“ஓம் காளி ஜெய் காளி” ஒரு தீவிரமான ஆக்ஷன்-த்ரில்லர் மற்றும் பழிவாங்கும் கதையம்சம் கொண்ட வெப் தொடராக உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தம் 5 எபிசோடுகளாக, ஏழு மொழிகளில் இந்த தொடர் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆக்ஷன், சஸ்பென்ஸ், பழிவாங்குதல் போன்ற பல்வேறு கோணங்களில் இந்த கதையை இயக்குனர் ஜெகநாத் வடிவமைத்துள்ளார். இதில் விமல், புகழ், குயின்சி ஸ்டான்லி, கஞ்சா கருப்பு, மகேஸ்வரி சாணக்யன், பாவனி ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த வெப் தொடர் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
தசரா பண்டிகையின் போது, ஒரு நிறைமாத கர்ப்பிணி பெண் திடீரென கிணற்றில் விழுந்துவிடுகிறார். அந்த ஊரில் நடக்கும் பூஜைக்காக, சாமி வேடமிட்டு இறங்கும் நாயகன் விமல், அந்த பெண்ணை கிணற்றுக்குள் இருந்து மீட்கிறார். அந்த பெண் யார், எதற்காக அவள் கிணற்றில் விழுந்தார், அந்த ஊருக்கும், அந்த பெண்ணுக்கும் என்ன தொடர்பு என்பதை சுற்றியே கதையமைக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ஜெகநாத், இந்த கேள்விகளுக்கான பதில்களை சஸ்பென்ஸ் நிறைந்த திரைக்கதையின் மூலம் வெளிக்கொணர்ந்துள்ளார்.
விமல் மிக வலுவான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். “விலங்கு” வெப் சீரிஸிற்குப் பிறகு, இவரது இந்த வேடமும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெறும். குயின்சி ஸ்டான்லி, நிறைமாத கர்ப்பிணி பெண்ணாக தனது நடிப்பில் அசத்தியிருக்கிறார். குறிப்பாக பிளாஷ்பேக் காட்சிகளில் அவர் காட்டிய நடைமுறைகளும் உணர்வுகளும் பாராட்டிற்குரியது. புகழ், கஞ்சா கருப்பு, மகேஸ்வரி மற்றும் பாவனி ரெட்டி ஆகியோரும் கதையின் வலுவை அதிகரிக்க, தங்களது சிறப்பான நடிப்பினால் முக்கிய பங்கை வகிக்கிறார்கள்.
இந்த வெப் தொடரின் முக்கிய அம்சம், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வனவாசம் என்ற ஊரை மையமாக கொண்டு கதைக்களத்தை உருவாக்கியிருப்பது. சண்டைக்காட்சிகள், பாடல்கள் போன்றவை பெரும் அழகுடன் உருவாக்கப்பட்டுள்ளன. ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் இப்படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளது. தசரா திருவிழாவின் காட்சிகளை, பார்வையாளர்களை மெய்சிலிர்க்கும் விதத்தில் படமாக்கியிருப்பது, ஒளிப்பதிவாளர் மற்றும் எடிட்டிங் குழுவின் சிறப்பான செயல்பாட்டை காட்டுகிறது.”ஓம் காளி ஜெய் காளி”, அதிரடி, திரில்லர், பழிவாங்கும் கதையம்சம் கொண்ட சீரிஸாக, ஆக்ஷன் ரசிகர்கள் மற்றும் திரில்லர் ஆர்வலர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெறும் என நம்பப்படுகிறது.