‘தி பேமிலி மேன்-2’ வெப் சீரீஸின் எதிர்பாராத வெற்றியினால் நடிகை சமந்தாவின் சம்பளமும் உயர்ந்துள்ளது. அடுத்துத் தான் நடிக்கவிருக்கும் புதிய வெப் சீரீஸுக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் கேட்டிருக்கிறாராம் சமந்தா.
அதிகப்படியான இந்திய மொழிகளில் பார்க்கப்பட்ட சீரீஸில் நடித்த முதல் நடிகை என்ற பெயரையும் சமந்தா இந்த ‘தி பேமிலி மேன்’ தொடர் மூலமாகப் பெற்றுள்ளார்.
இந்தத் தொடர் விடுதலைப் புலிகளையும், ஈழப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தியதாக இருந்தாலும் சமந்தாவின் பெண் விடுதலைப் புலி நடிப்பு அபாரம்.. அற்புதம் என்கிறார்கள் பார்வையாளர்கள்.
தற்போது சமந்தா, மகாகவி காளிதாஸரின் காவியமான சாகுந்தலத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் ‘சாகுந்தலம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாராகிறது.
இந்தப் படத்தில் சமந்தாவுடன் ஈஸா ரெப்பாவும், மலையாள நடிகர் தேவ் மோகனும் நடிக்கிறார்கள். ‘ருத்ரமா தேவி’ படத்தை இயக்கிய குணசேகரன் இந்தப் படத்தை இயக்குகிறார்.
இந்த ‘தி பேமிலி மேன்-2’ படத்தில் நடித்தமைக்காக சமந்தாவை இனிமேல் தமிழில் நடிக்க வைக்க வேண்டாம் என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் எண்ணியிருக்கிறார்களாம்.
ஆனாலும், தற்போது சமந்தா ‘காத்துல வாக்குல ரெண்டு காதல்’ என்ற விக்னேஷ் சிவனின் படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம் ரிலீஸுக்குத் தயாராகவே உள்ளது.
இந்தப் படத்தின் பிரமோஷனுக்காக சமந்தா சென்னைக்கு வந்தால் நல்ல ‘வரவேற்பு’ கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.