Thursday, April 11, 2024

நாய் சேகர் ரிட்டன்ஸ் – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழில் மிகப் பிரம்மாண்டமான படைப்புகளை வழங்கி வரும் லைகா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சுராஜ் இயக்கத்தில், நீண்ட இடைவேளைக்கு பிறகு ‘வைகைப் புயல்’ வடிவேலு நாயகனாக நடித்திருக்கும் படம் இது.

படத்தில் வடிவேலுவுடன் ஷிவானி நாராயணன், அரவிந்த்ராஜ், ராவ் ரமேஷ். சச்சு, வேல ராமமூர்த்தி, ரெடின் கிங்ஸ்லி, காமெடி ஷிவாங்கி, இட் இஸ் பிரசாந்த், மாறன், முனீஸ்காந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

வடிவேலுவின் புகழ் பெற்ற கதாப்பாத்திரமான நாய் சேகர் பெயரை வைத்து மீண்டும் தான் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுப்பதுபோல நினைத்து இந்தத் தலைப்புடன் வந்திருக்கிறார் வடிவேலு.

திருமணமாகி பல ஆண்டுகள் ஆனாலும் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்த வடிவேலுவின் பெற்றோர் பாட்டி சச்சுவுடன் பைரவர் கோவிலுக்கு வேண்டுதலுக்காக செல்கிறார்கள்.

அங்கேயிருந்த ஒரு சித்தர் ஒரு குட்டி நாயை அவர்களிடத்தில் கொடுத்து இது அதிர்ஷ்டக்கார நாய். இது யார் வீட்டில் இருக்கிறதோ அங்கே செல்வத்திற்குப் பஞ்சமிருக்காது என்று சொல்கிறார்.

சித்தர் சொன்னதுபோலவே அந்த நாய் வீ்ட்டிற்கு வந்தவுடனேயே வடிவேலுவின் அம்மா கருவுற்று வடிவேலுவைப் பெற்றெடுக்கிறாள். கூடவே அவர்களுடைய வறுமையும் ஒழிந்து பணக்காரராகிறார்கள்.

ஆனால் இதுவும் கொஞ்ச நாளைக்குத்தான். அந்த அதிர்ஷ்டக்கார நாயைக் கவனித்துக் கொள்ள ராவ் ரமேஷை நியமிக்கிறார் வேல.ராமமூர்த்தி. வந்து சேர்ந்த சில மாதங்களிலேயே அந்த நாயின் அதிர்ஷ்டத்தை அறிந்து கொண்ட ராவ் ரமேஷ். அந்த நாயை லவட்டிக் கொண்டு ஓடிப் போகிறார்.

நாய் போன வேகத்திலேயே வடிவேலுவின் வீட்டின் செல்வம் கரைகிறது. அம்மாவும், அப்பாவும் இறந்து போக.. தற்போது தனது பாட்டி சச்சுவுடன் வாழ்ந்து வருகிறார் வடிவேலு.

தன்னுடைய கூட்டாளிகளான ஷிவாங்கி மற்றும் ரெடின் கிங்ஸ்லியுடனும் வீட்டில் வளர்க்கும் நாய்களைக் கடத்தி வந்து அதன் மூலமாகக் காசு பார்க்கும் திருட்டுத் தொழிலை செய்து வருகிறார்.

இந்த நாய் கடத்தலில் ஒரு அஸைன்மெண்ட்டாக தாஸ் என்கிற ஆனந்த்ராஜின் நாயையும் கடத்தி விடுகிறது வடிவேலு அண்ட் கோ. ஆனால் நாய் இருந்த காரில் இருந்த 10 கோடி ரூபாய் பணத்தைத் தேடி ஆனந்த்ராஜ் வடிவேலுவைத் தூக்கி வந்து விசாரிக்கிறார்.

ஆனந்த்ராஜிடமிருந்து அடி, உதைபட்டு, சிக்கிச் சின்னாபின்னமாகி தப்பித்து வரும் வடிவேலுவிடம் தங்களது டும்பத்தின் கடந்த காலத்தைப் பற்றி அவரது பாட்டி சச்சு எடுத்துக் கூறுகிறார்.

இப்போது அந்த அதிர்ஷ்டக்கார நாய் ஹைதராபாத்தில் ராவ் ரமேஷின் வீட்டில் இருப்பதையும், ராவ் ரமேஷ் அந்த நாயை வைத்திருப்பதாலேயே தற்போது மிகப் பெரிய கோடீஸ்வரனாக இருப்பதையும் அறிகிறார் வடிவேலு.

உடனேயே தங்களுக்குச் சொந்தமான அந்த அதிர்ஷ்க்கார நாயை மீட்டு வர தனது நண்பர்களுடன் ஹைதராபாத் செல்கிறார் வடிவேலு. இதே நேரம் வடிவேலுவை பழிக்குப் பழி வாங்கத் துடிக்கும் ஆனந்த்ராஜூம் வடிவேலுவைத் தேடி ஹைதராபாத்துக்கு வருகிறார். மூன்றாவதாக போலீஸ் இன்ஸ்பெக்டரான முனீஸ்காந்தும் ஒரு வழக்கில் வடிவேலுவை கைது செய்ய ஹைதராபாத்துக்கு ஓடி வருகிறார்.

ஹைதராபாத்தில் வடிவேலு அந்த அதிர்ஷ்டக்கார நாயைக் கண்டு பிடித்தாரா இல்லையா.. ஆனந்த்ராஜ் வடிவேலுவை என்ன செய்தார்.. முனீஸ்காந்த் வடிவேலுவை கைது செய்தாரா.. இல்லையா..? என்பதுதான் இந்தப் படத்தின் மீதிக் கதை.

“என்னை திரையுலகில் இருந்து ஒழித்துக் கட்ட சிலர் முயற்சிக்கிறார்கள். ஆனால் அது முடியாது.. எனக்கு எண்ட் கார்டே கிடையாது…” என்று வடிவேலு சொல்லிக் கொண்டிருப்பதெல்லாம் அவரது கண் முன்னேயே காணாமல் போய்க் கொண்டிருக்கிறது.

யாரும் அவருக்கு எதிராக சதி செய்து விரட்ட வேண்டாம். அவருக்கு அவரேதான் எதிரி. இது போன்று இன்னும் 2 படங்கள் வந்தால்போதும். வடிவேலு வீட்டிலேயே அமர்ந்துவிடுவார் என்பதுதான் உண்மை.

இந்தப் படத்தில் பழைய ‘நாய் சேகரை’ பார்க்கலாம் என்று ஆசையுடன் ஓடோடி வந்த தனது ரசிகர்களுக்கு சொல்லவொணா துயரதத்தைத் தந்துள்ளார் வடிவேலு. முதல் பாதியில் ஒரு காட்சியில்கூட சிரிப்பு வரவில்லை. இரண்டாம் பாதியில் ஆனந்த்ராஜ் புண்ணியத்தில் சில காட்சிகளில் சிரிக்க முடிந்திருக்கிறது. அவ்வளவுதான். இது போதுமா ‘வைகைப் புயல்’ வடிவேலு அவர்களே..!?

கதையும், திரைக்கதையும் காமெடிக்கேற்ற சிச்சுவேஷனை உருவாக்காததால் வடிவேலுவின் வழக்கமான புதுமையான வசனங்களும், பன்ச் வசனங்களும் இதில் இல்லை. அவருடைய டைமிங்கான டயலாக் டெலிவரி மிஸ் ஆகியிருக்கிறது. காமெடியின் 90 டிகிரிக்கும் ஒரு பாடி லாங்வேஜ் வைத்திருப்பாரே.. அதுவும் மிஸ்ஸிங். இப்படி இந்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் வடிவேலு மொத்தமாக காணாமல் போயிருக்கிறார்.

ரெடின் கிங்ஸ்லி, சிவாங்கி, முனிஷ்காந்த் மற்றும் கேபிஒய் பாலா உட்பட சிலர் அவ்வப்போது அடித்துவிடும் டைமிங்கில்தான் கொஞ்சம் உதட்டைப் பிரித்து நகைக்க முடிந்திருக்கிறது. கிங்ஸ்லி வசனம் புரியாத பாணியிலேயே எப்போதும் பேசுவார். இதிலும் அப்படியேதான் நடித்துள்ளார்.

ராவ் ரமேஷ், ஷிவாங்கி, ஷிவானி நாராயணன், ஆர்.ஜே.விக்னேஷ், சஞ்சனா சிங், என்று இருந்த நடிகர், நடிகைகள் அனைவருமே இது காமெடி படம் என்பதைக்கூட மறந்தும் ஞாபகப்படுத்தவில்லை.

ஆனால் ஆனந்த்ராஜ் மட்டும்தான் தன் நடிப்பின் மூலம் நம்மைக் கொஞ்சம் சிரிக்க வைத்திருக்கிறார். ஆனந்தராஜ் கதைக்குள் வந்த பின்புதான் சோம்பல் முறித்து எழுந்து உட்கார முடிகிறது. அவரைக் குறி பார்த்து சுடத் தெரியாமல் நிஜமாகவே ‘குறி‘யைப் பார்த்து வடிவேலு சுட்டுவிட வீல் சேரிலேயே அலையும் ஆனந்தராஜின் நிலைமையைப் பார்த்தவுடன் சிரிப்பு வருகிறது.

அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியவுடன் வடிவேலுவை போட்டுத் தள்ள நினைக்க.. அதே நேரம் அவரிடத்தில் அடியாள் வேலை பார்த்தவர்கள் எல்லாம் ஆளுக்கு ஒரு வேலையில் செட்டில் ஆகியிருப்பதும்.. அவர்கள் அத்தனை பேரையும் வேனில் அழைத்துக் கொண்டு வடிவேலுவைக் கொல்வதற்காக ஹைதராபாத் புறப்படும் காட்சிகளில் மட்டும்தான் நிறையவே சிரிக்க முடிகிறது.

கடைசியாக வடிவேலுவை யார் கொல்வது என்பதில் ராவ் ரமேஷுக்கும் ஆனந்தராஜுக்கும் போட்டி வந்து இருவரும் ‘பஞ்ச்‘ டயலாக்குகளை பேசியே மாறி மாறி அடித்துக் கொள்வது மட்டும் ருசியான காட்சி..!

விக்னேஷ் வாசுவின் ஒளிப்பதிவு பரவாயில்லைதான். சந்தோஷ் நாரயணனின் இசையில் 2 பாடல்கள் கேட்கும் ரகம். மாண்டேஜ் காட்சிகளில்கூட சிரிப்பை வரவழைக்காமல் விட்டிருக்கிறார் இயக்குநர். ‘அப்பத்தா’ பாட்டு மட்டுமே ஹிட் ஆகியிருக்கிறது. பின்னணி இசையிலும் சந்தோஷ் நாராயணன் காமெடிக்கேற்ற இசையைக் கொடுத்திருந்தாலும் நடிப்பும், வசனமும் சரியில்லை என்பதால் அதுவும் வீணாகிப் போயிருக்கிறது. 

படத்தில் கொஞ்சம் கத்திரி போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். வடிவேலுவின் வீட்டில் செய்திருக்கும் உள் அலங்காரத்திற்காக கலை இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள்.

முனீஸ்காந்த் போலீஸில் என்னவாக இருக்கிறார். அவர் எதற்காக ஓட்டை அம்பாஸிடர், வேன், பஸ், லாரி என்று கடைசியாக நடராஜா சர்வீஸில் ஹைதராபாத் நோக்கி ஓடி வர வேண்டும்.? மொக்கையான கேரக்டர் ஸ்கெட்ச்சும், திரைக்கதையும் இவருடையதுதான்.

மொத்தத்தில், வடிவேலுவின் கம்பேக்குக்காக காத்திருந்த ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சுவாரஸ்யமான திரைக்கதையையும், குபீர் சிரிப்பு வரும் வசனங்களையும், பார்த்தவுடனேயே கை தட்ட வைக்கும் அளவுக்கான நடிப்பையும் இயக்குநர் சுராஜ் இந்தப் படத்தில் கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை. 

RATING : 2.5 / 5

- Advertisement -

Read more

Local News