Friday, April 12, 2024

“தயாரிப்பாளர் சங்கத்தினர் சிம்புவை முடக்கப் பார்க்கிறார்கள்” – உஷா ராஜேந்தர் குற்றச்சாட்டு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சிம்புவை நடிக்கவிடாமல் அவரைத் திரையுலகத்தில் முடக்கி வைக்கும்விதமாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் செயல்படுவதாக சிம்புவும் தாயாரும், தயாரிப்பாளரும், நடிகையுமான உஷா ராஜேந்தர் குற்றம் சாட்டியுள்ளார்.

சிம்பு பல தயாரிப்பாளர்களுக்குப் பணம் தர வேண்டியிருப்பதால் அந்த விவகாரத்தில் ஒரு முடிவுக்கு வராமல் சிம்பு நடிக்கும் எந்தப் படத்தையும் துவக்கக் கூடாது என்று தயாரிப்பாளர்கள் சங்கம் மறைமுகமாகத் தடை சொல்லியிருக்கிறது.

சிம்பு தற்போது நடித்து வரும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் படப்பிடிப்பிற்கும் முதலில் தடை விதித்தது தயாரிப்பாளர்கள் சங்கம். ஆனால், பெப்சியின் உதவியுடன் அந்தப் படப்பிடிப்பை வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட்டார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.

அந்தப் படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் இன்னும் சில நாட்களில் துவங்கவுள்ளது. இந்தப் படப்பிடிப்புக்குத் தடை போடுவதற்காக தயாரிப்பாளர் சங்கம் மும்முரமாக இருக்கிறது.

இந்த நேரத்தில் நேற்று மாலை மீண்டும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இது குறித்து பேச்சுவார்த்தைக்கு வருமாறு உஷா ராஜேந்தருக்கு அழைப்பு வந்தது. இதற்காக தயாரிப்பாளர் சங்கத்திற்கு வந்த உஷா ராஜேந்தர் பேச்சுவார்த்தை முடிந்த பின்பு பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசும்போது, “சிம்பு மீது புகார் கொடுத்திருந்த 4 தயாரிப்பாளர்களின் புகார்களில் 3 புகார்கள் பேசி முடிக்கப்பட்டுவிட்டது. அந்தப் பிரச்சினையும் முடிவுக்கு வந்துவிட்டது. இப்போது இருப்பது ஒரேயொரு புகார்தான். அது தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனின் புகார். அதுவொரு பொய்யான புகார்.

அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தில் ஏ டூ இஸட்வரையிலும் சிம்புதான் இருப்பார். முதல் காட்சியில் இருந்து கிளைமாக்ஸ்வரையிலும் அவர் இருப்பார். அப்புறம் எப்படி அவர் அந்தப் பட ஷூட்டிங்கில் கலந்து கொள்ளாமல் இருந்திருப்பார். எப்படி அவருக்குப் பதிலாக டூப் போட்டிருப்பார்கள்..? இது பொய்யான குற்றச்சாட்டு.

மைக்கேல் ராயப்பன் மீது 2019-ம் ஆண்டிலேயே சிம்பு நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடுத்திருக்கிறார். அந்த வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது. இந்த நிலைமையில் அதே வழக்கிற்காக தயாரிப்பாளர் சங்கம் கட்டப்பஞ்சாயத்து செய்யலாமா.. இது சட்டப்படி தப்பில்லையா.. இதை நாங்கள் கோர்ட்டின் கவனத்திற்கு எடுத்துச் செல்வோம்.

சிம்பு நடிக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் ஷூட்டிங் இன்னும் நாட்களில் துவங்கவுள்ளது. இப்போது செட் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் படப்பிடிப்புக்கு தயாரிப்பாளர் சங்கம் தடை விதிக்கும் என்று சொல்கிறார்கள்.

எப்படியாவது சிம்புவை நடிக்கவிடாமல் அவரை வீட்டிலேயே முடக்கி வைத்துவிடலாம் என்று இந்தத் தயாரிப்பாளர் சங்கத்தினர் நினைக்கிறார்கள். அது நடக்காது.. சிம்பு நிச்சயமாக எல்லாவற்றையும் தாண்டி ஜெயிப்பார்..” என்றார் உஷா ராஜேந்தர்.

- Advertisement -

Read more

Local News