இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற தலைப்பில் கடந்த 10.09.2023 ஆம் தேதி சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்தினார். இதற்கான ஏற்பாடுகளை ஏசிடிசி என்ற நிறுவனம் செய்திருந்தது.
டிக்கெட்டுகளை வாங்கிய பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உரிய இருக்கை கிடைக்காமல் திண்டாடினர். பார்க்கிங் வசதி சரியாக இல்லாமல் சாலையிலேயே பலர் வாகனங்களை நிறுத்தி வைத்துவிட்டுச் சென்றனர்.
கூட்டத்தில் பெண்கள் சிலருக்கு பாலியல் ரீதியான அத்துமீறல்கள் நடந்ததாக புகார் எழுந்தது.
பாதிக்கப்பட்டவர்கள், சமூகவலைதளத்தில் தங்கள் ஆதங்கத்தைக் கொட்டினர். இதையடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
இதனிடையே ஏ.ஆர். ரஹ்மானை சிலர் விமர்சித்து வந்த நிலையில் அதைக் கண்டித்து ஏ.ஆர். ரஹ்மானின் மகள் கதிஜா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். மேலும் ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஆதரவாக, யுவன் ஷங்கர் ராஜா, கார்த்தி, குஷ்பு, சரத்குமார், தங்கர் பச்சான் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டனர்.
டிக்கெட் இருந்தும் நிகழ்ச்சியைக் காண முடியாத ரசிகர்களுக்கு கட்டணத்தை திருப்பி அளிக்கும் பணி நடந்து வருவதாக, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே நடிகர் பார்த்திபன் அவரது எக்ஸ் தள பக்கத்தில், “மறக்குமா நெஞ்சம், மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் வருத்தத்திற்குரியது. நடத்தியவர்களின் பொறுப்பு அது. ஏ.ஆர். ரஹ்மான், தூய்மையான இனிய மனிதர். அவரே மனம் மிக வருந்தி பொறுப்பை தானும் ஏற்றுக்கொள்வதாக முன் வந்திருக்கிறார். அவரின் மென்மையான மனமும் மேன்மையான குணமும் எனக்குத் தெரியும்.
என்னுடைய புதிய படத்திற்கு அவர் இசையமைக்கவில்லையே தவிர, கும்மிடிப்பூண்டியில் உள்ள அவரது ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடந்தபோது அவரது மேனேஜர் சுகந்தனை அழைத்து ‘பார்த்திபன் மனம் நோகாமலும் முகம் சுளிக்காமலும் நடந்து கொள்ளுங்கள்’ எனக் கூறியதாக ராஜ உபசாரம் எனக்கு. தான் சம்பந்தப்படாத விஷயத்தில் கூட மற்றவர் மனம் நோகாதிருக்க நினைப்பவர். தான் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட அசம்பாவிதத்திற்காக மனம் உடைந்திருப்பார். இனி இன்னும் கவனம் கொள்வார். அவருக்கு நான் மட்டுமல்ல இந்தத் திரையுலகமே துணை நிற்கும். அவரின் இசையைத் தொடர்ந்து கொண்டாடுவோம். பாசிட்டிவிட்டியை பரப்புங்கள்” எனப் பதிவிட்டிருந்தார்.
இதற்கு சிலர், “ஏ.ஆர்.ரஹ்மான் புகார்களை எதிர்கொண்டு சிக்கலில் இருக்கும்போது, தனது படத்துக்கு அவர் இசையமைக்கவில்லை என்கிற விசயத்தை குத்திக்காண்பிப்பது நியாயமா” என பார்த்திபனுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து பார்த்திபன், “குறிப்பிட்ட வரி தவறென சிலருக்குப் படுவதால் அதை நீக்கிவிட்டேன். வருந்துகிறேன்” என பதிவிட்டு உள்ளார்.
.