மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு , பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்த படம், மாமன்னன். ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவர் பெரும் போராட்டத்துக்குப் பிறகு சபாநாயகர் ஆவதுதான் கதை. இதை புரட்சிகரமான படம் என பாராட்டுவோரும் உண்டு. விமர்சிப்போரும் உண்டு.
இந்நிலையில் படம் குறித்து இயக்குநர் லீனா மணிமேகலை தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் ‘மாரி செல்வராஜ் அல்லது பா.ரஞ்சித் படங்களை விமர்சித்தால் போதும்… நீங்கள் உங்கள் வாழ்க்கையையே சாதி ஒழிப்பிற்கு ஒப்புக் கொடுத்திருந்தாலும் சாதி வெறியர் பட்டம் கிடைத்துவிடும்.
ஆணாதிக்கம், வன்முறை, சாதிப்பெருமை கொண்ட ‘கர்ணன்’ படத்தை பேசினாலோ, ‘நட்சத்திரம் நகர்கிறது’ போன்ற பாசாங்கான அரைவேக்காட்டு பெண்ணியப் படத்தைக் குறித்து பேசும்போதோ, இப்படி பட்டங்கள் வந்துவிடுகின்றன.
கலை நேர்மையை எல்லாம் மூட்டை கட்டிவிட்டு இவர்கள் செய்வதையெல்லாம் வானளாவ புகழ்ந்துவிட்டால் போதும், சாதி எதிர்ப்பு போராளி என பெயர் வாங்கிவிடலாம்.
மற்றபடி களத்தில், கருத்தியலில் எல்லாம் வேலை செய்ய வேண்டியதில்லை என்கிற நிலை ஏற்பட்டு விட்டது.
வியாபார சினிமாவை எடுத்து, சாதி ஒழிப்பு போராளியாக முகம் காட்டுபவர்களை புகழ்வது ஒரு அவல நாடகம்” என இயக்குநர் லீனா மணிமேகலை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் காட்டமாக பதிவிட்டுள்ளார்.