Thursday, April 11, 2024

நான் மிருகமாய் மாற – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஒரு சாதாரண மனிதன் சந்தர்ப்ப சூழ்நிலையால் எவ்வாறு மிருகமாக மாறுகிறான் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

சினிமாவில் சவுண்டு இன்ஜினியராகப் பணியாற்றி வருகிறார் பூமிநாதன்’ என்ற சசிகுமார். இவரது தம்பியைக் கூலிப்படை ஒன்று கொலை செய்கிறது. அவர்களுக்குத் சட்டப்படி தண்டனை வாங்கித் தருவது நீதிமன்ற வழக்கப்படி முடியாது என்பதை உணரும் சசிகுமார், சட்டத்தின் வழியை நாடாமல், வன்முறையைக் கையில் எடுத்து அவர்களைப் பழி வாங்குகிறார்.

இவர் செய்த பதிலடியால் சசிகுமாருக்கும் அவரது குடும்பத்திற்கும் தொடர் ஆபத்துகள் ஏற்படுகின்றன. யாரும் பார்க்கவில்லை என்று நினைத்து செய்த படுகொலைகளுக்கு சாட்சிகள் இருப்பதாகச் சொல்லும் புதிய வில்லன், சசிகுமாருக்கு புதிய அஸைண்மெண்ட்டை கொடுக்கிறான். அவன் சொன்னதை செய்யவில்லையென்றால் சசிகுமாரின் குடும்பத்தையே கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறான்.  

செய்வதறியாமல் தவிக்கும் சசிகுமார் வில்லனுக்கும், தன் குடும்பத்துக்கும் நடுவில் மாட்டிக் கொள்கிறார். இனி அவர் என்ன செய்கிறார்..? தன் குடும்பத்தைக் காப்பாற்றினாரா..? இல்லையா..? என்பதை ரத்தம் தெறிக்கத் தெறிக்கச் சொல்கிறது இந்த ‘நான் மிருகமாய் மாற’ படம்.

சமீபத்தில் வந்த தமிழ்ப் படங்களில் இந்த அளவுக்கு ரத்தம் சிதறியது இந்தப் படத்தில்தான் இருக்கும். சசிகுமாரின் முதல் படமான சுப்ரமணியபுர’த்தில் நடந்த ரத்தச் சிதறல்களையும் இந்தப் படம் தாண்டிவிட்டது.

அழுகை, கோபம், இயலாமை, சோகம், பதற்றம் என்ற பல்வேறு உணர்ச்சிகளையும் உள்ளடக்கிய நடிப்பைத் தன்னால் முடிந்த அளவு காண்பித்திருக்கிறார் சசிகுமார். சசிகுமாரை மிக அதிகக் காட்சிகளில் அழுக வைத்திருப்பதும் இந்தப் படம்தான். சிரிப்பே இல்லாமல் சசிகுமார் தனது சோக முகத்தை வைத்தே கடைசிவரையிலும் படுகொலைகளைச் செய்கிறார்.

சசிகுமார் மட்டுமல்ல.. அவருடன் நடித்திருக்கும் அனைவருமே தங்களது சோகத்தை காட்சிக்குக் காட்சி வெளிப்படுத்தி நம்மையும் கதற வைக்கிறார்கள். ஹரிபிரியாவின் ஸ்கிரீன் பிரசன்ஸ் சில நிமிடங்களுக்கு பார்வையாளர்களுக்கு இளைப்பாற்றலை தந்தாலும் 90 சதவிகிதம் அழுவாச்சி காவியமாக இந்தப் படம் மாறியிருக்கிறது.

அடிக்கடி, ‘டேய் உன்ன வெட்டிக் கொன்றுவேன்டா’ என்று பலரிடமும் கத்துகிறார் சசிகுமார். இந்த வசனத்தையாவது காட்சிக்குக் காட்சி மாற்றியிருந்தால் கேட்பதற்காகவாவது நன்றாக இருந்திருக்கும்.

இடைவேளைக்கு முன்புதான் விக்ராந்த் கதைக்குள்ளேயே வருகிறார். இவரது வருகை படத்தின் திரைக்கதையில் வேகத்தையும், திருப்பத்தையும் கொடுக்கும் என்று எதிர்பார்த்தால் அதுவும் இல்லை. போதாக்குறைக்கு இவருக்குக் கொடுக்கப்பட்டுள்ள பின்னணிக் குரலிலும் மிடுக்கும், தைரியமும்  இல்லாமல் போக.. சுமாராகிப் போனது இவரது கேரக்டர்.

நேரடியாகக் களத்தில் இறங்கி அடித்து ஆடியிருக்க வேண்டிய விக்ராந்தை, சும்மா நிக்க வைத்து.. நடக்க வைத்து.. போனிலேயே பேச வைத்து கதையை முடித்திருக்கிறார்கள். இன்னொரு வில்லனாக வரும் அப்பானி சரத் முதல் பாதியில் சிறிது வில்லத்தனத்தை செய்திருக்கிறார். ஆனால் பின் பாதியில் இவரும் காணாமல் போய்விட்டார்.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் இரவிலேயே படமாக்கப்பட்டுள்ளதால், ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜியின் திறமைக்கு நல்ல வேலை கொடுத்துள்ளார் இயக்குநர். அந்த வகையில் நமது கண்களுக்கு ஈறு விளைவிக்காமல் சமர்த்தாக இருக்கிறது ஒளிப்பதிவு. இது போன்ற திரில்லர் படங்களுக்கு மிகப் பெரிய துணையே பின்னணி இசைதான். இந்தப் படத்தில் ஜிப்ரான் இதை முழுமையாகச் செய்யாததால் அதுவும் வீணாகிவிட்டது.

படத்தின் துவக்கத்தில் சில நிமிடங்கள்வரையிலும் பரபரப்பாக ஓடிய திரைக்கதை பின்பு கொஞ்சம், கொஞ்சமாக அமுங்கிவிட்டது. ரத்தச் சகதியை இன்னும் கொஞ்சம் கத்திரி போட்டிருந்தால் நம் மனசுக்கு ஆறுதலாக இருந்திருக்கும். சவுண்டு இன்ஜினியர் என்ற கேரக்டர் ஸ்கெட்ச் கொண்ட கதையிலேயே சவுண்ட் டிஸைனிங் சுமார் என்றால் எப்படிங்கோ..? சிலர் பேசும்போது டப்பிங்கில் சின்க் ஆகாமல் போகிறது. தேவையற்ற நேரங்களில், தேவையற்ற ஒலி ஊடுறுவியிருக்கிறது. டெக்னிக்கல் சைடில் கொஞ்சம் ஏமாற்றம்தான்.

தம்பிக்காக 6 கொலைகளை செய்யத் துணியும் சசிகுமாருக்கு அந்தத் தம்பியுடனான நட்பும், பாசமும், அன்பும் எப்படியிருந்தது என்பதைக் காட்ட ஒரு காட்சியும் இல்லாததால் சசிகுமாரின் சோகத்தில் ரசிகர்களாலும் பங்கெடுத்துக் கொள்ள முடியவில்லை. இதனாலேயே ஏதோ கத்தியை எடுத்தார். வீராவேசமாக எதிரிகளின் கோட்டைக்குள் நுழைந்து வெட்டு, குத்து என்று அத்தனை பேரையும் சம்ஹாரம் செய்துவிட்டு சத்தமில்லாமல் வீட்டுக்கு வந்து குளியலைப் போட்டுவிட்டு அமர்வதையெல்லாம் நாம் சாதாரணமாகவே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

சசிகுமார் ஒலிப்பதிவு பொறியாளர் என்பதால் வில்லன் பேசும் ஆடியோவை வைத்து அவன் இருக்கும் ஏரியாவையும், சுற்றுச் சூழலையும் கண்டறியுவிதம் சிறப்பாகத்தான் உள்ளது என்றாலும் இதுவும் கொலை செய்யவே உதவுகிறது என்பதால் இதுக்குத்தான் அதுவா என்று நமக்கு அயர்ச்சிதான் ஏற்படுகிறது.

விக்ராந்த், சசிகுமாருக்குத் தரும் கொலை அசைண்மெண்ட்டை ஏற்று மருத்துவமனையில் மதுசூதனனை கொலை செய்ய முயற்சிக்கும் அத்தருணம் சற்று படபடப்பையும், பரபரப்பையும் நமக்குக் கொடுத்திருக்கிறது. ஆனால், படம் முழுவதும் இந்த உணர்வைக் கொண்டு வந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்குமே..!?

அதீத வன்முறை.. ரத்தச் சிதறல்.. பழி வாங்கும் உணர்வு, தேடுதல் வேட்டை.. என்று பயங்கர பரபரப்புக்கு தேவையான அத்தனையையும் வைத்துக் கொண்டு இதை குடும்ப சென்டிமெண்ட்டுக்குள் அடக்கப் பார்த்த இயக்குநர், கடைசியாக தோல்வியைத்தான் தழுவியுள்ளார்.

இது வன்முறையின் உச்சக்கட்டமாக மட்டுமே காட்சியளிக்கிறது..!!!

RATING :  2 / 5

- Advertisement -

Read more

Local News