Wednesday, November 20, 2024

பரோல் – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ட்ரிப்ர் என்டர்டைன்மெண்ட் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் மதுசூதனன் இந்தப் ’பரோல்’ படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் ‘பீச்சாங் கை’ படத்தில் நடித்த கார்த்திக் மற்றும் ‘சேதுபதி’ & ’சிந்துபாத்’ படத்தில் நடித்த லிங்கா இருவரும் கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுக்கு ஜோடியாக மோனிஷா மற்றும் கல்பிக்கா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். மேலும் வினோதினி, ஜானகி சுரேஷ், டி.கே.எஸ்., ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தயாரிப்பு – மதுசூதனன் (ட்ரிப்ர் என்டர்டைன்மெண்ட்), எழுத்து இயக்கம் – துவாரக் ராஜா, ஓளிப்பதிவு – மகேஷ் திருநாவுக்கரசு, இசை – ராஜ்குமார் அமல், படத் தொகுப்பு – முனீஸ், பத்திரிகை தொடர்பு – சதீஷ் (AIM). இயக்குநர் துவாரக் ராஜா இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே ‘காதல் கசக்குதய்யா’ படத்தை இயக்கியவர்.

இது பரோல் சம்ந்தமான அரசியலைப் பேசுகிற படம். 48 மணி நேரங்களில் சென்னைல வியாசர்பாடியில் துவங்கி திருச்சி, மதுரை என்று பயணித்து திரும்பவும் விக்கிரவண்டி, சேலையூர், வியசார்பாடி என்று வந்து முடியும் கதை இது.  க்ரைம், திரில்லர், ஆக்ஷன், டிராமா என்று அனைத்தையும் கலந்து கட்டி இந்தப் படத்தில் திரைக்கதை அமைத்துள்ளார்கள்.

‘பரோல்’  என்பது சிறையில் தண்டனைக் கைதிகளாக இருப்பவர்களுக்கு வழங்கப்படும் ஒரு சலுகையின் பெயர். ஒரு தண்டனை கைதி வருடத்திற்கு 30 நாட்கள் அவர்களது குடும்பத்தினருடன் தன் வீட்டில் இருக்கலாம். அதாவது சிறை தண்டனையில் இருந்து விடுமுறை அளிப்பதுபோல..!

இந்த ‘பரோல்’ விடுமுறையை மிக முக்கியமான குடும்பத்தின் ரத்த சம்பந்தமுள்ள உறவினர்களின் விசேஷங்களுக்கும், துக்க நிகழ்வுகளுக்கும்கூட கொடுப்பார்கள். அப்படியொரு துக்க நிகழ்வில் பங்கேற்க சிறை தண்டனையை அனுபவித்து வருபவனுக்குக் கிடைக்கும் ‘பரோல்’ சலுகையை மையப்படுத்திதான் இந்தப் படம் உருவாகியுள்ளது.

அம்மா ஜானகி சுரேஷுக்கு இரண்டு மகன்கள். ஒருவர் ஆர்.எஸ்.கார்த்திக். இன்னொருவர் லிங்கா. இதில் மூத்த மகன் லிங்கா சிறு வயதிலேயே தன் தாயிடம் தகாத முறையில் நடந்து கொண்டவனை படு கொலை செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு சென்றவர். அங்கேயிருந்து திரும்பி வெளியில் வந்தவர் அந்தச் சூழலிலேயே சிக்கிக் கொண்டு கூலிப் படை தலைவனாகி பல கொலைகள் செய்து வருகிறார்.

இளைய மகன் ஆர்.எஸ்.கார்த்திக் பிளம்பிங் வேலை செய்து கொண்டு வீட்டையும் தாயையும் கவனித்துக் கொள்கிறார். ஆனால் அம்மா ஜானகி சுரேஷுக்கு மூத்த மகன் மேல் அதீத அன்பு. தன்னால்தான் அவனது வாழ்க்கை இப்படி மாறிப் போனது என்பதால், அவனை எப்படியாவது திருத்தி நல்வழிக்கு கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தோடு வாழ்கிறார். இதனால் இளைய மகனான ஆர்.எஸ்.கார்த்திக் தாய் மீதும், அண்ணன் லிங்கா மேலும் கோபத்தில் இருக்கிறார்.  

இந்த நிலைமையில் லிங்கா வழக்கம்போல ஒரு முறை இரட்டைக் கொலைகளை செய்துவிட்டு இரட்டை ஆயுள் தண்டனை பெற்று ஜெயிலுக்கு சென்று விடுகிறார். இந்த வழக்கில் இருந்து லிங்காவை எப்படியாவது விடுதலையாக்கிவிட வேண்டும் என்று தாய் ஜானகி முயற்சி செய்கிறார். ஆனால் இதை விரும்பாத கார்த்திக் அம்மாவைத் தடுக்கிறார்.

“இனிமேல் நான் மட்டும்தான் அம்மாவுக்கு மகனாக இருக்க வேண்டும்” என்ற எண்ணம் கார்த்திக்குள் ஆழமாக இருக்கும் நேரத்தில் அவரது தாய் ஜானகி இறந்து விடுகிறார்.

அண்ணன் மீது இருக்கும் பொறாமை மற்றும் வெறுப்பினால் அம்மாவுக்குத் தானே இறுதி சடங்கை நடத்த நினைக்கிறார் கார்த்திக். ஆனால், “அப்பாவுக்குத்தான் இளைய மகன்.. தாய்க்குத் தலைமகன்தான் கொள்ளி வைக்க வேண்டும். அதனால் அண்ணனை பரோலில் அழைத்து வா” என்று கார்த்திக்கின் சொந்த, பந்தங்கள் அவரை நெருக்குகின்றன.

இதையடுத்து, வேண்டாவெறுப்பாக அண்ணன் லிங்காவை பரோலில் எடுக்க முனைகிறார் கார்த்தி. பரோல் கிடைத்ததா, இல்லையா? வெளியில் வந்து என்ன ஆனது..? இருவரின் நட்பும் நீடித்ததா.. இல்லையா..? என்பதுதான் இந்தப் பரோல் படத்தின் திரைக்கதை.

லிங்காவும், ஆர்.எஸ்.கார்த்தியும் நிஜமான அண்ணன் தம்பியைப் போலவே நடித்துள்ளனர். அண்ணன் மீது அம்மாவுக்கு இருக்கும் பாசத்தை நினைத்து மருகிப் போய் கொதிக்கும் கார்த்தி அவ்வப்போது தான்தான் குடும்பத்தை நல்லா பார்த்துக்குறனே என்று தனக்கான அங்கீகாரத்தை தன் தாயிடம் எதிர்பார்க்கும் காட்சிகளில் செண்டிமெண்ட் தூள் பறக்கிறது.

அதேபோல் ரவுடியாகி தன் வாழ்க்கை வேறு பாதையில் மாறினாலும் தன்னைப் புரிந்து கொள்ளாத தம்பியை புரிந்து கொள்ள வைக்கப் போராடும் அண்ணனாக லிங்கா தனது குறிப்பிடத்தக்க நடிப்பைக் காண்பித்திருக்கிறார். சண்டை காட்சிகளில் இருவருமே ஆக்ரோஷத்தைக் காண்பித்திருக்கிறார்கள்.

ஹீரோயின்களான கல்பிக்கா, மோனிஷா இருவரும் கொஞ்சம் நேரமே திரையில் தோன்றினாலும் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். அதிலும் மோனிஷா கார்த்திக்கிடம் கேள்விமேல் கேள்வி கேட்டு டெர்ரராக்கும் காட்சி ஏ ஒன்.

இவர்களின் அம்மாவாக நடித்திருக்கும் ஜானகி சுரேஷ் யதார்த்தமான ஒரு அம்மாவை நினைவுபடுத்துகிறார் வக்கீலான வினோதினி வைத்தியநாதன் தனது வழக்கமான யதார்த்தமான நடிப்பால் கதையின் ஓட்டத்திற்குப் பெரிதும் உதவியிருக்கிறார்.

வெட்டு, குத்து, கொலைகள் என்று ரத்தச் சகதியில் படமாகியிருக்கும் இதற்கு படத் தொகுப்பாளர் முனீஸ்தான் மிகப் பெரிய பலமாக அமைந்திருக்கிறார். ராஜ் குமார் அமலின் பின்னணி இசை ஓகே. மகேஷின் ஒளிப்பதிவு குறை சொல்ல முடியாமலும், நிறைவானது என்றும் சொல்ல முடியாதபடிக்கும் அமைந்துள்ளது.

ஒரு கொலைக் குற்றவாளியை பரோலில் எடுப்பதன் பின்னணியில் இருக்கும் நடைமுறை சிக்கல்களை இந்தப் படம் அங்குலம், அங்குலமாக அலசி இருக்கிறது. 

படத்தை அடுத்தடுத்த காட்சிகளில் வழக்கமான படமாக சொல்லி இருந்தால் இன்னும் குழப்பம் இல்லாமல் ரசிக்க முடிந்திருக்கும். இதில் இருக்கும் நான் லீனியர் முறை படம் பார்ப்பவர்களின் மூடையும் முன், பின்னாக நகர்த்துவதால் ஒருங்கே முழு மனதுடன் படத்துடன் ஒன்ற முடியவில்லை.

இந்த வன்முறைக் கதையை நல்ல முறையில் முடித்திருப்பதும், கதையை விஜய் சேதுபதியின் வாய்ஸ் ஓவரில் கொடுத்திருப்பதும் படத்திற்குக் கிடைத்திருக்கும் பவம்தான்.

இயக்குநர் துவாரக் ராஜா இந்தப்படத்தின் மூலம் நம்பிக்கை வைக்கக் கூடிய இயக்குநராக உருவெடுத்துள்ளார்.

படத்தின் துவக்கக் காட்சியில் இருந்தே வன்முறைகள், படுகொலைகள் அதிகம் காட்டப்பட்டுள்ளன. போதாக்குறைக்கு படத்தில் ஆபாச வார்த்தைகள், ஆபாச கை சமிக்ஞைகள் என்று ஏ-த்தனமான அத்தனை காவாலித்தனத்தையும் யதார்த்தம்’ என்ற போர்வையில் கொடூரமாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.

ஏற்கெனவே வட சென்னை என்றாலே தாதாக்களின் உலகம்தான் என்று தமிழ் சினிமாக்கள் பறை சாற்றி வருகின்றன. அதில் இதுவும் ஒன்றாகியிருக்கிறது. அவ்வளவுதான்..!

RATING : 2.5 / 5

- Advertisement -

Read more

Local News