ஒரு தயாரிப்பாளர் ஒரு நாளில் தனது படத்தைத் திரைக்குக் கொண்டு வரும்போது உடன் பல நடிகர்கள் நடித்த படங்களும் வரத்தான் செய்யும். இது சின்ன பட்ஜெட் படங்களுக்கு ஓகே. ஆனால் பெரிய பட்ஜெட்டில் எடு்க்கப்படும் படங்களுக்கு.. அதுவும் பெருவாரியான ரசிகர்கள் ஆதரவு பெற்ற ஒரு நடிகர் நடித்த இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியானால் என்ன நடக்கும்..? குழப்பம்தான் மிஞ்சும்.
அப்படியொரு சிச்சுவேஷனை தற்போது தொட்டிருக்கிறது இந்தியாவின் மெகா ஹிட் இயக்குநரான எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கியிருக்கும் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படமும், போனி கபூர் தயாரித்து வரும் ‘மைதான்’ என்ற படமும்.
இந்த இரண்டு படங்களுமே அதிகப்படியான பட்ஜெட்டில் உருவாகியிருப்பதும், இந்த இரண்டு படங்களிலும் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரமான அஜய் தேவ்கனும் நடித்திருப்பதுதான். அதிலும் ‘மைதான்’ படத்தில் அஜய் தேவ்கன்தான் நாயகன். ஆனால் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தில் மூன்றாவது நாயகனாகவும் நடித்திருக்கிறார்.
இதனால் இந்த இரண்டு படங்களையும் ஒரே நாளில் கொண்டு வந்தால் தனக்குத் தலைவலி என்று நினைத்த போனி கபூர், கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே அஜய் தேவ்கன் மூலமாக ராஜமெளலியிடம் ‘நம் இரண்டு படங்களின் ரிலீஸ் தேதியை நாம் இருவருமே இணைந்து பேசி முடிவு செய்வோம்’ என்று..!
ஆனால் இப்போது ராஜமெளலி தன்னிச்சையாக ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம் ‘தசரா விடுமுறை தினத்தில் வெளியாகும்’ என்று அறிவித்துவிட.. போனி கபூர் கடும் அதிர்ச்சியாகிவிட்டார். இவர் மட்டுமல்ல.. நடிகர் அஜய் தேவ்கனும்கூடத்தான்.
அவரும் இது பற்றி ராஜமெளலியிடம் முன்பே பேசியிருந்தாராம். ஆனால் தனது அக்ரிமெண்ட்டில் அது பற்றி அவர் குறிப்பிடாததால், அவரால் இப்போது எதுவும் செய்ய முடியாத நிலைமை.
போனி கபூர் இது பற்றிக் கூறுகையில், “நான் ஆறு மாதங்களுக்கு முன்பாகவே மைதான் ரிலீஸ் தேதியை அறிவிக்க இருந்தேன். இந்தக் கொரோனா காலத்தினால் தள்ளி வைத்து இந்த இண்டஸ்ட்ரியையும் காப்பாற்றி, அனைவரது பணத்தையும் காப்பாற்றித் தர நினைத்துதான் காத்திருந்தேன். ஆனால், ராஜமெளலி என்னை ஏமாற்றிவிட்டார்..” என்று சொல்லியிருக்கிறார்.
ராஜமெளலியோ தனக்கு இந்தத் தேதியைவிட்டால் வேறு தேதிகள் தென்னிந்தியாவில் கிடைக்காது என்பதால் தசரா விடுமுறையில் வர வேண்டிய கட்டாயம் என்று சொல்லிவிட்டாராம்..!
ஆக.. அஜய் தேவ்கனின் நிலைமைதான் திண்டாட்டம்.. இரண்டு பக்கமும் பேச முடியாமல் தவிக்கிறாராம்..!