ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் பார்க்கிங்.
ஈகோ மோதல் மனிதர்களை எந்த எல்லைக்கும் கொண்டு செல்லும் என்பதற்கு எடுத்துகாட்டாய் ஒரு படம். ‘விட்டுக் கொடுப்பவன் கெட்டுப்போவதில்லை’ என்ற கருத்தை விதைத்துள்ளது ‘பார்க்கிங்.
அரசாங்கப் பணியிலிருக்கிற பெரியவர் இளம்பரிதி மனைவி,மகள் என குடும்பத்துடன் 10 வருடங்களாக வசிக்கிறார். வாடகை வீட்டின் மாடி போர்சனில் காதல் மனைவியுடன் குடியேருகிறார் ஈஸ்வர். வந்தவர் புதிதாக கார் வாங்கிவந்து வீட்டு வளாகத்தில் நிறுத்த அது பைக் வைத்திருக்கும் பெரியவருக்கு இடைஞ்சலாகிறது. அதையடுத்து அவர், இளைஞனிடம் காரை வெளியில் நிறுத்தச் சொல்ல, அவன் முடியாது என்று மறுக்க இருவருக்குள்ளும் ஈகோ யுத்தம் துவங்குகிறது. அடிதடி, கார் கண்ணாடி உடைப்பு, போலீஸில் புகார் என அடுத்தடுத்த நாட்கள் ரணகளமாய் நகர்கிறது.
ஈஸ்வரை அவமானப்படுத்த, தண்டிக்க பெரியவர் தரை லோக்கலாக இறங்குகிறார். அவரை பழிவாங்க ஈஸ்வர் ஸ்மார்ட்டாக யோசிக்கிறார். பெரியவர் அதைவிட கிரிமினலாக யோசிக்கிறார். அதன் விளைவுகளும் விபரீதங்களுமே படத்தின் கதை. நாயகனாக ஹரிஷ் கல்யாண் அழகான தோற்றத்துடன் இருக்கிறார். கார் பார்க்கிங் விஷயம் விவகாரமாகும்போது ஆக்ரோஷம் காட்டுவது, பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகும்போது மனமுடைவது, பழிக்குப் பழிவாங்க களமிறங்குவது, மனைவியின் உணர்வுக்கு மதிப்பளிக்காமல் தன் மனதுக்கு சரியென பட்டதை செய்வது என காட்சிக்கு காட்சி வித்தியாசத்தை காட்டியுள்ளார்.
பாஸ்கருக்கு இதில் நெகடிவ் கேரக்டர். இளம்பரிதி என்ற பெயரில் வருகிறார். திருமண வயதில் பெண் இருந்தும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கீழ்த்தரமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது என முகத்தில் காட்டும் வில்லத்தனம் அவர் ஏற்ற சைக்கோதனமான கேரக்டருக்கு முழுமையான உயிரோட்டம் கொடுத்துள்ளது.
ஹரீஷ் கல்யாணின் மனைவியாக, கர்ப்பிணிப் பெண்ணாக, தாய் தந்தையின் ஆதரவற்ற நிலையில் இந்துஜா. அவருக்கு கொடுத்த கதாப்பாத்திரத்துடன் கட்சிதமாக பொருந்துகிறார். கணவர், கீழ் வீட்டுக்காரர் என இரண்டு சைக்கோ பேர்வழிகளிடம் மாட்டிக்கொண்டு, வருகிற காட்சிகளிலெல்லாம் கண்கலங்க அனுதாபத்தை ஏற்படுத்துகிறார்.
நியாயமாக நடந்து கொள்ளும் ஹவுஸ் ஓனராக இளவரசு. மிகச்சில காட்சிகளில் வந்தாலும் அனுபவ நடிப்பு கவர்கிறது.
எம்.எஸ். பாஸ்கரின் மனைவியாக ரமா, மகளாக பிரார்த்தனா மற்றும் உடன் நடித்திருப்பவர்கள் அனைவரும் திறமையான நடிப்பை வெளிப்படுத்துள்ளனர்.
கதையோட்டத்தை வலுப்படுத்தியிருக்கிறது சாம் சி எஸ் பின்னணி இசை.நகரத்தில் வாடகை வீட்டில் வசிக்கிற மக்கள் பலரும் சந்திக்கிற பார்க்கிங் பிரச்சனையை மையப்படுத்தி பாராட்டும் படி எளிமையாக ஒரு கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர்.