அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் ஆஸ்கர் விருது போட்டியில் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படமும் போட்டியிடவிருக்கிறது.
ஆஸ்கர் விருதுக்கான சர்வதேச திரைப்படப் பிரிவில் போட்டியிட இந்த வருடம் இந்தியா சார்பில் இயக்குநர் ராஜமௌலியின் ‘RRR’, ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’, ‘ராக்கெட்ரி’ போன்ற படங்களில் ஏதாவது ஒன்று தேர்வாகும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. மேலும் ஹாலிவுட்டின் முன்னணி இயக்குநர்கள் பலரும் ‘RRR’ படத்தை சிலாகித்துப் பேசியிருந்ததால், இந்தியா சார்பாக நிச்சயமாக அந்தப் படமே ஆஸ்கர் விருதுப் போட்டிக்குச் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் அதிர்ச்சி செய்தியாக குஜராத் திரைப்படமான ‘Chhello Show’ படம் இந்தியா சார்பாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த இயக்குநர் ராஜமெளலி தனது ஆர்.ஆர்.ஆர். படத்தை ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் தனிப்பட்ட முறையில் கட்டணம் செலுத்தி இடம் பெறச் செய்யத் தீவிரமான முயற்சியில் இறங்கியுள்ளார்.
இப்படத்தை சிறந்த படம், சிறந்த இயக்குநர் (ராஜமௌலி), சிறந்த நடிகர் (ஜூனியர் NTR, ராம் சரண்), சிறந்த துணை நடிகர் (அஜய் தேவ்கன்), சிறந்த துணை நடிகை (அலியா பாட்), சிறந்த ஒரிஜினல் திரைக்கதை, சிறந்த பின்னணி இசை, சிறந்த பாடல், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த vfx, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த ஒப்பனை மற்றும் அலங்காரம், சிறந்த பாடல் (நாட்டு நாட்டு), சிறந்த ஆடை வடிவமைப்பு ஆகிய 15 பிரிவுகளில் போட்டிக்கு விண்ணப்பித்துள்ளார் இயக்குநர் ராஜமெளலி.
இதற்காக ‘For your consideration (FYC)’ என்ற விளம்பர யுக்தி மூலம் ஆஸ்கர் விருது கமிட்டியைச் சேர்ந்த உலகளாவிய திரைத் துறையினருக்கு ‘RRR’ திரைப்படத்தை திரையிட்டுக் காட்டி வருகிறார்.
வெற்றி கிட்டட்டும்..!