விமர்சனம்: பரம்பொருள்

நோயால் பாதிக்கப்பட்ட தன் தங்கையின் மருத்துவ செலவுக்கு பணமில்லாமல் தவிக்கிறார் ஆதி (அமிதாஷ்). மறுபுறம் சொகுசான வாழ்க்கைக்கு ஆசைப்படும் ஊழல் காவல் அதிகாரி மைத்ரேயன் (சரத்குமார்).

வீடு வீடாக சென்று திருடும் ஆதி ஒருநாள் மைத்ரேயன் வீட்டுக்குள் நுழைய வசமாக சிக்குக்கிறார். போலி வழக்குகளை போட்டு சிறையில் அடைத்துவிடுவதாக ஆரம்பத்தில் மிரட்டும் மைத்ரேயன், பின்னர் தன் சுயலாபத்துக்காக ஆஃபர் ஒன்றைத் தருகிறார்.

ஏற்கெனவே சிலைக் கடத்தல் கும்பலுடன் தொடர்பிலிருக்கும் ஆதியிடம், அந்தத் தொடர்புகளை பயன்படுத்தி பழம்பெரும் சிலைகளை விற்று பெரிய அளவில் செட்டிலாகிவிடலாம் எனச் சொல்கிறார்.  அதற்கு ஆதியும் ஒப்புக்கொள்ள, இந்த க்ரைமில் இருவரும் கைகோக்கின்றனர். இறுதியில் சிலையை கடத்தி விற்கும் இவர்களின் திட்டம் கைகூடியதா? தன் தங்கையின் மருத்துவ செலவுக்கு ஆதி பணம் திரட்டினாரா? இதற்குள் நுழைந்த மற்ற திருப்பங்கள் என்னென்ன? – இதுதான் திரைக்கதை.

கடைசியாக ‘ஜெயிலர்’ படத்தில் சிலைக் கடத்தலை பார்த்தோம். தற்போது மீண்டுமொரு சிலைக் கடத்தல் கதை. ஆனால், இயக்குநர் சி.அரவிந்த்ராஜின் ‘பரம்பொருள்’ சுவாரஸ்யமான ஒன்லைன் களம்தான். தொடக்கத்தில் மைக்கதைக்குள் நுழைய நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும் படம், சிலைக் கடத்தலுக்கான உலகை கட்டமைத்து, அதில் பார்வையாளர்களை நுழைய வைப்பதில் தேர்ச்சி பெறுகிறது.

தமிழ்நாட்டின் குக்கிராமத்திலிருந்து வெளிநாடுகள் வரையிலான சிலைக் கடத்தல் நெட்வொர்க் லிங்க், அதையொட்டி வரும் சில விவரிப்புகள், புத்தர் சிலைகள் காலப்போக்கில் எப்படி மருவி வந்தது, பண்டைய தமிழர் வரலாறை படம் தொட்டுச் செல்கிறது.  குறிப்பாக இடைவேளையில் வரும் காட்சி உயிர்கொடுக்கிறது.

நடிப்பு, கேமரா, இசை என அனைத்தும் சிறப்பு.