பாலிவுட்டின் முன்னணி நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘தே தே பியார் தே 2’. இதில் நடிகர் ஆர். மாதவன், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் ரகுல் ப்ரீத் சிங், மாதவனின் மகளாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை அன்சுல் சர்மா இயக்கியுள்ளார். இதற்கு முன்பு அஜய் தேவ்கனும், மாதவனும் இணைந்து நடித்த ‘சைத்தான்’ படமும் வெற்றியை பெற்றது.

சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் மாதவன் பேசும்போது, “சைத்தான் படத்தில் போலவே இந்தப் படத்திலும் அஜய் தேவ்கன் அனைவரையும் அன்புடன் கவனித்தார். ஆனால் ஒரு இளம் பெண்ணுக்கு தந்தையாக நடிப்பது எனக்குப் பெரிய சவாலாக இருந்தது,” என்று கூறினார்.
அதற்கு பதிலளித்த அஜய் தேவ்கன், “சைத்தான் படத்தில் மாதவன் எனது மகளை என்னிடமிருந்து பிரித்தார். ஆனால் இந்தப் படத்தில் அவர் மகளான ரகுல் ப்ரீத் சிங்கை நான் அவரிடமிருந்து பிரிக்கும் வேலையைச் செய்திருக்கிறேன். அந்த வகையில் இதை ‘சைத்தான்’ படத்தின் சீக்வல் எனக் கூட சொல்லலாம்,” என்று நகைச்சுவையாகக் கூறி சிரிப்பை ஏற்படுத்தினார்.
முன்னதாக வெளியான ‘சைத்தான்’ படத்தில் அஜய் தேவ்கன், ஜோதிகா தம்பதியினருக்கு மகளாக ஜானகி போடிவாலா நடித்திருந்தார். அந்தப் படத்தில் மாதவன், பிளாக் மேஜிக் செய்வதற்காக அஜய் தேவ்கனின் மகளை அபகரிக்க முயலும் மந்திரவாதி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதை அஜய் தேவ்கன் எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதே அந்தப் படத்தின் முக்கியக் கதை. இதையே நினைவுபடுத்தும் விதமாக அஜய் தேவ்கன் ஜாலியாக குறிப்பிட்டுள்ளார்.