தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷின் தயாரிப்பில் நடிகர் சிம்புவின் நடிப்பில் கெளதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் உருவான ‘வெந்து தணிந்தது காடு’ படம் வெற்றியடைந்ததையடுத்து அந்தப் படக் குழுவினரின் சார்பில் நன்றி அறிவிப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது.
தயாரிப்பாளர் Dr ஐசரி K.கணேஷ் பேசும்போது, “இந்தப் படம் தமிழ்நாட்டை தாண்டி, பல இடங்களில் பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்தப் படத்தை தயாரித்ததில் எங்கள் நிறுவனம் பெருமை அடைகிறது.
நடிகர் சிம்பு இந்த படத்தின் முத்து கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளார். இந்தப் படம் முழுவதிலும் அவருடைய நடிப்பு பெரிய தாக்கத்தை உருவாக்கியது. இந்த படத்திற்காக அவர் கண்டிப்பாக தேசிய விருது வாங்குவார். அதற்கு வேல்ஸ் நிறுவனம் உறுதுணையாக இருக்கும். இந்தப் படத்திற்காக அவர் கடின உழைப்பை கொடுத்துள்ளார்.
இயக்குநர் கௌதம் அவருடைய பாணியில் இல்லாமல், வேறு ஒரு பாணியில் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தை வெற்றி படமாக அவர் மாற்றியுள்ளார். இந்த படத்தின் கூடுதல் சிறப்பு ஏ.ஆர்.ரகுமான் சார்தான். அவருக்கு எனது நன்றிகள். ஒளிப்பதிவாளர், எடிட்டர் மற்றும் அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் நடைபெற்றுவருகிறது. படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு நன்றி. வெந்து தணிந்தது காடு பாகம்-2 விரைவில் தயாராகும்.” என்றார்.