“ரஜினிக்கு ஒரு நீதியா?” : விஜய் ரசிகர்கள் கொதிப்பு!

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள   ‘லியோ’ அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில்  வெளியாக உள்ளது.  படத்தில் இடம்பெற்றுள்ள ‘நான் ரெடி’ பாடல் அண்மையில் வெளியாகி 100 மில்லியன் பார்வைகள் பெற்றுள்ளது.

அதே நேரம், இப்பாடலில் சிகரெட் மற்றும் மதுவை ஊக்குவிக்கும் வகையில் வரிகள் இடம்பெற்றுள்ளதாக எதிர்ப்புகள் எழுந்தன.

அனைத்து மக்கள் கட்சியின் நிறுவனரான ராஜேஸ்வரி பிரியா என்பவர் இப்பாடலுக்கு எதிராக டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில் இப்பாடலில் இடம்பெற்றுள்ள சில வரிகளை சென்சார் வாரியம் நீக்கியுள்ளது. இது தொடர்பாக சென்சார் சான்றிதழ் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அப்பாடலில் இடம்பெற்ற ‘பத்தாது பாட்டில் நான் குடிக்க.. அண்டாவக் கொண்டா சியர்ஸ் அடிக்க’ என்ற வரியும், ‘மில்லி உள்ள போனா கில்லி வெளில வருவான்டா’ என்ற வரியும் நீக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் இப்பாடலில் விஜய் புகைப்பிடிப்பது போன்ற க்ளோசப் ஷாட்களும் நீக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. எனினும் இந்த பாடல் டிவியில் ஒளிபரப்பாகும்போது மட்டுமே இந்த நடவடிக்கை, பொருந்தும் என்று கூறப்படுகிறது. திரையரங்கில் இந்த வரிகள் இடம்பெறுமா இல்லையா? என்பது குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராஜேஸ்வரி பிரியா, “நான் ரெடியா பாடலில் வரிகளை மாற்ற உத்தரவு. நீதி வென்றுவிட்டது. தணிக்கை குழுவிற்கு மிக்க நன்றி. எனது புகாரை ஏற்று நான் எடுத்து கூறிய சமூகத்திற்கு எதிரான பாடல் வரிகள் நீக்கபட்டது. எமது சமூகப் பணியும் சட்டப் போராட்டங்களும் அடுத்த தலைமுறை நலனுக்காக தொடரும். உண்மை பணத்தைவிட வலிமையானது” என்று பதிவிட்டுள்ளார்.

இதனை பகிர்ந்து வரும் விஜய் ரசிகர்கள் பலரும் சமீபத்தில் வெளியான ‘ஜெயிலர்’ உள்ளிட்ட பல படங்களில் வரும் புகைப்பிடிக்கும் காட்சிகளை மேற்கோள்காட்டி அதனை ஏன் தணிக்கை குழு நீக்கவில்லை என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.