பா.ரஞ்சித் இயக்கத்தில் அமேசான ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ள ‘சார்பட்டா பரம்பரை’ படம் அனைத்துத் தரப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
குத்துச் சண்டையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தை திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ என்ற குடும்பத்தினரை மையமாக வைத்து ஒரு வெப் சீரீஸ் எடுக்கப் போவதாக ஒரு பேட்டியில் இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
அந்தப் பேட்டியில் பா.ரஞ்சித் இது குறித்துப் பேசும்போது, “இந்த ‘சார்பட்டா பரம்பரை’ பற்றிய கதையை 1980-ம் ஆண்டுகளில் நடப்பதைப் போலதாதான் முதலில் யோசித்து வைத்திருந்தேன். படத்தின் இறுதிக் காட்சியில் எம்.ஜி.ஆர். நேரில் வந்து விருது கொடுப்பது போலவும் காட்சிகளை அமைக்கவும் நினைத்திருந்தேன்.
ஆனால், இந்தப் படத்தில் இருக்கும் அரசியல் நிலவரம் மற்றும் படம் நடக்கும் காலக்கட்டத்தை ஒப்பிட்டுப் பார்த்து அது சரி வராது என்று நினைத்து அந்தக் காட்சியை நான் அப்படி வைக்கவில்லை.
ஆனால், இந்தப் பரம்பரையைப் பற்றி ஒரு வெப் சீரிஸ் எடுக்கும் எண்ணம் இப்போது எனக்குள்ளது. அதில் நான் இந்தப் படத்திற்காக யோசித்த அனைத்தையும் காட்சிப்பபடுத்த முடியும் என்று நினைக்கிறேன்.
அதற்கான ஒரு கதையை இப்போது நான், எழுத்தாளர்கள் தமிழ்ப் பிரபா, கரன் கார்க்கி, பாக்கியம் சங்கர் என நால்வரும் எழுதி வருகிறோம். இது ‘சார்பட்டா பரம்பரை’யின் முன் கதையாக இருக்கும்.
1925-ம் ஆண்டில் ஆரம்பிக்கும் அந்தக் கதையை யோசிக்கும்போதே பின்னி மில் கலவரம் உள்ளிட்ட பல விஷயங்கள் ஒன்று சேர்ந்து கண் முன்னே வந்து நின்று எனக்கு பிரமிப்பை அளிக்கிறது. பின்பு அதைத் திரைப்படமாக எடுக்கவும் ஆசை இருக்கிறது. அப்போது என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்” என்று சொல்லியுள்ளார் இயக்குநர் பா.ரஞ்சித்.