‘புலி முருகன்’ என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய இயக்குநரான வைசாக் இயக்கத்தில் மோகன்லால் நடித்து உருவாகியிருக்கும் படமான ‘மான்ஸ்டர்’ வரும் அக்டோபர் 21-ம் தேதி தீபாவளி வெளியீடாக உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
இந்தப் படத்திற்கான முன் பதிவு உலகம் முழுவதும் துவங்கியுள்ள மலையாள மக்கள் அதிகம் வாழ்ந்து வரும் அரபு நாடுகளில் இப்படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்தப் படத்தில் ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்த சில காட்சிகள் இருப்பதால்தான் இந்தத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக மலையாளத் திரையுலகத்தில் பேச்சு எழுந்துள்ளது.
படத்தின் நாயகனான மோகன்லால் இந்தப் படம் பற்றி ஒரு பேட்டியில் பேசும்போது, “மலையாள சினிமாவில் இது ஒரு துணிச்சலான முதல் முயற்சி என்றே சொல்லலாம்…” என்று படம் குறித்து மறைமுகமாக பேசியிருந்தார்.
தற்போது இந்த படம் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளதால் அரபு நாடுகளில் இந்தப் படத்திற்காக ஏற்கனவே முன் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை, நிவின் பாலி நடிப்பில் அதே தேதியில் வெளியாக இருக்கும் ‘படவேட்டு’ படத்திற்காக மாற்றியிருக்கிறார்களாம்.
இன்னொரு பக்கம் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து இந்தப் படத்தை மறு சென்சார் செய்து படத்தை வெளியிடுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.