Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

“ஒரு மெசேஜ் படத்தை எடுத்ததால்தான் இவ்வளவு கஷ்டம்” – ‘நுங்கம்பாக்கம்’ படத்தின் இயக்குநர் வேதனை!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

திதிர்  பிலிம் ஹவுஸ், ஐகான் ஸ்டுடியோஸ், ட்ரீம்வேர்ல்ட் சினிமாஸ் வழங்க அஜ்மல் நடித்துள்ள படம் ‘நுங்கம்பாக்கம்.’

தமிழகத்தையே உலுக்கிய நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனில் நடைபெற்ற ஸ்வாதி கொலை வழக்கினை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தை எழுதி இயக்கி இருக்கிறார் இயக்குநர் எஸ்.டி.ரமேஷ் செல்வன். இவர் ஏற்கெனவே ‘உளவுத்துறை’, ‘வஜ்ரம்’, ‘ஜனனம்’ ஆகிய படங்களை இயக்கியவர்.

இப்படம் போஸ்டர் வெளியீட்டில் இருந்து டீசர் மற்றும்  டிரைலர் வெளியீட்டுவரையிலும் கடும் பிரச்சனைகளைச் சந்தித்தது.

படத்தின் வெளியீட்டுத் தேதியை பல முறை அறிவித்தும் வெளிவர முடியாத சூழலில் இருந்த இப்படம் வரும் 24-ம் தேதி இணையத்திலும், ஓடிடி தளங்களிலும்  வெளியாகிறது.

அதை முன்னிட்டு படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு, நேற்று ரெஸிடென்ஸி டவர்ஸ் ஓட்டலில் நடைபெற்றது.

விழாவில் படத்தின் தயாரிப்பாளர் ரவி தேவன் பேசும்போது, “முதலில் இந்தப் படத்தை ஏன் ஆதரிக்கணும் என்ற கேள்வி நம் எல்லாருக்குள்ளும் இருக்கும். ஆனால் நாம்  இந்தப் படத்திற்கு நல்லாதரவு தரணும். நீங்கள் வீட்டில் இருந்தே பார்க்கும்படியாக வசதியை ஏற்படுத்தி இருக்கிறோம். இந்தப் படத்தில் உங்களின் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் இருக்கும். இந்தப் படத்தைப் பெரிதாக வெற்றிபெற வைக்க வேண்டும்” என்றார்.

நடிகர் ஆர்.என்.ஆர்.மனோகர் பேசும்போது, “சமுதாயத்தின் முகமூடியை கிழிக்கும் பட விழாவிற்கு நாம் அனைவரும்  முகமூடி அணிந்து வந்துள்ளோம். பல தடைகளைக் கடந்து வந்துள்ள  இப்படைப்பு ஒரு மாபெரும் படைப்பாக இருக்கும்” என்றார்.

நடிகர் அஜ்மல் பேசும்போது, “இந்த ‘நுங்கம்பாக்கம்’ திரைப்படம் ஒரு உண்மைச் சம்பவத்தை அடித்தளமாக கொண்ட படம். பல தடைகளைத் தாண்டி கொண்டு வந்துள்ளோம். இவ்வளவு கஷ்டப்பட்டு கொண்டு வந்ததிற்கு காரணம் இருக்கிறது. இந்தப் படம் மூலமாக பல விசயங்கள் வெளிவரும். பல உண்மைகள் தெரியும். இப்படத்தை நீங்கள் ஆதரிக்க வேண்டும்” என்றார்.

பாடலாசிரியர் சினேகன் பேசும்போது, “ஏழு மாதங்கள் கழித்து உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்தப் படத்தின் பிரச்சனைகள் எப்போது முடியும். இந்தப் படம் எப்போது வரும் என்று கேட்டுக் கொண்டே இருந்தேன்.

ஒரு உண்மைச் சம்பவத்தைச் சொல்ல இங்கு இவ்வளவு போராட்டங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. இந்தப் படம் வராவிட்டால் அந்த கொலை வழக்கே நமக்கு மறந்து போய்விடும். எதற்காக இந்த இயக்குநர் மீது ஏழு கேஸ் போட்டார்கள் என்றே தெரியவில்லை. இந்தப் படம் பற்றிய செய்தி வெளிவந்தாலே பலருக்குப் பயம் வந்துவிடும்.

தான் எடுத்த காரியத்தை கடைசிவரை முடித்த இயக்குநரைப் பாராட்ட வேண்டும். நீதிமன்றங்களில் கொஞ்சம் ஈரம் இருந்ததால்தான் இந்தப் படம் வெளிவர இருக்கிறது. இவ்வளவு போராட்டத்தை சந்தித்த இயக்குநருக்கு இந்த சினிமாக்காரர்கள் யாரும் இவருக்கு ஆதரவாக குரல் கொடுக்க முன் வராதது மிகவும் தவறான விஷயம்.

எதையெதையோ பார்த்தோமே.. ₹49 ரூபாய் கொடுத்து இந்தப் படத்தை பார்ப்போம். போராடுபவன் இறைவனின் பிள்ளை. போராட்டம் தோற்பதே இல்லை. இந்தப் படம் பெரிய வெற்றியடைய வாழ்த்துகள்…” என்றார்.

இயக்குநர் ரமேஷ் செல்வன் பேசும்போது, “கிட்டத்தட்ட இரண்டரை வருட காலப் போராட்டம். கஜினி முகமதுவை விட அதிகப் போராட்டங்களைச் சந்தித்தேன்.

நான் 80% உண்மையாக இருப்பவன். சினிமாவில் சில விசயங்களை செய்யவே முடியாது. ஒரு மேட்டர் படத்தை எடுத்தால் ஈசியா ஜெயிச்சிருக்கலாம். ஒரு மெசேஜ் படத்தை எடுத்ததால்தான் இவ்வளவு கஷ்டம்.

இந்தப் படத்தின் டீசர் வெளிவந்த பின் பெரிய ரீச் ஆனது. அப்பவே வியாபாரத்திற்கு வழி கிடைத்தது. ஆனால் இந்தப் படத்தை வெளியிடக் கூடாது என அந்தப் பெண்ணின் தந்தை நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுவிட்டார்.

அந்தப் பெண் செத்து மூன்று மணி நேரம் யாருமே அருகில் செல்லவில்லை. இந்தப் படத்தின் கதையை ரைட்டர் சூளைமேட்டில் ஒவ்வொரு தெருத் தெருவாகப் போய் எழுதினார்.  இந்தப் படத்தில் சைபர் க்ரைம், போலீஸ் டிப்பார்ட்மெண்ட் முதற்கொண்டு பல விசயங்கள் இருக்கு.

என்னைக் கைது செய்ய நினைத்த போலீஸுக்கு என் மீது எந்தச் சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்வது என்பதே தெரியவில்லை. இதற்காக அப்போதைக்கு சென்சார் போர்டு அதிகாரியாக இருந்த பக்கிரிசாமியிடம் போய் கேட்டு அவர் சொன்ன பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தார்கள்.

நான் பெங்களூரில் போய் ஒரு வாரத்திற்கு மறைந்திருந்து நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று சென்னைக்கு வந்தேன். நான் ஏழு படங்களை இயக்கம் செய்தவன். ஆனால் என்னை 10 கொலைகளைச் செய்தவன் போல நடத்தினார்கள் போலீஸார். என் ஆபீஸில் வேலை பார்த்தவர்கள் முதற்கொண்டு துணை, இணை இயக்குநர்கள்வரையிலும் 24 பேரிடம் போலீஸார் விசாரித்தார்கள்.

போலீஸ் என்னை படத்தில் அதைத் தூக்கு, இதைத் தூக்கு என்று நச்சரித்தார்கள். கமிஷனர் முதல் பலரையும் சந்தித்து கதை சொல்லி அவர்களிடம் 6 மாதம் கழித்துதான் லெட்டர் கிடைத்தது.

அதன் பின்புதான் சென்சாருக்குச் சென்றேன். அங்கு டைட்டில் மற்றும் கதாபாத்திரங்களின் பெயர்களை மாற்றச் சொன்னார்கள். மாற்றினேன். ஆனால் கடைசியாக கிளைமாக்ஸை மாற்றச் சொன்னார்கள். நான் சம்மதிக்கவில்லை. மீண்டும் ஒரு ஆறு மாத காலப் போராட்டம்.

இது முடிந்ததும் அந்தணர் சங்கத்தில் இருந்து என் மீது வழக்கு போட்டார்கள். அந்த வழக்கும் ஒரு நாள் முடிவுக்கு வந்தது. அதையும் சமாளித்து  படத்தை வெளியிட நினைத்தபோது திடீரென்று கொரோனா வந்துவிட்டது.

இதனால் இத்தனை கால தாமத்திற்குப் பிறகு தற்போது Cineflix என்ற ஓடிடி தளத்தில் இந்த நுங்கம்பாக்கம் படம் வரும் 24-ம் தேதி வெளிவருகிறது. இந்தப் படத்தை அனைத்து கேபிள் இணைப்புகளில் 77-ஆம் நம்பரை ரிமோட்டில் அழுத்திப் பார்க்கலாம். இதற்கான கட்டணம் வெறும் 49 ரூபாய்தான்.

இதேபோல் தமிழ் ராக்கர்ஸிடம் ஒரு சின்ன வேண்டுகோள். தயவு செய்து இந்தப் படத்தை காப்பி செய்து வெளியிடாதீர்கள். அப்படி எடுத்தால் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை..

ராம்குமார் குடும்பம் சார்பாகவும், சுவாதி குடும்பம் சார்பாகப் படத்தைப் பார்த்துவிட்டு என்னைப் பாராட்டினார்கள்…” என்றார்.

- Advertisement -

Read more

Local News