Saturday, April 13, 2024

பூர்ணிமா பாக்யராஜ் தவறவிட்ட ‘புன்னகை மன்னன்’ திரைப்படம்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘புன்னகை மன்னன்’ படத்தில் நடிக்க வைப்பதற்காக ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரால் தேர்வு செய்யப்பட்டவர் நடிகை பூர்ணிமா பாக்யராஜ் என்கிற ருசிகரத் தகவல் வெளியாகியுள்ளது.

‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சியில் இயக்குநர் சித்ரா லட்சுமணனுக்கு அளித்திருக்கும் பேட்டியில் நடிகை பூர்ணிமா பாக்யராஜ் இதனைக் கூறியுள்ளார்.

“நான் மும்பையில் 11-ம் வகுப்பு படிச்சிட்டிருக்கும்போதுதான் என்னை சென்னைக்கு வரவழைத்து மேக்கப் டெஸ்ட் எடுத்தார் கே.பி. அப்போது அவர் ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தை தெலுங்குல எடுத்துக்கிட்டிருந்தார். அந்த செட்டுலதான் எனக்கும் மேக்கப் டெஸ்ட் நடந்தது.

சுந்தரமூர்த்திதான் முதல் மேக்கப் போட்டார். கிரிஜா மாஸ்டர்தான் எனக்கு டான்ஸ் டெஸ்ட் எடுத்தார். ‘தப்புத் தாளங்கள்’ படத்துல வர்ற மூணு சீன்களைக் கொடுத்து டயலாக் படிச்சு நடிச்சுக் காண்பிக்கச் சொன்னார். எல்லாத்தையும் செஞ்சேன்.

‘கொஞ்சம் காத்திரும்மா.. நீதான் நடிக்குற.. எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டு கூப்பிடுறேன்’னு சொன்னார். ஆனால் கூப்பிடலை.. நானும் 2 வருஷமா வேற எந்தப் படத்துலேயும் கமிட் ஆகாமல் காத்திருந்தேன். அப்போ கமல் ஸாருக்கு 2 முறை காலில் பிராக்சர் ஆனதால், பட பிராஜெக்ட் தள்ளிப் போயிக்கிட்டே இருந்தது.

அந்தச் சமயத்துலதான் எனக்கு மலையாளத்துல ‘மஞ்சிள் விரிந்த பூக்கள்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. அதையும் கே.பி. ஸார்கிட்ட சொல்லிட்டு்த்தான் போய் நடிச்சேன்.

அந்தப் படம் மலையாளத்து பெரிய ஹிட்டானவுடனேயே அங்கயே நிறைய படங்கள் எனக்கு புக்காச்சு.. அப்படியே டைம் போயிருச்சு.. தமிழ்ல தொடர்ந்து அதுக்கப்புறம் நிறைய நடிக்க ஆரம்பிச்சிட்டேன். கடைசீல நான் கல்யாணம் பண்ணிட்டு போனப்புறம்தான் ‘புன்னகை மன்னன்’ படத்தையே கே.பி. ஸார் ஆரம்பிச்சார்.

அவரோட மோதிரக் கையால குட்டுப் பட்டுத்தான் திரையுலகத்துல பிரவேசம் செய்யணும்ன்னு நினைச்சேன். பட்.. முடியலை.

ஆனால், நான் வாங்கின முதல் பிலிம்பேர் அவார்டை அவர்தான் எனக்குக் கொடுத்தார். 1981-ம் வருடம் நான் நடிச்ச ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்திற்காக சிறந்த தமிழ் நடிகைக்கான விருதும், ‘ஓலங்கள்’ மலையாளப் படத்துக்காக சிறந்த மலையாள நடிகைக்கான விருதும் ஒரே மேடையில கிடைச்சது.

அப்போ அவார்டை என் கைல கொடுத்திட்டு.. ‘நான் மிஸ் பண்ணின பொண்ணு இவ..’ என்று சொல்லி என்னை அறிமுகப்படுத்தினார் கே.பி.” என்று சொல்லியிருக்கிறார் பூர்ணிமா பாக்யராஜ்.

பூர்ணிமா பாக்யராஜின் திருமணம் 1984-ம் ஆண்டு நடந்தது. ‘புன்னகை மன்னன்’ திரைப்படம் 1986-ல்தான் தயாராகி வெளியானது. ஒருவேளை பூர்ணிமாவுக்கு அதுவரையிலும் திருமணமாகாமல் இருந்திருந்தால் ‘புன்னகை மன்னன்’ படத்தில் அவரே நடித்திருக்கலாம்..!

- Advertisement -

Read more

Local News