Friday, April 12, 2024

‘புஷ்பா’ படத்தின் பாடலுக்கு ஆண்கள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அல்லு அர்ஜூன் நடித்துள்ள ‘புஷ்பா’ படம் நாளை வெளியாகவிருக்கும் நிலையில் அப்படத்தில் இடம் பெற்றிருக்கும் இரண்டு பாடல்கள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன.

அதிலும் சமந்தா ஆடியிருக்கும் குத்துப் பாடலான ‘ம்’ சொல்றியா மாமா… ம்ஹூம் சொல்றியா மாமா’ பாடலுக்கு ஆண்கள் தரப்பில் இருந்தே எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்தப் பாடலால் தங்கள் மானத்துக்கு ஆபத்து வந்துள்ளதாக பல ஆண்கள் சமூக வலைத்தளங்களில் புலம்பி வருகின்றனர்.

இது குறித்து இந்தப் பாடலை எழுதிய கவிஞர் விவேகாவிடம் பேசியபோது, “தெலுங்கில் இந்த பாடல் வேறு மாதிரியாக இருந்தது. ‘கருப்போ சிவப்போ, ஆனால் நீ சந்தோஷமாக இரு! நீ குள்ளமா நெட்டையோ யாராவது உன்னை பார்த்தால் குதூகலமாக இரு!’ என்ற போன்ற பொருள் வரும் வகையில்தான் அந்த பாடல் முதலில் அமைந்திருந்தது.

‘எந்த தடையும் இல்லை. ஜாலியாக எழுதி கொடுங்கள்’ என்றுதான் என்னிடம் தேவிஸ்ரீபிரசாத் சொல்லியிருந்தார். நானும் அந்தப் பாடலைப் பார்த்துவிட்டு தமிழ்ப் பாடலுக்கு ஒரு பிரதியை எழுதி கொடுத்தேன். நான் எழுதிய தமிழ் வரிகளில் ‘ஆம்பள புத்தி’ என்ற வார்த்தை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. மேலும், ‘வெளக்க அணைச்சா போதும் எல்லா வெளக்கமாறும் ஒண்ணுதான்’ என்ற வரியோடு முடித்திருந்தேன்.

அதைப் பார்த்ததும் இன்னும் கூடுதல் சந்தோஷம் அவருக்கு. “பிரமாதம்” என என்னை பாராட்டியவர், “இந்த மாதிரியான கான்செப்ட்டில்தான் இந்தப் பாடல் வேண்டும்” என்று சொல்லியதோடு தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் ‘ஆம்பள புத்தி’ உள்ளிட்ட சில வரிகளில் மாற்றங்கள் செய்தார்கள். இப்படி ஒரு வித்தியாசமான பாடலாக செய்தது ரசிகர்களுக்கும் பிடித்திருக்கிறது…” என்றார்.

“இந்தப் பாடல் தொடர்பாக ஆண்கள் சங்கத்தினர் சிலர் புகார் எழுப்பியுள்ளார்களே..” என்று கேட்டபோது, “ஆண்கள் சங்கம் என்ற அமைப்பை இதற்கு முன்பு நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா..? சரி, அந்த ஆண்கள் சங்கத்தை எதற்கு வைத்திருக்கிறார்கள்..? இதற்கு முன்பு ஆண்களுக்காக எதற்காக இந்தச் சங்கத்தினர் போராடி இருக்கிறார்கள்? ஆண்களில் அயோக்கியர்கள் பலர் குழந்தைகளை பாலியல் வன்கொடுமைகளுக்கு உட்படுத்தி இருக்கிறார்கள். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஆண்களால்தான் நடத்தப்பட்டு வருகிறது. இதையெல்லாம் எதிர்த்து இவர்கள் இதற்கு முன்பாகக் குரல் கொடுத்திருக்கிறார்களா?” என்று எதிர்க் கேள்வி எழுப்பினார்.

- Advertisement -

Read more

Local News