திரைப்படமாகிறது பெருமாள் முருகனின் ’’பூக்குழி’’ நாவல்

எழுத்தாளர் பெருமாள் முருகனின்பூக்குழிநாவல் திரைப்படமாக உருவாகிறது. சேத்துமான்படத்தை இயக்கிய தமிழ், இயக்குகிறார். தர்ஷன் கதாநாயகனாக நடிக்கிறார். தர்ஷனா ராஜேந்திரன் நாயகியாக நடிக்கிறார். எஸ்.வினோத் குமார் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு தீபக் ஒளிப்பதிவு செய்கிறார். பிந்து மாலினி, வேதாந்த் பரத்வாஜ் இசை அமைக்கின்றனர். பிரபல நாவலாசிரியர் பெருமாள் முருகன் வசனம் எழுதுகிறார். இதன் படப்பிடிப்பு பெங்களூருவில் தொடங்கியது.

படம் பற்றி இயக்குநர் தமிழ் பேசும்போது பெருமாள் முருகனின் இந்த நாவல் என்னைப் பாதித்ததால் படமாக்க முடிவு செய்தேன். நாவலில் இருந்து சினிமாவுக்காக சில விஷயங்களை, எழுத்தாளர் பெருமாள் முருகனின் சம்மதத்தோடு மாற்றியிருக்கிறேன். இதில் சாதிய அரசியலும் இருக்கும். தர்மபுரி பின்னணியில் நடக்கும் கதை இது.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருப்பதால், நன்றாக நடிக்கத் தெரிந்த நாயகி தேவைப்பட்டார். அதனால் தர்ஷனா ராஜேந்திரனை ஒப்பந்தம் செய்தோம். கதை, அவர் பார்வையில் இருந்துதான் நகரும். கதாநாயகன் பக்கத்து வீட்டு பையனை போன்ற தோற்றம் கொண்டவராக வேண்டும் என்பதால் தர்ஷனை நடிக்க வைத்திருக்கிறோம். சமகாலத்தில் நடக்கும் கதையாக படம் உருவாகி வருகிறது என்றார்.