தனது மகனான நடிகர் விஜய்யின் ரசிகர்களை நம்பி அரசியல் கட்சியைத் துவக்கியிருக்கும் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் கோலிவுட்டிலும் படு பிஸியாகவே இருக்கிறார்.
இப்போது அவர் ‘நான் கடவுள் இல்லை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். படத்தின் தலைப்பே சர்ச்சையை அளிக்கிறது.
இந்தப் படத்தில் ஆர்.கே.சுரேஷ் நாயகனாகவும், சாக்சி அகர்வால் நாயகியாகவும் நடிக்கின்றனர். கூடுதல் போனஸாக இனியாவும் படத்தில் இருக்கிறாராம். இதில் வில்லனாக சமுத்திரக்கனி நடிக்கிறார்.
இப்போதே இந்தப் படத்தின் படப்பிடிப்பில் முக்கால் பங்கு முடிந்துவிட்டது. இந்த மாதத்திற்குள் மொத்தமும் முடிந்துவிடுமாம்.
எல்லாம் சரி.. கட்சியும் ஆரம்பிச்சாச்சு.. இதனாலேயே மத்திய, மாநில அரசுகள் கண்ணில் விளக்கெண்ணெய் போட்டு தேடுவார்கள்.
படத்தின் தலைப்பில் ‘கடவுள்’ என்றும் வைத்திருக்கிறார். பிரச்சினை சென்சாரில் வருமா.. அல்லது வெளியில் இருந்து வருமா என்பது தெரியலையே என்று சொல்லி சிரிக்கிறார்கள் சினிமாத் துறையினர்.
ஆனால் எஸ்.ஏ.சி.யோ மிகவும் கூலாக இருக்கிறார். ஏனெனில் படத்தின் நாயகன் ஆர்.கே.சுரேஷ் இ்ப்போது பா.ஜ.க.வில் முக்கியப் புள்ளியாக இருக்கிறார். அவரை வைத்து எதையும் சமாளித்துக் கொள்ளலாம் என்றுதான் தெம்பாக இருக்கிறாராம் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்.