசமா வைச்சுக்கிட்டேன்.

அப்புறம் ரஜினி ஸார் அடிக்கடி என்கிட்ட ‘இதுல டிரேட் மார்க்கா வர்ற மாதிரி ஏதாவது டயலாக்கை பிடிங்க’ன்னு சொல்லிக்கிட்டே இருந்தாரு. நானும் அது பத்தியே யோசனை செஞ்சுக்கிட்டிருந்தேன். அந்த யோசனைல வந்ததுதான் நிழல்கள் ரவிகிட்ட நான் பேசுற அந்த ‘கூட்டிக் கழிச்சுப் பாரு.. கணக்கு சரியா வரும்’ என்ற டயலாக். இது நல்லாயிருந்ததால படம் முழுக்க வைச்சுக்கிட்டாங்க..

ஆனால், இந்த டயலாக் என்னோடதுல்ல.. ‘படிக்காத மேதை’ படத்துல வந்த வசனம்தான். அந்தப் படத்துல சிவாஜி அப்பாவை வீட்டைவிட்டு துரத்திருவாங்க. அவருக்கு வேற வேலையும் தெரியாது. எங்க போறதுன்னு தெரியாம இருக்கிறவரை துரைசாமின்ற நடிகர் மம்மட்டி வேலைக்குக் கூட்டிட்டு வருவாரு.. அதைப் பார்த்திட்டு சிவாஜி அப்பா.. ‘இதை வைச்சு என்ன செய்றது’ன்னு அப்பாவியா கேப்பாரு. அப்போ துரைசாமி அதை வைச்சு எப்படி மண்ணு தோண்டுறதுன்னு சொல்லிக் கொடுத்திட்டு.. ‘வாழ்க்கைல இதெல்லாம் சகஜம்.. தெரியாததையெல்லாம் தெரிஞ்சுக்க வேண்டி வரும். கத்துக்கிட்டுத்தான் ஆகணும்.. கூட்டிக் கழிச்சுப் பாரு.. கணக்கு புரியும்’ன்னு சொல்லுவாரு..

அந்த டயலாக் இந்த நேரத்துல எனக்கு சட்டுன்னு ஞாபகம் வந்தது.. உடனேயே அப்படியே பக்குன்னு பிடிச்சுட்டேன். இத்தனை வருஷம் கழிச்சும் இன்னிக்கும் ஒரு வில்லன் நடிகர் பேசுன டயலாக்குக்கு இத்தனை மாஸ் இருக்குறதை நினைச்சா ரொம்பவும் பெருமையா இருக்கு..” என்றார் பெருமையோடு..!

- Advertisement -

Read more

Local News