Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

“இப்போது எதிரிகள் யாரென்றே தெரியவில்லை” – எழுத்தாளர் சங்க விழாவில் கே.பாக்யராஜ் பேச்சு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்திற்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது. இந்த தேர்தலில் வென்ற  புதிய நிர்வாகிகளின்  பதவியேற்பு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

நிர்வாகி உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்ட  இவ்விழாவினில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக  நடிகர் மற்றும் இயக்குநருமான கே.பாக்கியராஜூம் பதவியேற்று கொண்டார்.

இவ்விழாவினில் தமிழ் திரைப்பட பிரபலங்கள், இயக்குநர் சங்க உறுப்பினர்கள், பெப்சி உறுப்பினர்கள் பலர் கலந்து வெற்றி பெற்றவர்களை வாழ்த்தினர்.

தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது, “இந்தத் தேர்தல் மிக முக்கியமானது. இதுவரையிலும் நடந்தது போராட்டம் இல்லை. இனிமேல்தான் நமக்கான போராட்டமே காத்திருக்கிறது. தேர்தலுக்கு முன்பாவது எதிரி யாரென்று தெரியும். ஆனால், இப்போது எதிரி யாரென்றே தெரியவில்லை.

இந்த வெற்றி அனைவருக்கும் பொதுவானது. எனக்கு கிடைக்கும் பாராட்டு எதிர் அணியினருக்கும் உரித்தானது. சங்கம் சிறக்க அவர்களுடன் இணைந்து வேலை செய்வேன். அளவோடு பேசுபவர்களை உலகம் பாராட்டும். அதனால் அளவோடு பேசுகிறேன்.

உனக்குள்ளே இருக்கும் மனசாட்சிதான் சாமி. அந்த மனசாட்சிக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும். சினிமாவில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் எழுத்தாளர்கள்தான். கதை ஆசிரியர்களின் உரிமைக்காக போராடுவது எங்களது கடமை.  எதுவும் இல்லை என்றால் தர்ணாவில் ஈடுபட்டாவது நமது உரிமையை கேட்போம்.

நான் பெரிதாக எழுத்தாளர்களுக்கு எதுவும் செய்யவில்லை. இருப்பினும் என்னை தேர்தலில் ஜெயிக்க வைத்துள்ளனர். இனி அவர்களுக்காக பாடுபடுவேன். எங்களுக்கு எதிர் அணி என்று எதுவும் இல்லை, எல்லாரும் ஒரே அணிதான். எழுத்தாளர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான அனைத்து முயற்சிகளும் எடுத்து எல்லா உதவிகளும் செய்து தருவேன்…” என்றார்.

இயக்குநர் கே.பாக்யராஜ் 2020-ம் ஆண்டு தேர்தலிலும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News