பல திரையுலக ஜாம்பவான்கள் முயற்சி செய்தும் முடியாமல் போனதை செய்து காட்டும் வெறியில் ‘பொன்னியின் செல்வனை’த் துவக்கினார் இயக்குநர் மணிரத்னம்.
ஆனால் வழக்கம்போல அந்தப் படத்துக்கேயான சோதனையாக கொரோனா வந்து நிற்க.. இதன் படப்பிடிப்புகள் முற்றிலும் நின்று போனது.
கொரோனா காலத்திற்கு முன்பு கம்போடியாவிலும், தாய்லாந்திலும் இந்தப் படப்பிடிப்பை நடத்திய மணிரத்னம், இப்போது அந்த நாடுகளுக்குப் போகவும் முடியவில்லை.
அதனால் வழக்கம்போல ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இந்தப் படத்திற்காக பிரம்மாண்டமான அரங்குகளை அமைத்திருக்கிறார் மணிரத்னம்.
இந்தப் படப்பிடிப்பு அரங்குகளில் வரும் ஜனவரி மாதத்தில் இருந்து படப்பிடிப்பு துவங்குகிறது.
ஜனவரி கடைசிவரையிலும் இருக்கும் இந்தப் படப்பிடிப்பு அதன் பிறகு 2 மாதங்கள் கழித்து மீண்டும் ஏப்ரலில் துவங்கி ஒரே ஷெட்யூலில் முதல் பாகம் முடியும் என்கிறார்கள்.
அநேகமாக ஜூலை மாதம் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகம் வெளியாக வாய்ப்புள்ளது.
அதற்கடுத்து மீண்டும் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பை துவக்கி அடுத்தாண்டின் தீபாவளிக்கு இரண்டாம் பாகத்தை மணிரத்னம் கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மணிரத்னம் எத்தனையோ சாதனைகளைச் செய்திருந்தாலும் இந்தப் ‘பொன்னியின் செல்வனை’ படைத்துக் காண்பித்துவிட்டால், இதுவே அவரது மணி மகுடச் சாதனையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.