நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் விநியோகஸ்தர் என பல துறைகளிலும் திறமையை வெளிப்படுத்தி வருகிறார் பிரித்விராஜ். கடந்த பத்து ஆண்டுகளில் மலையாள திரையுலகை தாண்டி, தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி (பாலிவுட்) திரைப்படங்களில் மாறி மாறி பங்கேற்று பணியாற்றி வருகிறார். சமீபத்தில் அவரின் இயக்கத்தில், மோகன்லால் நடித்த ‘எம்புரான்’ திரைப்படம் வெளியானது. அதன் பிறகு, மலையாளத்தில் தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பிரித்விராஜ். இதில், பிரித்விராஜ் மற்றும் பார்வதி நடிக்கும் ஒரு புதிய படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், தற்போது ஹிந்தியில் உருவாகும் ‘தாய்ரா’ எனும் புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் பிரித்விராஜ். இதில் கதாநாயகியாக பிரபல நடிகை கரீனா கபூர் நடிக்கிறார். ‘ராசி’, ‘தல்வார்’, ‘சாம் பகதூர்’ போன்ற திரைப்படங்களை இயக்கிய மேக்னா குல்சார் என்ற பெண் இயக்குநர் இந்த படத்தையும் இயக்குகிறார். இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கான காரணத்தை பற்றி பேசும் போது கரீனா கபூர், “பொதுவாக நான் இயக்குநர்களின் நடிகை தான். ஆனால், இந்த படத்தில் பிரித்விராஜ் நடிக்கிறார் என்பதாலே எனக்கு அந்த ஆர்வம் வந்தது” என்று கூறினார்.
இதேபோல், நடிகர் பிரித்விராஜ் இந்த படம் குறித்தும் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். “சில கதைகள் உங்களிடம் கூறப்படும்போது, அவை உங்கள் மனதிற்குள் பதிந்து விடும். தாய்ரா என்பது அப்படிப்பட்ட ஒரு கதை. மேக்னா குல்சார், கரீனா கபூர் மற்றும் ஜங்கிள் பிக்சர்ஸுடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது” என்றார்.