பாடலாசிரியரான பா.விஜய், சமீபத்திய பேட்டி ஒன்றில், சினிமா என்பது பொதுமக்கள் மகிழ்ச்சியைம் மற்றும் வியாபார நோக்கத்தையும் அடிப்படையாகக் கொண்ட கலை. பெரிய பட்ஜெட், சிறிய பட்ஜெட் என்ற பார்வையைவிட, நல்ல கதையம்சம் கொண்ட படங்களையே மக்கள் விரும்புகிறார்கள்.

அறிமுக நடிகர்களை வைத்து எடுக்கப்படும் குறைந்த பட்ஜெட் படங்கள் கூட, ஓ.டி.டி. தளங்களில் மிகப்பெரிய வெற்றிகளைப் பெறுகின்றன. இந்த ஓ.டி.டி. தளங்களே சினிமாவின் எதிர்காலம். பல படங்கள் வெளியாகும் வாய்ப்பும் அதிகமாகியுள்ளது.என்னைப் போன்ற படைப்பாளிகளுக்கும் ஓ.டி.டி.யில் வாய்ப்பு அதிகமாக கிடைக்கக்கூடும். அதே நேரத்தில், ஓ.டி.டி. தளங்களில் ‘சென்சார்’ இல்லாததனால், வன்முறையைக் கொண்ட கத்தி, ரத்தம் போன்ற காட்சிகளும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
சினிமா துறையைப் பொருத்தவரை, எந்த ஒருவருக்கும் முயற்சி மிகவும் அவசியம். தடைகளை தாண்டும், போட்டிகளை எதிர்கொள்ளும், வலிகளை தாங்கும் மனவலிமையை வளர்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம். இது சினிமா மட்டுமல்லாமல் வாழ்க்கையிலும் தேவையான பொதுவான அறிவுரை. இன்றைய இளைஞர்கள், சிறிய துன்பங்களையும் தாங்கும் மன உறுதியின்றி இருக்கின்றனர். ஆனால், வலிகளின்றி வாழ்க்கை இல்லை என்பதையும் அவர்கள் உணர வேண்டும் என கூறியுள்ளார்.