லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான சுபாஸ்கரனுக்காக, இயக்குநர் மணிரத்னத்தின் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தில் வந்தியத் தேவனாக கார்த்தி, அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, ஆதித்த கரிகாலனாக விக்ரம், மதுராந்தகனாக ரகுமான், சுந்தர் சோழராக பிரகாஷ்ராஜ், பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சின்னப் பழுவேட்டரையராக பார்த்திபன், பார்த்திபேந்திரனாக விக்ரம் பிரபு, முதல் மந்திரி அநிருத்தப் பிரம்மராயராக மோகன்ராமன், ஆழ்வார்க்கடியனாக ஜெயராம், வீரபாண்டியனாக நாசர், ரவிதாசனாக கிஷோர், சேந்தன் அமுதனாக அஸ்வின் கக்கமானு, ராஷ்டிரகூட மன்னனாக பாபு ஆண்டனி, சம்புவரையராக நிழல்கள் ரவி, கந்தன் மாறனாக விக்ரம் பிரபு, லால், விஜய் யேசுதாஸ், அர்ஜூன் சிதம்பரம், நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக த்ரிஷா, வானதியாக சோஷித துலிபலா, பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமி, செம்பியன் மாதேவியாக ஜெயசித்ரா, வினோதினி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இசை – ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவு – ரவிவர்மன், தயாரிப்பு வடிவமைப்பு – தோட்டா தரணி, படத் தொகுப்பு – கர்பிரசாத், கதை – கல்கி, திரைக்கதை – மணிரத்னம், ஜெயமோகன், குமரவேல், வசனம் – ஜெயமோகன், பாடல்கள் – இளங்கோ கிருஷ்ணன், கபிலன், சிவ ஆனந்த், கிருத்திகா நெல்சன், சண்டை இயக்கம் – ஷாம் கெளஸல், திலீப் சுப்பராயன், கெச்சா கம்பாக்டீ, நடன இயக்கம் – பிருந்தா, உடைகள் – ஏகோ லகானி, ஒப்பனை – விக்ரம் கெய்க்வாட், நகைகள் – கிரிஷ்ணதாஸ் அண்ட் கோ, விளம்பரம் – ராகுல் நந்தா, பத்திரிகை தொடர்பு – ஜான்ஸன், யுவராஜ், VFX – NYVFXWALLAH, DI – Red Chillies Entertainment, தயாரிப்பு நிர்வாகம் – சிவ ஆனந்த், தயாரிப்பு – சுபாஷ்கரன், மணிரத்னம், இயக்கம் – மணிரத்னம்.
கி.பி.957 முதல் 970-ம் ஆண்டுவரையிலும் தஞ்சையை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்த சுந்தர சோழரின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை மையமாகக் கொண்டு அமரர் கல்கி அவர்களால் எழுதப்பட்ட ‘பொன்னியின் செல்வன்’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் இது.
இந்தக் கதை ‘கல்கி’ இதழில் 1950-ம் ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி முதல் 1954-ம் ஆண்டு மே 16-ம் தேதிவரையிலும் வெளிவந்தது. அதே ஆண்டிலேயே முதல்முறையாக 5 பாகங்களாக இந்தக் கதை புத்தகங்களாக வெளியிடப்பட்டது.
எம்.ஜி.ஆர்., சிவாஜி, கமல், ரஜினி என்று அனைவருமே நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, முடியாமல் போன கதை இது. கடைசியாக தற்போது லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் புண்ணியத்தில், இயக்குநர் மணிரத்னத்தால் இந்தக் கதை படமாக உருவாகியுள்ளது.
கதை துவங்கும் காலக்கட்டம் சுந்தர சோழரின்(பிரகாஷ்ராஜ்) அந்திமக் காலம். உடல் நலிவுற்று இருக்கும் சுந்தர சோழர், தஞ்சை அரண்மனையில் வசித்து வருகிறார்.
இவருடைய மூத்த மகனான ஆதித்த கரிகாலன்(விக்ரம்) ராஷ்டிரகூட(கன்னட தேசம்) நாட்டின் மீது படையெடுத்துச் சென்று அந்த நாட்டைக் கைப்பற்றுகிறான்.
இன்னொரு மகனான அருள்மொழி வர்மன் என்னும் பொன்னியின் செல்வன்(ஜெயம் ரவி) இலங்கை மீது படையெடுத்துச் சென்றிருக்கிறான். மகளான குந்தவை பழையாறை அரண்மனையில் வசித்து வருகிறாள்.
இந்தச் சூழலில் கடம்பூரில் இருக்கும் சம்புவரையர் மாளிகையில் சிற்றரசர்கள் ஒன்றுகூடி சோழ பேரரசரான சுந்தர சோழருக்கெதிராக ஏதோ சதி திட்டம் தீட்டுவதாக ஆதித்த கரிகாலனுக்கு செய்தி வருகிறது.
இதையடுத்து ஆதித்த கரிகாலன் தன்னுடன் இருக்கும் தனது நெருங்கிய நண்பனான வந்தியத்தேவனை உடனடியாக கடம்பூருக்கு சென்று அந்த சதி திட்டம் என்னவென்பதை அறிந்து, தஞ்சைக்கு சென்று தனது தந்தையான சுந்தர சோழரையும், தங்கை குந்தவையையும் பார்த்து சொல்லும்படி உத்தரவிடுகிறார்.
பட்டத்து இளவரசரான ஆதித்த கரிகாலனின் உத்தரவையேற்று வந்தியத்தேவன் கடம்பூர் சம்புவரையர் மாளிகைக்கு வருகிறான்.
அங்கே சோழ தேசத்தின் நிதியமைச்சரான பெரிய பழுவேட்டரையர்(சரத்குமார்) தலைமையில் சிற்றரசர்கள் ஒன்று கூடி “சுந்தர சோழருக்குப் பின்பு அரசராக வருவதற்கு சுந்தர சோழரின் பெரியப்பா மகனான மதுராந்தகன் என்னும் உத்தமசோழனுக்கே(ரகுமான்) உரிமையுண்டு. எனவே தற்போதைய பட்டத்து இளவரசனான ஆதித்த கரிகாலனுக்கு முடிசூட்டாமல் மதுராந்தகனுக்கு முடி சூட்ட வேண்டும். இதற்கு சுந்தர சோழர் சம்மதம் தெரிவிக்காவிட்டால் வேறு வழிகளைக் கையாள்வோம்…” என்று பேசி முடிவெடுக்கிறார்கள்.
இதைக் கேட்ட வந்தியத்தேவன் தஞ்சாவூருக்கு விரைந்து செல்கிறான். வழியில் பெரிய பழுவேட்டரையரின் மனைவியான நந்தினியை(ஐஸ்வர்யா ராய்) எதிர்பாராமல் சந்திக்கிறான். அவளிடத்தில் மோதிர லச்சனத்தைப் பெற்றுக் கொண்டு அதன் மூலமாகவே தஞ்சை அரண்மனைக்குள் நுழைகிறான்.
அரண்மனையில் சக்கரவர்த்தி சுந்தர சோழரை சந்தித்து கடம்பூர் மாளிகையில் நடந்தவைகளைச் சொல்லி அரசரை எச்சரிக்கிறான் வந்தியத்தேவன். ஆனால் அவன் மீது சந்தேகப்படும் சின்னப் பழுவேட்டரையர்(பார்த்திபன்) வந்தியத்தேவனை சிறைப்படுத்த முனைகிறார்.
அங்கேயிருந்து தப்பிக்கும் வந்தியத்தேவன் பழையாறைக்கு வந்து அங்கேயிருக்கும் குந்தவையைச் சந்தித்து நடந்தவைகளை ஒப்பிக்கிறான். குந்தவையோ தற்போது இலங்கையில் இருக்கும் தனது தம்பியான அருண்மொழி வர்மனை பத்திரமாக தன்னிடம் அழைத்து வரும்படி ஒரு பொறுப்பை ஒப்படைக்கிறாள். இளவரசியின் உத்தரவுக்கிணங்க சமுத்திரராணி(ஐஸ்வர்யா லட்சுமி)யின் உதவியோடு இலங்கைக்கு செல்கிறான் வந்தியத்தேவன்.
இங்கே தஞ்சாவூரில் பெரிய பழுவேட்டரையரின் ஏற்பாட்டில் மதுராந்தகனை அடுத்த அரசனாக்குவதற்கான சதித் திட்டங்கள் நடக்கிறது. இந்த சதியின் ஒரு பகுதியாக நந்தினியின் தூண்டுதலால் “இலங்கையில் இருக்கும் அருண்மொழி வர்மனை கைது செய்தாவது அழைத்து வர வேண்டும்” என்று அரசரின் உத்தரவு பெறப்பட்டு சோழப் படை வீரர்கள் இலங்கைக்கு செல்கிறார்கள்.
இன்னொரு பக்கம் ராஷ்டிரகூட நாட்டில் இருக்கும் ஆதித்த கரிகாலன், “நான் எந்தக் காரணத்தை முன்னிட்டும் தஞ்சைக்கு வர மாட்டேன்” என்கிறான். குந்தவை நேரில் சென்று அழைத்தும் அவன் வர மறுக்கிறான். இப்படியான குழப்பத்தில் நாடு இருக்கும் சூழலில் அருண் மொழி வர்மன் தஞ்சாவூர் திரும்பினானா..? ஆதித்த கரிகாலன் ஏன் தஞ்சைக்கு வர மறுக்கிறான்..? மதுராந்தகனை அரியணை ஏற்றும் திட்டம் என்னவானது என்பதுதான் இந்த ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகத்தின் திரைக்கதை.
நாவலில் வரும் வந்தியத்தேவன் கதாபாத்திரம் பெண்கள் அதிகம் விரும்பப்படும் குணாதிசயம் கொண்டவனாகவும், வீரனாகும், நன்றியுள்ளவனாகவும், சிறந்த காதலனாகவும், நகைச்சுவை உணர்வு உள்ளவனாகவும், உற்ற நண்பனாகவும், சோழ அரச வம்சத்திற்கு உண்மையானவனாகவும் இருக்க வேண்டும். இந்தக் கேரக்டர் ஸ்கெட்ச்சிற்கு மிகப் பெரிய நியாயத்தை செய்திருக்கிறார் வந்தியத்தேவனாக நடித்திருக்கும் கார்த்தி.
ஆதித்த கரிகாலன் மற்றும் அருண்மொழி வர்மனுடன் இணைந்து வீரத்துடன் எதிரிகளுடன் போரிடுவது.. குந்தவையை பார்த்த மாத்திரத்தில் காதலிக்க வைப்பது.. பூங்குழலியுடன் மனதளவில் நட்பாவது.. ஆழ்வார்க்கடியானுடன் சிநேகம் வைத்துக் கொண்டு உளவு வேலை பார்ப்பது.. நந்தினியிடம் நைச்சியமாக பேசி அனைத்தையும் தெரிந்து கொள்வது.. யாரையும் நம்பாத சின்னப் பழுவேட்டரையரை நம்ப வைப்பது.. சுந்தர சோழரின் அன்பிற்குப் பாத்திரமாவது.. என்று பல்வேறு குணாதிசயங்களை தனது நடிப்பில் காண்பித்து ரசிகர்களை மனம் குளிர வைத்திருக்கிறார் கார்த்தி.
ஆதித்த கரிகாலனாக, போர்க்களத்தில் பெரும் வீரனாக தன்னைக் காட்டிக் கொள்ளும் விக்ரமின் நடிப்பு இன்னொரு பக்கம் இந்த முதல் பாகத்தில் அனைவராலும் பேசப்படுகிறது.
“நிராயுதபாணியை நான் கொல்வதில்லை” என்று சொல்லி ராஷ்டிரகூட அரசனை கொல்லாமல் விடுவதில் இருந்து… தன்னைத் தேடி வந்து தஞ்சைக்கு அழைக்கும் தமக்கை குந்தவையிடம் தன் காதல் தோற்றுப் போனதற்கு குந்தவையும் ஒரு காரணம் என்று ஆத்திரத்தைக் காட்டும் காட்சியிலும்.. தன் காதலியை நினைத்து விசனப்படும் காதலன் உணர்வையும் விக்ரம் வெளிக்காட்டியிருக்கும் விதத்தைப் பார்த்தால் அசாத்தியமானதாக இருக்கிறது அவரது நடிப்பு. அத்தனை ஈர்ப்பாகவும் இருக்கிறது.
இந்த நாவலில் பேசப்படும் முக்கிய கதாபாத்திரமான நந்தினியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராய் படத்திற்கு மிகப் பெரிய தூணாக மாறியிருக்கிறார். தனது காதலரான வீரபாண்டியனின் சாவுக்குக் காரணமான ஆதித்த கரிகாலனை கொலை செய்ய துடித்துக் கொண்டிருக்கும் நந்தினி அதற்காக தனது அழகினை வைத்து பெரிய பழுவேட்டரையை மயக்கி வைத்திருப்பதை ஐஸ்வர்யா ராய் தோன்றும் அத்தனை காட்சிகளிலும் அவரது அழகை காட்டியும், முன் வைத்துமே சொல்லாமல் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
வந்தியத்தேவன் ஒற்றன் என்று தெரிந்தும் தனது மோதிர லச்சினத்தை கொடுத்து உதவி அவனைத் தன் வலையில் வீழ்த்தியிருப்பதை சரத்குமாரிடம் சொல்லும்போது அவரது முகம் காட்டும் வில்லித்தனம் அபாரம்.
குந்தவையான த்ரிஷாவுக்கு “வயதானாலும் அழகு போகவில்லை” என்ற வசனம் மிகப் பொருத்தமானதாக இருக்கும். நிஜத்தில் 40 வயதினை தொடும் த்ரிஷா இந்தப் படத்தில் இளம் வயது மங்கையாக.. சோழ சாம்ராஜ்யத்தின் அடுத்த சக்கரவர்த்தி யார் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக தான் இருப்பதை உணர்ந்து அதற்கேற்றாற்போல் நடித்திருக்கிறார்.
வந்தியத்தேவனை முதன்முதலில் சந்தித்தவுடனேயே இவன் வீரன்.. உண்மையானவன் என்பதை புரிந்து கொண்டு பேசுவதும்.. உடனேயே வேலை கொடுப்பதும், போகும்போது கார்த்தி காதல் மொழி பேச.. அதற்குப் பதில் கொடுப்பதிலேயே இளைஞர்களின் மனதைக் கவர்ந்துவிட்டார்.
மேலும் பெரிய பழுவேட்டரையரின் மாளிகையில் நடக்கும் சிற்றரசர்கள் கூட்டத்தில் அழையா விருந்தாளியாகச் சென்று அவர்களின் ஒற்றுமையை வானதியை முன் வைத்து சிதைக்கும் அந்தக் காட்சியில் “இந்தப் பொண்ணா இந்த வேலையைச் செய்யுது.. நந்தினிக்கு சரியான போட்டிதான்” என்று பொ.செல்வனின் ரசிகர்களாலேயே பாராட்டினைப் பெற்றுள்ளார்.
அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி.. மக்களால் அதிகம் விரும்பப்படும் ‘பொன்னியின் செல்வனா’கவே அழைக்கப்படுவதால் அதற்கேற்ற தகுதியான நடிப்பை காண்பித்திருக்கிறார். “அரசரின் கட்டளையே ஏற்று நான் தஞ்சைக்கு கைதியாகவே செல்வேன்” என்று உறுதிபட சொல்லிவிட்டு செல்வதிலும், சண்டை காட்சிகளில் தீயாய் ஆக்சனைக் காட்டியிருப்பதிலும் தனது ‘ராஜராஜ சோழன்’ கெட்டப்பிற்கு தயாராகிவிட்டார் என்றே சொல்லலாம்.
வானதியாக சோபிதா துலாலி சில காட்சிகளில் வந்து செல்கிறார். அடுத்த பாகத்தில்தான் இவருக்கு அதிகம் வேலையிருக்கும். ‘சமுத்திர ராணி’யான ஐஸ்வர்யா லட்சுமி மிக அலட்சியமாக தனது படகோட்டி கதாபாத்திரத்தை செய்திருக்கிறார். ஆண்களுக்கு நிகராக அந்தக் காலத்திலேயே பெண்களும் நாடு விட்டு நாடு செல்லும் படகை செலுத்தியிருக்கிறார்கள் என்பது பாராட்டுக்குரியதுதான்.
படகில் செல்லும்போது கார்த்தியுடன் பதிலுக்குப் பதிலாகப் பேசி அவரை சீண்டுவதிலும், படகு கரையைத் தொட்டவுடன் “பொன்னியின் செல்வனிடத்தில் சமுத்திர ராணியை நியாபகம் இருக்கான்னு கேளுங்க..?” என்று தன் ஒரு தலைக் காதலை வெளிப்படுத்தும்போதும் ஆஹா.. என்று சொல்ல வைத்திருக்கிறார்.
வந்தியத்தேவனை போலவே ஒற்று வேலையைப் பார்க்கும் ஆழ்வார்க்கடியானாகிய ஜெயராம் தனது அரை நிர்வாண உடலுடன், தொந்தியுடன்.. பார்க்கும் இடங்களிலெல்லாம் வந்தியத்தேவனுடன் சண்டையிட்டு பின்பு இணைந்து கொண்டு பேசியே நம்மை அசரடிக்கிறார். நாவலில் படிக்கும்போதே சிறு வயதினரை வெகுவாகக் கவர்ந்த கதாபாத்திரம் இவர்தான். நிஜமாகவே ஜெயராம் இந்தக் கதாப்பாத்திரத்திற்குப் பொருத்தமான தேர்வுதான்..!
சுந்தர சோழரான பிரகாஷ்ராஜ், பெரிய பழுவேட்டரையர் சரத்குமார், சின்னப் பழுவேட்டரையர் பார்த்திபன், முதல் மந்திரி அநிருத்த பிரம்மராயரான மோகன் ராமன், வீரபாண்டியன் கொலைக்குப் பழிக்குப் பழி வாங்கக் காத்திருக்கும் ஆபத்துவுதவிகளின் தலைவனான ரவிதாசன் மற்றும் பல சின்னக் கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் குறைவில்லாமல் நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இன்னொரு பக்கம் அடுத்து அரசனாகக் காத்திருக்கும் மதுராந்தகனான ரகுமான் தனது தாயான செம்பியன் மாதேவியான ஜெயசித்ராவிடம் தான் சிவனடியாரக இருக்க விரும்பவில்லை என்று கோபத்துடன் சொல்லிவிட்டு போகும் காட்சியின் மூலம், படத்தின் திரைக்கதையில் கூடுதல் கவனத்தை ஈர்த்திருக்கிறார் இயக்குநர்.
படத்தின் தொழில் நுட்பத்தில் ஒளிப்பதிவாளர் ரவிவர்மனுக்கு முதல் ‘ஜே’ போடலாம். மனிதர் பம்பரமாக சுழன்றிருக்கிறார். அத்தனை கதாபாத்திரங்களையும், எத்தனை அழகாகக் காண்பிக்க முடியுமோ அத்தனை அழகுபடுத்தியிருக்கிறார்.
நந்தினியான ஐஸ்வர்யா ராயும், குந்தவையான த்ரிஷாவும் சந்திக்கும் காட்சிகளில் இருவரில் யார் அழகி என்று போட்டியே வைக்கலாம் என்னும் அளவுக்கு இருவரின் அழகையும் படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். இவர்களுக்கு வைத்த குளோஸப் ஷாட்டுகளில் ஒன்றைகூட வானதிக்கு வைக்கவில்லை என்பதை நாமும் கண்டிப்போம். ஐஸ்வர்யா லட்சுமியையும் படகோட்டி கதாபாத்திரத்தில் எப்படியெல்லாம் அழகுபடு்த்த முடியுமோ அத்தனை அழகுடன் காண்பித்திருக்கிறார்.
பாடல் காட்சிகளிலும், சண்டை காட்சிகளிலும் ஒளிப்பதிவு செய்திருக்கும் வித்தைக்கு தனியாக புத்தகமே போடலாம். இதேபோல் சண்டை காட்சி இயக்குநர்கள் மூவரும் படைத் தளபதியாகவே மாறிவிட்டார்கள். கிராபிக்ஸ் இல்லாத சண்டைகளில் உண்மைத்தனத்துடன் காட்சிகளை படமாக்கியிருக்கிறார்கள்.
கிராபிக்ஸ் காட்சிகள் ஏனோ சற்று மந்தமாக இருக்கிறது. ஏனெனில் ‘பாகுபலி’யில் இதைவிட அழகான, ஆக்ரோஷமான சண்டை காட்சிகளை பார்த்துவிட்டதால் சண்டை காட்சி பிரியர்களுக்கு இதில் கொஞ்சம் ஏமாற்றம்தான். குறுகிய காலத்தில் எடுக்கப்பட்டதால் கிராபிக்ஸ், சி.ஜி.யில் அதிகமாக வேலை செய்யவில்லையோ.. கிளைமாக்ஸில் கடலில் நடக்கும் சண்டை காட்சி இன்னமும் சிறப்பு இருந்திருக்க வேண்டும். என்னமோ மிஸ்ஸிங் ஆகியிருக்கிறது.
கலை இயக்குநரான தோட்டா தரணியின் வேலை எப்போதும்போல சிறப்புதான். அரண்மனைகளையும், குடில்களையும், ஊர்களையும் சிறப்புற வடிவமைத்திருக்கிறார். இதேபோல் உடையலங்காரம், முடியலங்காரம், ஒப்பனை செய்தவர்களையெல்லாம் முதன்முறையாக ஒரு சேர இந்தப் படத்திற்காகத்தான் பாராட்டியாக வேண்டும். ஐஸ்வர்யா ராய், மற்றும் த்ரிஷாவின் ஒப்பனைகள் அத்தனை சிறப்பு.
ஏ.ஆர்.ரஹ்மான் இந்த முறை யாரையும் ஏமாற்றாமல் பாடல்களையும், பின்னணி இசையையும் அமைத்திருக்கிறார். ‘பொன்னி நதி’, ‘சோழா சோழா’, ‘ராட்சஸ மாமனே’, ‘அலை கடல்’, ‘தேவராளன்’, ‘சொல் சொல்’ என்று தமிழ் ததும்பி வழியும் சொற்களைக் கொண்டு பாடல்களைக் கட்டமைத்திருக்கிறார் ரஹ்மான். ஆனால் வாத்தியக் கருவிகளின் இரைச்சலில் ஒலிந்து போயிருக்கின்றன. ‘அலை கடல்’ பாடல் மட்டுமே மனதில் நின்று விளையாடுகிறது.
ஆனால் பின்னணி இசையில் மனிதர் அடித்து ஆடியிருக்கிறார். ஐஸ்வர்யா ராயின் அறிமுகக் காட்சி, வந்தியத்தேவன் தஞ்சை அரண்மனையில் இருந்து தப்பித்துச் செல்லும் காட்சிகள், குந்தவை, நந்தினி சந்திப்பின்போது.. போர்க்களக் காட்சிகள்.. என்று பலவற்றிலும் தன்னுடைய பின்னணி இசையினால் யாரையும் சோர்வடைய வைத்துவிடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
நாவலின் கதை, திரைக்கதை, வசனம் என்று மூன்றிலுமே சினிமாவுக்காக நிறைய மாற்றங்களை செய்து பலவற்றை ரத்து செய்து, சிலவற்றை மட்டுமே முன் வைத்து இந்த முதல் பாகத்தை முடித்திருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். இப்போதே இந்த முதல் பாகத்தின் முடிவு, ஒரிஜினல் நாவலின் 3-ம் பாகத்தைத் தொட்டுவிட்டது.
திரைக்கதையில் யாருக்கு, யார் உறவுகள்.. என்னென்ன கதாப்பாத்திரங்கள் என்பதையெல்லாம் போகிறபோக்கில் சொல்லியபடியே படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர். திரைக்கதை மிக, மிக சுவாரஸ்யமாக இருக்கும்படியான காட்சிகளை மட்டுமே நாவலில் இருந்து தேர்வு செய்து வைத்திருக்கிறார்கள்.
வந்தியத்தேவனின் ஓட்டத்திலேயே கதை நகர்வதால் அவன் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதையை அமைத்திருக்கிறார்கள்.
எழுத்தாளர் ஜெயமோகன் மணிரத்னத்திற்கு ஏற்றபடியான நறுக்குத் தெரித்தாற்போன்ற வசனங்களையே எழுதியிருக்கிறார். கார்த்தியை பார்த்தவுடனேயே பிடித்துப் போன நிலைமையில் அவரை இலங்கைக்குச் செல்ல உத்தரவிட்ட பின்பு “தலை பத்திரம்” என்று த்ரிஷா சொல்ல.. இதைக் கேட்டு கார்த்தி “உயிர் உங்ககிட்ட இருக்கே?” என்று பதில் சொல்ல.. காதல் பூத்ததன் அடையாளத்தை ருசிகரமாக சொல்லியிருக்கிறார் ‘யூத்’ இயக்குநர் மணிரத்னம்.
இதேபோல் ஆழ்வார்க்கடியான் மூலமாக சைவ-வைணவ பிரச்சார சண்டையையும் சுவாரஸ்யப்படுத்தியிருக்கிறார் ஜெயமோகன். “விஷ்ணுவும், புத்தர்தானா..?” என்று கார்த்தி நகைச்சுவையாக கேட்கும் கேள்விக்கு ஜெயராம் “ஆம்” என்று சொல்லியிருப்பதுகூட ஜெயமோகனின் ‘டச்’தான்.
உரையாடல்களில் வந்தியத்தேவனுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவமும், அவன் பேசும் வசனங்களை எளிமையாக்கி கொடுத்திருப்பதும் படத்திற்கு மிகப் பெரிய உதவியாக அமைந்திருக்கிறது. அரசர் காலத்து தமிழ் இல்லாது, கொஞ்சம் நயமான தமிழை கலந்து கொடுத்தமைக்காக ஜெயமோகனுக்கு நமது நன்றிகள்.
அனைத்து நடிகர்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும் சிறப்பாக பணியாற்றியிருப்பது இயக்குநர் தன் பணியை செவ்வனே செய்திருக்கிறார் என்பதைத்தான் காட்டுகிறது.
டைட்டிலில் துவங்கி, அலை கடலில் அருண்மொழி வர்மனும், வந்தியத்தேவனும் சிக்கி மறையும்வரையிலும் சிறப்பான இயக்கம் என்பதற்கு முழு உதாரணமாகத் திகழ்கிறது இந்தப் படம்.
நமது நெஞ்சார்ந்த நன்றிகளை நாம் இயக்குநர் மணிரத்னத்திற்கு சமர்ப்பிக்கும் அதே நேரத்தில் இந்தப் படத்தின் வெற்றிக்கும், பெயருக்கும், புகழுக்கும், மரியாதைக்கும் காரணகர்த்தாவான கதையைத் தாங்கியிருக்கும் நாவலான ‘பொன்னியின் செல்வனை’ எழுதிய அமரர் கல்கி அவர்களுக்கு படத்தின் டைட்டில் பகுதியில், புகைப்படத்துடன் தனியாக ஒரு நன்றி கார்டுகூட போடாதது ‘பொன்னியின் செல்வனின்’ ரசிகர்கள் அனைவருக்கும் பெரும் வருத்தத்தைத் தந்திருக்கிறது. அடுத்த பாகத்தில் இந்தத் தவறு சரி செய்யப்படும் என்று நம்புகிறோம்.
பொன்னியின் செல்வன்-1 – பார்த்தே ஆக வேண்டிய திரைப்படம்..!