1991-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் ஆட்சியின்போது ‘நீங்க நல்லா இருக்கணும்’ என்ற தமிழ்த் திரைப்படம் தமிழக அரசின் நிதியுதவியால் தயாரிக்கப்பட்டது.
இந்தப் படத்தை ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஜி.வெங்கடேஸ்வரன் தயாரித்திருந்தார். இந்தப் படத்தில் ‘நிழல்கள்’ ரவி நாயகனாகவும், பானுப்பிரியா நாயகியாகவும் நடித்திருந்தனர். மேலும் மனோரா, சந்திரசேகரும் நடித்திருந்தனர்.
இந்தப் படம் மதுவின் தீமைகளை விளக்கி மக்கள் விழிப்புணர்ச்சிக்காக எடுக்கப்பட்ட திரைப்படம். இத்திரைப்படத்திற்கு விசு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருந்தார்.
இத்திரைப்படத்தில் நாயகனாக நடித்திருந்த ‘நிழல்கள்’ ரவி, இத்திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு தனக்குக் கிடைத்தவிதம் தெய்வ அனுகூலம் என்று சொல்லியிருக்கிறார்.
இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘சாய் வித் சித்ரா’ என்னும் நிகழ்ச்சியில் அவர் இது பற்றிப் பேசியிருக்கிறார்.
“1991-ம் வருடத் துவக்கத்தில் திடீரென்று எனக்கு சபரிமலைக்கு போய் ஐயப்பனை தரிசிக்க வேண்டும் என்று தோன்றியது. இதற்காக நம்பியார் சாமியிடம் போய் கேட்டேன். அவர் நான் இப்பத்தான் போயிட்டு வந்தேன். நீ காந்த்கிட்ட போ. அவர்தான் இப்போ விரதம் இருந்து கோவிலுக்குப் போகப் போறாருன்னு சொன்னார்.
நேரா நடிகர் காந்த் ஸார்கிட்ட போய் இருமுடி கட்டிக்கிட்டு அவரைக் குருவா ஏத்துக்கிட்டு சபரிமலைக்கு போனேன். எனக்கு அதுதான் முதல் அனுபவம். அதுனால மலைல வெறும் கால்ல நடந்ததெல்லாம் ஒரு அனுபவம்.
அங்கே ஒரு நாள் ராத்திரி தூங்கிக்கிட்டிருந்தேன். அப்போ ஒரு கனவு. அந்தக் கனவுல வந்தது அப்போ சி.எம்.மா இருந்த ஜெயலலிதாம்மா. அவங்ககிட்ட நான் பேசிக்கிட்டிருக்குற மாதிரியிருந்தது. அப்போ சட்டுன்னு என்னை எழுப்பிவிட்டுட்டாங்க.. கனவு கலைந்து தூங்கியெழுந்தேன். அப்பவே எனக்கு என்னமோ ஒண்ணுன்னு தோணுச்சு.. என்னடா இது.. சம்பந்தமே இல்லாம அம்மா நம்ம கனவுல வந்திருக்காங்களேன்னு.. அப்படியே மலையேறி ஐயப்பனை தரிசித்துவிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்.
இங்க வந்து ஒரு பத்து நாள் கழிச்சு திடீர்ன்னு ஜி.வி.கிட்ட இருந்து எனக்கு ஒரு போன் வந்துச்சு.. “நான் ஒரு படம் தயாரிக்கப் போறேன். அரசு சப்போர்ட் பண்றாங்க. டைட்டில் நீங்க நல்லா இருக்கணும். இதுக்கு அமெரிக்கால 20 நாள் ஷூட்டிங் இருக்கு. நீங்கதான் ஹீரோ. சி.எம். மேடம் நீங்க நடிக்கணும்னு சொல்றாங்க. படத்துல அவங்களும் வர்றாங்க.. அவங்ககூடவும் உங்களுக்கு சீன்ஸ் இருக்கு…”ன்னு சொன்னார். எனக்கு அதைக் கேட்டவுடனேயே அப்படியே தூக்கிவாரிப் போட்டிருச்சு.
அந்தக் கனவு கண்டு 10 நாள்தான் ஆச்சு.. அதுக்குள்ள எல்லாம் நனவாகுற மாதிரியாயிருச்சேன்னு எனக்கு அப்படியொரு ஆச்சரியம்.. நம்பவே முடியலை. அதே மாதிரி அந்தப் படத்துல நடிச்சேன். சி.எம். அம்மா வீட்லயே ஷூட்டிங் நடந்துச்சு. அவங்களும் அதுல நடிச்சுக் கொடுத்தாங்க. நானும் அவங்ககிட்ட ரொம்பப் பேசினேன். எனக்கு ரொம்பப் பெருமையாவும், சந்தோஷமாவும் இருந்தது..
சில நேரங்கள்.. சில விஷயங்கள்.. நமக்கு எதிர்பாராமல் நடந்து நம்மை சந்தோஷப்படுத்தும்ன்னு சொல்வாங்க. அது மாதிரி என் வாழ்க்கைல நடந்த விஷயம் இது..” என்றார் நிழல்கள் ரவி.