Saturday, April 13, 2024

சினிமா வரலாறு-24 – முதல் படத்தில் சிவாஜி சந்தித்த எதிர்ப்புகள்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஏவி.எம். நிறுவனம் தயாரித்த பல திரைப்படங்களை விநியோகம் செய்த பி.ஏ.பெருமாள், ஏவி.மெய்யப்ப செட்டியாரோடு இணைந்து ஒரு படத்தைத் தயாரிக்க விரும்பினார்.

அவர் ஒரு நாணயமான விநியோகஸ்தர் என்பதால் அவருடன் இணைந்து படம் தயாரிக்க முன் வந்த மெய்யப்ப செட்டியார் ‘பராசக்தி’ நாடகத்தைப் படமாக்கலாம் என்று  முடிவு செய்து அந்த நாடகத்தின் உரிமைகளை வாங்கினார்.

‘பராசக்தி’, ‘நூர்ஜகான்’ ஆகிய நாடகங்கள் பெருமாள் முதலியாரின் சொந்த ஊரான வேலூரில் நடைபெற்றபோது அந்த நாடகங்களில் நடித்த சிவாஜி கணேசனின் அபாரமான நடிப்புத் திறனில் மனதைப் பறி கொடுத்திருந்த பெருமாள் முதலியார் எப்படியாவது சிவாஜி கணேசனை அந்தப் படத்திலே நடிக்க வைத்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

ஆனால் மெய்யப்ப செட்டியாரோ கே.ஆர்.ராமசாமியை  கதாநாயகனாகப் போட்டு அந்தப் படத்தை எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார்.

சிவாஜி நடிக்கும் நாடகத்தை ஏவி. மெய்யப்ப செட்டியார் ஒரு முறை பார்த்தார் என்றால் நிச்சயம் தனது மனதை மாற்றிக் கொள்வார் என்று திடமாக நம்பிய பெருமாள் முதலியார் சிவாஜி நடித்த ‘பராசக்தி’  நாடகத்தைப் பார்க்க மெய்யப்ப செட்டியாரை  திண்டுக்கல்லுக்கு அழைத்துச் சென்றார்.

ஆனால், அந்த நாடகத்தில் சிவாஜியின் நடிப்பைப் பார்த்த பிறகும்… செட்டியார் தனது எண்ணத்தை மாற்றிக் கொள்ளவில்லை.

“டிராமாவில் நடிப்பது என்பது வேறு. சினிமாவில் நடிப்பது என்பது வேறு. இதுவரை கணேசன் எந்த சினிமாவிலும் நடிக்கவில்லை. அப்படியிருக்கும்போது முதன் முறையாக மெயின் ரோலில் அந்தப் பையனை நடிக்க வைத்துவிட்டு அந்தப் படம் ஓடவில்லை என்றால் என்ன செய்வது? இந்தப் படம் நீங்கள் என்னோடு சேர்ந்து எடுக்கின்ற முதல் படம். ஆகவே  ரிஸ்க் எடுக்க வேண்டாம்…” என்றார் ஏவி.எம்.

பெருமாள் முதலியாரின் மன உறுதிதான் அந்த சமயத்தில் சிவாஜியின் விதியை மாற்றி எழுதியது.

அனுபவம் வாய்ந்த தயாரிப்பாளரான ஏவி.எம்., அவர்கள் அவ்வளவு எதிர்த்த நிலையிலும் அந்த பாத்திரத்திற்கு சிவாஜி கணேசனைத்தான் போட வேண்டும் என்ற முடிவிலிருந்து ஒரு அங்குலம்கூட பின்னோக்கிப் போக பெருமாள் முதலியார்  தயாராக இல்லை. 

எவ்வளவோ முயன்றும் அவர் மனதை மாற்ற முடியாததால்தான்  வேறு வழியின்றி சிவாஜியை அந்தப் படத்தில் நாயகனாக நடிக்க வைக்க அரை மனதோடு ஒப்புக் கொண்டார் மெய்யப்ப செட்டியார்.

‘பராசக்தி’  படத்திற்கு வசனம் எழுத அந்த நாடகத்தை எழுதிய பாலசுந்தரம்தான் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.  நாடகம் வேறு, சினிமா வேறு என்பதை  அவருக்கு எடுத்துச்  சொல்லி, சினிமாவுக்கு எப்படி வசனம் எழுத வேண்டும் என்று ‘பராசக்தி’ படத்தை இயக்கும் பொறுப்பை ஏற்றிருந்த கிருஷ்ணன்-பஞ்சு ஆகிய இருவரும் சொன்ன ஆலோசனைகள் எதையும் பாலசுந்தரம்  ஏற்றுக் கொள்ள மறுத்ததால்  அவரை மாற்றி விட்டு வசனம் எழுத  திருவாரூர் தங்கராஜை அவர்கள் ஒப்பந்தம் செய்தனர். பின்னர் சில காரணங்களால் அவரும்  மாற்றப்பட… அதற்குப் பிறகு அந்த இடத்திற்கு வந்தவர்தான் கலைஞர் மு.கருணாநிதி.

அடுத்தபடியாக சிவாஜி  சினிமாவுக்கு எந்த அளவு பொருத்தமாக இருப்பார் என்பதை சோதித்துப் பார்ப்பதற்காக அவருக்கு  டெஸ்ட் எடுக்கப்பட்டது. 

முதலில் ‘சக்சஸ்’ என்ற வார்த்தையை சொல்லச் சொல்லி சிவாஜியின்  திரையுலக வாழ்க்கையை தொடங்கி  வைத்த  இயக்குநர்கள் கிருஷ்ணன்-பஞ்சு ஆகிய இருவரும், அடுத்து இன்னொரு காட்சியையும் அவரை வைத்துப் படமாக்கினார்கள்.

டெஸ்ட்டுக்காக எடுக்கப்பட்ட அந்த காட்சிகளை போட்டுப் பார்த்தபோது அப்போது ஏவி. எம்.மில் சவுண்ட் இஞ்சினியராக இருந்த ஜீவா என்பவர் சிவாஜியை தொடர்ந்து நடிக்க வைக்க தனது முழு எதிர்ப்பையும் தெரிவித்தார்.  

சிவாஜி ஒல்லியாக இருப்பதும் அவரது பல்வரிசை சரியாக இல்லாததும் சிறு குறைகளாகத் தென்பட்டாலும், அவருடைய நடிப்புத் திறனுக்கு முன்னால் இதெல்லாம் மிகச் சிறிய குறைகள் என்றே  கிருஷ்ணன் – பஞ்சு ஆகிய இருவரும் எண்ணினார்கள்.

பெருமாள் முதலியாருக்கோ  சிவாஜியின் நடிப்பு பூரண திருப்தியைத் தந்தது. டைரக்டர், தயாரிப்பாளர் ஆகிய இருவரும் சிவாஜிக்கு முழு  ஆதரவாக இருப்பதைத் தெரிந்து கொண்ட ஏவி. மெய்யப்ப செட்டியார் “முதலில் ஒரு ஐயாயிரம் அடி எடுத்துப் பார்ப்போம். அதற்குப் பிறகு முடிவு செய்து கொள்ளலாம்…” என்று கூறினார்.

அதைத் தொடர்ந்து ‘பராசக்தி’ படத்தின்  படப்பிடிப்பு தொடங்கியது. அந்தப் படத்தின் மூலம் தமிழ்த் திரையில் எப்படிப்பட்ட ஒரு அதிர்வலைகளை சிவாஜி உருவாக்கினார் என்பது  அனைவரும் அறிந்த ஒன்று.

ஆனால்,  அந்தப் படம் முடிவடைவதற்குள் அவர் சந்தித்த எதிர்ப்புகள் இருக்கிறதே அவை சொல்லில் அடங்காது.

முதல் கட்டமாக ஆயிரம் அடிவரை  எடுத்துவிட்டு படத்தைப்  போட்டுப் பார்த்தபோது படத் தயாரிப்பாளரான பெருமாள் முதலியாரின் மாமனாரே, சிவாஜிக்கு வில்லனாக உருவெடுத்தார். “சிவாஜி கணேசனை மாற்றிவிட்டு வேறு ஒரு நடிகரைப் போட்டு எடுத்தால்தான் படம் படமாக இருக்கும். அதனால், வேறு யோசனையே வேண்டாம். அவரை மாற்றியே ஆக வேண்டும்” என்று அவர் ஒற்றைக் காலில் நின்றார்.

அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டு சிவாஜியை மாற்றி விடுவார்களோ என்ற  அச்சத்தில் கிருஷ்ணன்-பஞ்சு ஆகிய இருவரும் அறிஞர் அண்ணாவிடம் அந்த விஷயத்தை சொல்லி சிவாஜி தொடர்ந்து அந்த படத்தில் நீடிக்க அவருடைய உதவியைக் கேட்டனர்.

அத்தனை இடைஞ்சல்களுக்கும் மத்தியில் பராசக்தி வளர்ந்தது. ஏறக்குறைய எட்டாயிரம் அடி வளர்ந்தவுடன் மீண்டும் எல்லோரும் படத்தைப் போட்டுப் பார்த்தார்கள்.

“வசனத்துக்காகப் படமா இல்லை… படத்துக்காக வசனமா?” என்று கேள்வி கேட்ட இயக்குநர் எம்.வி.ராமன் “மறு யோசனையில்லாமல் ஹிரோவை மாத்தியே ஆக வேண்டும்” என்றார். அப்போது மெய்யப்ப செட்டியாரிடம் உதவி இயக்குனராக இருந்த அந்த ராமன்தான்  பின்னர் ‘கொஞ்சும் சலங்கை’ என்ற பிரம்மாண்டமான வண்ணப்  படத்தை இயக்கிய இயக்குநர்.

“இந்தப் படத்தில் கண்ணை மூடிக் கொண்டு வசனங்களைக் கேட்டு ரசிக்கலாம். ஆனால் படத்தையோ, இந்த புதுமுகங்களையோ கண்ணால் பார்க்க முடியவில்லை” என்றார் ஏவி. மெய்யப்ப செட்டியார்.

அப்போது ஏவி.எம்.மில் பணியாற்றியவர்களில் சிவாஜியை மாற்றிவிட்டு வேறு கதாநாயகனைப் போட்டு எடுத்தால்தான் ‘பராசக்தி’ படம் மக்கள் மத்தியில் எடுபடும்  என்று யோசனை சொல்லாதவர்கள் மிகச் சிலரே. ஆனால், அத்தனை எதிர்ப்புகள் வந்த போதிலும் பெருமாள் முதலியார் மட்டும் அசையாமல் சிவாஜி கணேசன்தான் ‘பராசக்தி’ படத்தின் நாயகன் என்று துணிந்து நின்றார்.

“என்னை மாற்றும்படி பெருமாள் முதலியாரிடம் பலரும் வற்புறுத்தினார்கள். ஆனால் என்னை வாழ வைத்த தெய்வமான அவர் அந்த விமர்சனங்கள் எதற்கும் செவி சாய்க்கவில்லை. என்ன ஆனாலும் சரி. கணேசனை வைத்துத்தான் படத்தை எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக  நின்றார்.

அவரது மன  உறுதியும் அவர் என் மீது வைத்திருந்த நம்பிக்கையும்தான் என்னை நடிகனாக்கியது. எனக்கு வாழ்வு கொடுத்த தெய்வம் அவர்” என்று தனது சுய சரிதையில் குறிப்பிட்டிருக்கிறார் சிவாஜி.

சிவாஜியின் மிகப் பெரிய வெற்றிக்குப் பிறகு, ‘எனது வாழ்க்கை அனுபவங்கள்’ என்ற நூலை எழுதிய ஏவி.மெய்யப்ப செட்டியார்  சிவாஜி அந்தப் படத்தில் நடிப்பதற்கு தான் தடையாக இருந்த விஷயங்களை எல்லாம் மொத்தமாக தவிர்த்துவிட்டு “நான் பெருமாள் முதலியாருடன் இணைந்து தயாரித்த ‘பராசக்தி’ படத்தில்தான் சிவாஜி அறிமுகமானார்” என்று ஒற்றை வரியில் அந்த சம்பவத்தைப் பற்றி எழுதி விட்டுப் போயிருக்கலாம்.

ஆனால், சிவாஜி விஷயத்தில் தனது கணக்கு தப்புக் கணக்காகிவிட்டது என்று அந்த நூலில் மிகவும்  நேர்மையாக  பதிவு செய்திருந்தார் அவர். ஏவி.எம். திரையுலகில் இன்றுவரை ஒரு சகாப்தமாக மதிக்கப்படுவதற்குக் காரணம் அவருடைய அந்த நேர்மைதான்.

பலரது எதிர்ப்புகளையும் மீறி பத்தாயிரம் அடி வரை எடுத்து விட்டு படத்தைப் போட்டு பார்த்தபோது மெய்யப்பச் செட்டியாருக்கு சிவாஜி மீது முதல்முறையாக நம்பிக்கை ஏற்பட்டது.

சிவாஜி கணேசன் நடிப்பில் முன்னேற்றம் இருப்பது தெரிந்ததும், நாம் வேண்டாம் என்று சொல்லியும் அவரைப் போட்டார்களே என்று அலட்சியமாக இருந்து விடாமல் ஆரம்பத்தில் எந்தெந்த காட்சிகளில் சிவாஜி நம்பிக்கையில்லாமல் நடித்திருந்தாரோ அந்தக் காட்சிகளை எல்லாம் மீண்டும் படமாக்கச் சொன்னார் ஏவி.எம்.

அப்படி படமாக்கப் பட்ட காட்சிகளின் நீளம் எவ்வளவு என்று  தெரிந்தால் யாரும் ஆச்சர்யம் அடையாமல் இருக்க முடியாது. ஏறக்குறைய ஏழாயிரம் அடி காட்சிகள் மீண்டும் படமாக்கப்பட்டன. ஏவி.எம். ஸ்டுடியோவின் எல்லா அரங்குகளிலும் ‘பராசக்தி’ படத்துக்காக போடப்பட்ட செட்டுகளை எல்லாம் திரும்பவும் போட்டு பதினைந்து நாட்கள் தொடர்ந்து சிவாஜி சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கினார்கள்.

அதைத் தொடர்ந்து 1952 தீபாவளியன்று வெளியான ‘பராசக்தி’ வசூலில் புதியதொரு சாதனையைப் படைத்தது என்றால்.., அதிலே நாயகனாக நடித்த சிவாஜி  உலகம் போற்றுகின்ற ஒரு நடிகராக உயர்ந்தார்.

- Advertisement -

Read more

Local News